ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 3 ஜூலை, 2008

ஊரிலை மட்டுமில்லை..

அண்மைக் காலங்களில் அதிகமாக எம்மிடையேயான பெரும் தலைவலியான விடயங்களாக தென்னிந்தியத் தமிழ்ச்சினிமாவும், வருடக்கணக்கில் இழுபட்டு அரைத்தமாவையே திருப்பித் திருப்பி அரைத்து அலுப்பையும் ஆளுமைகளைத் தகர்த்துவிடுகிற போதைவஸ்தாகவும் எம்மை ஆளுகின்ற சின்னத்திரைத் தொடர்கள் என்பனவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாயகத்திலிருந்து வெளியாகிய பல கட்டுரைகளிலிருந்து எங்கள் கிராமங்கள் வரையும் சினிமா, சின்னத்திரையின் ஆதிக்கம் என்பன எத்தகைய தாக்கத்தை நமது சமூகத்தில் பரவிவிட்டுள்ளது என்பதற்கு ஆதார சாட்சிகள் கிடைக்கின்றன.

அண்மையில் எழுத்தாளர் குந்தவை அவர்கள் எழுதிய கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் முதல் தமிழர் தாயகப் பிரதேசங்கள்வரை சின்னத்திரை நாடகங்களும், சினிமாப்படங்களும் எத்தகைய ஆளுமைகளைச் செலுத்துகின்றன என்பதனை மிகுந்த வேதனைகளுடனும் அனுபவப்பதிவுகளுடனும் பலவிடயங்களைச் சாட்சியப்படுத்தி எழுதியிருந்தார் குந்தவை அவர்கள்.

அக்கட்டுரையில் தமிழர் தாயகத்தில் ஆளுமை கொண்டுள்ள ஒளியுணர் சாதனத்தின் சீர்கேடுகளும் கணணியின் பயன்பாடு, அதன் தேவை தெளிவு நன்மைகளையெல்லாம் மறந்து வீசீடியிலும், டிவிடியிலும் திரைப்படம் மட்டுமே பார்க்கவும் பயன்படுத்தப்படும் கணணிகளின் பாவனைகள் பற்றியெல்லாம் கூறியிருந்தார் குந்தவை. அவர் கூறிய அதே நிலையில் புலத்துத் தமிழர்களும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அமிழ்ந்து போயுள்ள அவலத்தை எழுதென்ற உந்துதல் இந்தக் கட்டுரைக்குள் கால் பதிக்கக் காரணமாகிறது.


முன்பு, அதாவது தாயகத்தில் இருந்த காலங்களில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சினிமாவின் வெற்றியைத் தீர்மானிப்பது பெண்கள் என்று. அப்போது அதன் விளக்கம் புரியாத புதிராகவே இருந்துவிட்டது. கடந்த எட்டு வருடங்களுக்குள் தொடர்ந்த தொலைக்காட்சி, வானொலிகளின் வருகையானது அன்றொருநாள் சொல்லக் கேட்ட சினிமாவின் வெற்றியின் பெண்களின் தீர்மானம் என்பதன் பொருள் இன்று நன்றாகவே புரிந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு புலத்திலும் பெண்களும், இளைஞர்களும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புகுந்து வெளியுலக வாசிப்பையோ, அறிதலையோ பெற்றுக் கொள்ளாது அல்லது விரும்பாது சினிமாவும், சின்னத்திரை நாடகங்களுமே அவர்களது கனவாகவும், காத்திருப்பாகவும் போயிருக்கின்ற அவலமானது நமது எதிர்காலச் சந்ததியின் இருப்பையே நெருப்பிடும் நிலையில் இருப்பது வேதனையன்றி வேறாக முடியாது.

இந்த அவலத்துக்குள்ளிருந்து நம்மத்தியில் பாட்ஷாக்களும், பாபாக்களும், தீனாக்களும், திருப்பாச்சிகளும், சச்சின்களும், கட்சிகள் அமைக்கும் அளவுக்கு நடிக நடிகையரின் பெயர்களில் சண்டைக் குழுக்களும் உருவாகி வெள்ளையர்கள் மத்தியில் தமிழரென்றால் மனநலம் குன்றிய, சிந்திப்புத் திறனை இழந்த வன்முறையாளர்கள் எனுமளவிற்கு தமிழரின் நிலைப்பாடு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

சினிமாவில் வரும் கதாநாயகர்கள் போன்ற நடை, உடை, பாவனைகள் மாற்றம் பெற்று வெட்டும், கொத்துமே பதில்களாகவும் பதியமிடல்களாகவும் ஆகிவருகிறது. இத்தகைய சினிமாவின் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சிறுதொகையை மட்டுமே காணமுடியும்.
'சினிமாவில் நல்லதை எடுத்து கெட்டதை விடுங்கோ' என்ற வாதங்களும், 'மக்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்கிறோம்' என சினிமா வட்டாரத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரும் தங்களது பணப்பைகளின் நிரப்புதலுக்கான சாட்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருப்பதும் காதுகளில் எட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதையம்சம், யதார்த்தம், நடைமுறைகளுக்கு உட்பட்டும் அப்பப்போது ஒருசில படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எனினும் 100இற்கு 95 படங்கள் பெண்களை உரித்துப்போட்டு குளோசப்பில் பெண்ணை அமுக்கிப் பெண்ணின் அங்கங்களே அங்கு ஆதாரமாக அவர்களது மூலதனமாகவும் விற்கப்படுகிறது. இதில் கதாநாயகர்களின் 100பேரை அடிக்கும் வல்லமையும், சண்டியத்தனம் மிக்க சண்டியர்களுமே திரைப்படங்களை ஆளுமை செய்யும் ஆதாரங்களாக இருக்க, நல்லதை எடுத்து கெட்டதை எந்தக் கருவி கொண்டு தவிர்ப்பது?

இந்தச் சண்டியர்கள் போல தங்களையும் உருவாக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்து போய் சிறைகளிலும், அங்கங்களை இழந்தும், மனநோயாளிகளானவர்களையும் கண்ணூடு பார்த்தும் அப்படித் தங்கள் வாழ்வை அழித்தவர்களின் நிலையின் உணர்வுகளின் உள்வாங்கலாகவும் இந்த வியாபாரச் சகதிக்குள்ளிருந்து விடுபடுதலுக்கான வழிகளை நமது ஊடகங்கள் நடைமுறைப்படுத்தலே சாலச் சிறந்ததாகும்.
கடந்த வருடம் நண்பரொருவர் பிரான்ஸ் லாச்சப்பலுக்குச் சென்று 3ம் நாளே திரும்பி வந்து சொன்ன சோகம் இது,

லாச்சப்பல் பகுதியில் கடையொன்றுக்குச் செல்லும் வழியில் நான்கு இளைஞர்கள் நின்றார்கள். அவர்களை இந்த நண்பர் ஊரில் அறிந்திருக்கிறார். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தியிருக்கிறார். கடையிலிருந்து வெளியில் வந்து சற்றுத் தூரத்தில் அந்த இளைஞர்கள் இவரைக் கூப்பிட்டு 'என்னத்துக்கு எங்களைப் பாத்துச் சிரிச்சனீ?' 'உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் இன்னாற்றை மகனெல்லோ' என அவர் கூறிமுடிக்க முதல் காதைப்பொத்தி அவருக்கு விழுந்த அடிக்கு அவரால் இன்னும் காரணம் காண முடியவில்லை.

