ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 9 அக்டோபர், 2008

என் முடிவு


நாளை நான் இறந்து விடுவேன்.....
முற்றத்து மல்லிகையும் வேலியோரத்து
செவ்வரத்தையும்....
வழமை போல் பூக்கத்தான் போகின்றன...
ஆனாலும்... நான் அறிய மாட்டேன்....

மரண ஓலம்
வீட்டை நிறைக்கும்....
“பொடி எப்ப எடுப்பினம்” அன்புடையோரின்
அக்கறையான விசாரிப்புகளும் 
அடிக்கடி நடக்கும்.....
இதுவும் நான் அறிய மாட்டேன்.....

மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்
தூக்கணாம் குருவியும் ஒரு கணம்
எட்டிப் பார்த்துச் செல்லும்...... மறந்து விடும்...
உறவுகள் அழும்......

ஒன்று... இரண்டு.... மூன்று மாதங்கள்
முழுசாய் ஓட.... என் முகமும்
மறந்து விடும்.....

கொஞ்சம் கொஞ்சமாய்.....
சுவரில் சித்திரமாய்.....
என் படமும் ஏறிவிடும்.....
இவையும் நான் அறிய மாட்டேன்....

ஒரு வருடம் ஆகிவிட்டால்....
எல்லோரும் எனை மறந்திடுவர்..... என்
பெயர்கூட மறந்திடுவர்

ஆனாலும்
எனக்காக
எங்கோ தொலை தூரத்தில்....
ஆத்மார்த்தமாய்...
இதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர

ஒரே ஒரு ஜீவன் மட்டும் எப்பவும்
அழுது கொண்டிருக்கும்....
அது மட்டும் நான் அறிவேன்.....

புதன், 24 செப்டம்பர், 2008

கண்ணீர் மட்டும் தானா?

நீ
நிலைத்திருக்கும் நிஜம் என்று
நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும்
கனவாகிப் போனாய்....

ஒருமுறை வந்த கனவு
என்றும் மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும்
ஆடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது
கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று
உணர்த்தியது உன் வார்த்தைகள்!

ஏனடி  என் கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடி கலைந்து போகிறாய்..???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம்
காதல் கொண்டு
ஆதில் எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!

ஏழு நாள் வாழும் பட்டாம்பூச்சிக்குக் கூட
ஆதன் வாழ்க்கையை ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும்
இந்தத் தண்டனை எதற்காக..........??

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு
விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை
விரியும் போதெல்லாம்
இதயம் ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள்
என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும்
அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

ஏத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல் விட்டுச் சென்ற
உன்னை  நினைத்து வேதனைப்படுவது
முட்டாள்த் தனம் என்று தெரிகிறது!

ஆனாலும் அந்த முட்டாளத் தனத்தை
சேய்யாமல் இருக்க
இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

ஏன் வேதனைகளைக் கொட்டி
எழுதிய கவிதைகளைக் கூட
பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால்
எனக்காகக் கண்ணீர்
சிந்தக் கூடாது என்பதற்காக............


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008

எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு?




என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?


நீயில்லாத நாளில்...



நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....

நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...

நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்

முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...

உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..

உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.

ஒருவேளை...

உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...

தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே

மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....

உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்




நீயும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?
சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு
நம்மைப் பற்றியதாகக்கூட
இருக்கலாம்!

உண்மை சொல்!

உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது!