ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

அன்று குத்தியதும் அதே முள், இன்று குத்தியதும் அதே முள்



புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

"என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.

தவளைக்குக் காது கேட்காது




ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் "தாவு" என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.

ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.

அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.

கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.

நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,

"நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது"

இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.

புத்தகத்திற்குள்



அமெரிக்க நாவலாசிரியை அன்னா பாரிஷ், ஒரு சமயம் தனது கணவருடன் ஒரு பழைய புத்தகக்கடையில் இருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 'ஜேக் ஃப்ராஸ்ட் மற்றும் சில கதைகள்' என்ற புத்தகம் கைக்குக் கிடைத்தது. அதை எடுத்துத் தனது கணவரிடம் காண்பித்து, தான் சின்னவயதில் ஆசையோடு அந்தக் கதைப் புத்தகத்தைப் படித்ததாக சொன்னார்.

அவரது கணவர் அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கி முதல் பக்கத்தைத் திருப்பினார். அதிசயம்! அதில் முதல் பக்கத்தில் அன்னா பாரிஷின் பெயர், பழைய விலாசம் எல்லாம் இருந்தது. அந்தப் புத்தகம் அவர் படித்த அதே புத்தகம்தான்!

இரட்டை விபத்துக்கள்




ஒன்றாகப் பிறந்த இரட்டைச் சகோதரர்கள் 2002ம் ஆண்டு சிலமணி நேர இடைவெளியில் ஒருவருக்குப் பின் ஒருவராக இறந்து போனார்கள். இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? அவர்கள் இருவருமே ஃபின்லாந்தின் வடக்குப்பகுதியில் ஒரே சாலையில் வெவ்வேறு விபத்துகளில் இறந்துபோனதுதான் ஆச்சரியமான செய்தி.

இரட்டையரில் முதல் சகோதரன் ஃபின்லாந்தின் தலைநகரிலிருந்து அறுநூறுமைல் தூரத்தில் இருந்த ராஹே என்னுமிடத்தில் தனது பைக்கில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதி இறந்தான். அதற்கு 1.5 கிலோமீட்டர் தூரத்தில்தான் அவனது சகோதரனும் விபத்தில் இறந்திருக்கிறான்.

'இதுமாதிரி சம்பவம் இதுவரை நடந்ததே இல்லை. இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் போனாலும் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதில்லை' என்று சொல்கிறார் அங்கிருந்த போலீஸ் அதிகாரி. இறந்தவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்று அறியும்போது இந்த சம்பவம் மயிர் கூச்செறிய வைக்கிறது. எல்லாம் மேலே இருக்கும் அவன் செயல்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது எனச் சொல்கிறார் அவர்.

ஒரே ஒரு கேள்வி




மிகவும் சமத்தான பையன் ஒருவன் நேர்காணலுக்குச் சென்றபோது, அவனை நேர்முகம் செய்தவர் சற்றே கர்வத்துடன் கேட்டார்.

"உனக்கு சுலபமான 10 கேள்விகள் கேட்கலாமா அல்லது கடினமான ஒரே கேள்வி கேட்கலாமா?"

மாணவன் சற்றே கர்வத்துடன் சொன்னான், "கஷ்டமான ஒரே கேள்வி கேளுங்கள்"

"வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன?"

"3000 மில்லியன் பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன" என்றான் இமை கொட்டாமல்.

அவர் கேட்டார், "அதெப்படி சொல்கிறாய்? உன்னால் நிரூபிக்க முடியுமா?"

அவன் அமைதியாகச் சொன்னான் "நீங்கள் ஒரே ஒரு கேள்விதானே கேட்க ஒப்புக்கொண்டிர்கள்?"

நேர்முகம் செய்தவர் ????????

கொல்லாமல் விடமாட்டேன்



இது 1883ம் ஆண்டு நடந்தது. ஹென்றி ஜீக்லண்ட் என்பவன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கடைசியில் கை விட்டு விட்டான். மனமுடைந்த அவள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் கோபமடைந்த அவளது சகோதரன் தன் சகோதரியின் காதலனைக் கொன்றுவிடுவது என்று தீர்மானித்தான். அவனைத் தேடிப் பிடித்துத் துப்பாக்கியால் சுட்டான்.

அவன் இறந்துவிட்டான் என்று சகோதரன் நினைத்துத் தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அந்தக் காதலன் இறக்கவில்லை. சகோதரன் சுட்ட குண்டு காதலனின் முகத்தை லேசாக உரசிச் சென்று அருகிலிருந்த மரத்திற்குள் பாய்ந்துவிட்டது.

பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் காதலன் ஜிக்லண்ட் குண்டு பாய்ந்திருந்த அந்த மரத்தை வெடிமருந்து வைத்துத் தகர்க்க தீர்மானித்தான். அந்த வெடிமருந்து வெடித்தபோது மரத்தில் தங்கியிருந்த குண்டு சிதறி ஜீக்லன்டின்
தலைக்குள் பாய்ந்தது. அந்த இடத்திலேயே அவன் மரணமடைந்தான்.

சகோதரன் அன்று கொல்ல முடியாததை மரம் நின்று கொன்றுவிட்டது!

ஒற்றுமையோ ஒற்றுமை!




இத்தாலியிலுள்ள மொன்சா என்னுமிடத்தில் அரசன் முதலாம் உம்பர்டொ, அவரது துணையுடன் ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றார். அங்கு சாப்பிடும்போது அந்த ஹோட்டல் சொந்தக்காரரும், தானும் உருவ ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்தார். இதைப்பற்றி அதிசயத்துடன் அவர்கள் பேசிக்கொண்டபோது அவர்களுக்குள் இன்னும் பல ஒற்றுமைகளை அறிய முடிந்தது.

1. இரண்டு பேருடைய பிறந்த தினமும் ஒன்று. (மார்ச் 14, 1844)

2. ஒரே ஊரில் பிறந்திருந்தார்கள்.

3. இரண்டு பேருடைய மனைவியரின் பெயரும் மார்கரீடா.

4. அரசன் உம்பர்டூ அரசனாகப் பதவியேற்ற அதே நாளில்தான் அந்த ஹோட்டல்காரரும் தனது ஹோட்டலைத் துவங்கினார்.

5. 29 ஜூலை 1900 அன்று ஹோட்டல் சொந்தக்காரர் மர்மமான முறையில் துப்பாக்கி சூட்டில் உயிர் துறந்தார் என்ற செய்தி அரசருக்கு வந்தது. அவர் அந்த இறப்பிற்கு வருத்தம் தெரிவிக்கும்போதே கூட்டத்திலிருந்த ஒரு கொடியவன் அரசனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டான்.

கதையல்ல, நிஜம்!




எட்கர் ஆலன் போ என்ற பிரபலமான நாவல் ஆசிரியர் ஒருமுறை 'ஆர்தர் கார்டன் பின்னின் கதை" என்ற புத்தகத்தை எழுதினார். அதன் கதை ஒரு கப்பல் விபத்தில் சிக்கித் தப்பிய நால்வரைப் பற்றியது. அந்தக் கதையின்படி காப்பாற்ற யாருமில்லாமல் வெகு நாட்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நான்கு பேரில் மூவர் உணவுக்குக் கூட வழியில்லாமல் அந்தக் கப்பலின் ஊழியனான ஒரு சிறு பையனையே கொன்று உணவாக்கிக் கொண்டனர்.


1884ம் ஆண்டு உண்மையிலேயே Mignonette என்ற ஒரு கப்பல் கவிழ்ந்தது. அதிலும் நான்கு பேர்தான் உயிர் பிழைத்தனர். கதையில் வந்தது போலவே அந்த நால்வரில் மூவர் கப்பல் கடைநிலை ஊழியனைக் கொன்று பசியாறினார்கள். இதில் இன்னொரு அதிசயம், இறந்துபோன அந்த ஊழியனின் பெயர் கதையில் இருந்தது போலவே நிஜத்திலும் ரிச்சர்ட் பார்க்கர் என்பதுதான்!

குடிச்சாப் போகுமா துக்கம்?



குடிப்பழக்கம் உள்ளவர்களிடமெல்லாம் காரணம் கேட்டால் கவலையை மறக்கக் குடிப்பதாகக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் குடிப்பதால் கவலை அதிகரிக்கத்தான் செய்யும் என்கிறது ஓர் ஆய்வு.

இரு பிரிவு எலிகளை இதற்காகத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு லேசான அளவில் மின் அதிர்வு தரப்பட்டது. அதன் பிறகு ஒரு பிரிவு எலிகளுக்கு 'எத்தனால்' (சாராயம்) கொடுத்துக் கண்காணித்தார்கள். இன்னொரு பிரிவிற்கு 'எத்தனால்' செலுத்தவில்லை. 'எத்தனால்' செலுத்தப்பட்ட எலிகளுக்கு மதுவில் இருக்கும் போதைத்தன்மை நரம்பிலேயே தங்கிவிடுகிறது.

பய உணர்வு இருந்தால் அது நீங்க இரு வாரங்கள் ஆகின்றன. அதிர்ச்சி நீங்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் 'எத்தனால்' செலுத்தப்படாத எலிகள் அதிர்ச்சியிலிருந்து விரைவில் மீண்டுவிடுகின்றன.

மனிதர்களிடம் சோதனை செய்தபோது கவலையைப் போக்குவதற்காக மது அருந்துவோர் அந்தக் கவலையில்தான் அதிகம் மூழ்குகின்றனர். தாங்கள் விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காகக் குடிப்பதாகச் சொல்லப்படும் மது அந்த விஷயத்தை நீண்ட காலம் நினைவில் நிறுத்துகிறது என அறிய வந்தது.

குரங்குகளின் குரல்




பேச்சு என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? குரங்குகளால் பேச முடியாதா? ஜெர்மன் குழுவினர்கள் இப்படி ஒரு ஆராய்ச்சி நடத்தினர்.

ஆசிய குட்டைவால் குரங்குகளைக் கொண்டு பல்வேறு ஒலிகளை எழுப்பி அவற்றை குரங்குகள் உணர்கின்றனவா என்று சோதிக்கப்பட்டது. அப்போது மனிதர்களைப்போலவே குரங்குகளுக்கும் மூளையில் ஒலிகளை உணரும் பகுதி இருப்பது கண்டறியப்பட்டது.

ஒலியின் தன்மைக்கேற்ப மூளையில் ஏற்படும் மாற்றங்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் உறுதி செய்தார்கள். இதனால் குரங்குகள் தங்கள் இனத்துடன் பல்வேறு ஒலி சமிக்ஞை மூலம் பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் கண்டு கொள்கின்றனவாம். ஆனால் இவைகளால் பிற விலங்குகள், பூச்சிகள், இடி மழையின் ஒலிகளைத் துல்லியமாக அறிய முடிவதில்லை.

இந்த ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்குக் குரல் இழப்பு, செவித்திறன் இழப்புக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

ஆவி பேய் பூதம்




இரவில் தனியாக சாலையில் நடந்து செல்வதென்றாலே ஒருவித பயம். படித்த பல பேய்க்கதைகள் நினைவிற்கு வந்து சங்கடம் செய்யும். ஏன் இரவில்தான் பேய் வர வேண்டும்? பகல் என்றால் பேய்களுக்கு பயமா? இப்படி ஒரு ஆராய்ச்சி.

உண்மையில் அப்படியில்லையாம். மனிதர்களுக்குத்தான் இருளைக் கண்டால் மனபிராந்தி ஏற்படுகிறதாம். இதை அறிவியல் பூர்வமாக லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு நிரூபித்துள்ளது.


இருள் சூழ்ந்திருக்கும்போது நிழலைப் பார்த்து இல்லாத ஒரு உருவத்தை மூளை உருவாக்கிக்கொள்கிறது. கண்களால் காணும் காட்சி முழுமையாக மூளைக்குச் செல்வதற்குள் ஏற்படும் மாயத்தோற்றம் இது. இருளில் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு பந்துகளை வீசச் செய்தபோது வீசப்படாத மூன்றாவது பந்து ஒன்றும் வந்து மறையும். இது கண்களையும் மூளையையும் ஏமாற்றும் செயல்.

உண்மையில் பந்து வீசப்படாதபோது அப்படி ஒரு பந்து வீசப்பட்டதாகவும் வீசப்பட்ட பந்து மற்ற இரு பந்துகளைப்போல மறைந்து விடுவதாகவும் மனது உருவகப்படுத்திக் கொள்கிறது. கம்ப்யூட்டர் மூலமாகவும் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டர் திரையின் மத்தியில் 80 மில்லி விநாடிகள் மட்டுமே தோன்றும் சிறிய பழுப்பு நிறத்திலான முக்கோணம் இன்னொரு அறையில் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சோதனையின்போது உண்மையில் திரையில் தோன்றிய முக்கோணத்தைவிட அதிக எண்ணிக்கையில் முக்கோணங்களை அடுத்த அறையில் இருந்த விஞ்ஞானிகளின் மூளை பதிவு செய்தது தெரியவந்தது.

இதன்மூலம் ஒளியில்லாத இடங்களில் காணப்படும் காட்சிகள் மூளையை ஏமாற்றும் வகையில் தோன்றுகின்றன. இதைத்தான் பேய் என்றும் ஆவி என்றும் மூளை கற்பனை செய்துகொள்கிறது எனச் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அளந்து சிரியுங்க..



வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் வாய் விட்டு மனதாரச் சிரிக்கிறோம்? வெறுமனே ஒரு மென்னகையோடு, எங்கே இதற்குமேல் சிரித்தால் காசு போய்விடுமோ என்பது போலச் சிரிக்கிறோம்.

ஜப்பான் நாட்டு மனோதத்துவப் பேராசிரியர் யோஜி கிமுரோ சிரிப்பை அளப்பதற்கு ஒரு டிஜிடல் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அவர் சொல்கிறார், "வாயாற வயிறு குலுங்கச் சிரித்தால்தான் அது இயல்பான சிரிப்பு.

சிரிக்கும்போது பல முறை 'ஹாஹ் ஹாஹ்' என்ற சத்தம் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக இந்த சத்தம் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால் மின்னதிர்வுகள் உடலில் பரவி சுரப்பிகள் இயங்கும் திறன் அதிகமாகும். ரத்த ஓட்டம் சீராகும். இதயத்துக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள தசைகள் (உதரவிதானம்) முழு வேகத்தில் புத்துணர்ச்சி பெறும்".

குறிப்பிட்ட அளவு 'ஹாஹ் ஹாஹ்'கள் நம்மிடமிருந்து வெளிவரும்போது ஏற்படும் மின்னதிர்வுகளை இவர் கண்டுபிடுத்துள்ள டிஜிடல் கருவி அளவிடுகிறது. நகைச்சுவை உணர்வே இந்த மின்னதிர்வுகளை ஏற்படுத்தி மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும்.

அப்புறம் என்ன? 'ஹாஹ் ஹாஹ்' என்று சிரிக்க வேண்டியதுதானே! (தனியாக மட்டும் சிரிக்காதீர்கள்! வேறுமாதிரியாக நினைத்துக்கொள்ளப் போகிறார்கள்!)