பிரான்ஸ் பொலிசாரின் வடிகட்டலில் தற்போது இத்தகைய நடப்புக்கள் 90 விகிதம் குறைந்திருப்பினும் ஆங்காங்கு இத்தகைய அடிகள் விழுந்து கொண்டுதானிருக்கிறது. தற்போதைய பிரான்ஸ் நாட்டின் கடுமையான சட்டமானது இத்தகைய அடாவடித்தனங்கள் புரிவோருக்கு சட்டத்தால் சுருக்கிட்டிருப்பது நிம்மதிதான். லண்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் சட்டமும் இத்தகைய வன்முறையாளர்களை வடிகட்டுதலில் சற்று அக்கறையின்மையாக இருப்பது பல்வகையான சிக்கல்களை, சமூகச் சீர்கேடுகளை நமது இளையவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

2002 லண்டன் சென்ற போது இலக்கியத் துறைக்குள்ளிருக்கும் ஒருவர் வேதனையுடன் தெரிவித்த சம்பவம். சவுத்தோல் பகுதியில் நடந்த விடயமது. இந்த அன்பர் தமிழ்க் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தமிழர் கடைகள் நெருங்கிய பகுதியொன்றின் வீதிக்கடவையில் 17 வயது மதிக்கத்தக்க யுவதியொருத்தி நிற்கிறாள். அவளைச்சுற்றி ஒரு இளைஞன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சினிமாப்பாடலொன்றைப் பாடி அவளைக் கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருக்க அவனுக்குத் துணையாக ஒருவன் துணை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தானாம். அந்த யுவதி சிரித்தபடி தெருக்கடவையைக் கடந்தாளாம். இந்தத்திருவிளையாடலைப் பார்த்திருந்த இந்த நபர், 'ஏன் தம்பி உப்பிடி ஆடிக்கொண்டு றோட்டிலை நிக்கிறீர் ? காதல் உதில்லை'யென விளக்கம் சொல்ல வெளிக்கிட, துணையாக ஆடியவன் வாளோடு வந்து, 'என்ன தேவைப்படுது?' என்றானாம்.

தப்பினது புண்ணியம் என அந்த நபர் இதுபற்றிச் சொன்னபோது சிரிப்பை உதடுகளுக்குள் புதைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, அவர் சொன்னார் 'தீனாவிலை அஜித் வந்தமாதிரியிருந்தது அவன்ரை வருகை'. இவை சில உதாரணங்களே. இன்னும் பல்லாயிரம் கதைகள் இந்தப்புலத்து நிலத்திலும்.
இளைஞர்கள் நிலை இப்படியிருக்க பெண்களின் நிலை இன்னும் ஒருபடி மேலாகவே இருக்கிறது. சின்னத்திரையே இவர்களது சீவனாகி சீனிவருத்தம், கொழுப்பு, உடற்பருமன் என நோய்களையும் வாங்கி நோயாளிகளாகவும் பலர். பெண்கள் பற்றிய கருத்தியலானது சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒரேவகைதான்.

சினிமாவில் இரண்டரை மணித்தியாலத்தில் சொல்லிவிடும் விடயத்தை சின்னத்திரை 2-3 வருடங்கள் வரையும் இழுத்தடித்து பெண்ணின் வாழ்வு , வரைமுறையென்பது சமய, சம்பிரதாய, பிற்போக்குத்தனம் மிக்க அடையாளங்களை மட்டும் பிரதிபலிப்பதாகவும், பொறுமை, பூமிக்குப் பெண் சமானம் என்ற கருத்துக்களையே விதைத்துவிட்டு முடிவுகளைக் கொடுத்து விடுகின்றன. இதுவே தமது வாழ்வாக, வரைமுறையாக இந்த நூற்றாண்டிலும் கணிசமானளவு பெண்கள் இத்தகைய கட்டுப்பெட்டித் தனங்களுக்குள் முடங்கி தங்கள் பலத்தையே சின்னத்திரையென்ற சிறுகாட்சிப் பெட்டிக்குள் அழித்து விடுவது மட்டுமல்ல இவர்களது குழந்தைகளுக்கும் இதேபாடத்தையே ஒப்புவித்து எங்கள் இளைய தலைமுறையின் பெண்பிள்ளைகளையும் இன்னொரு நூற்றாண்டு பின்தள்ளியே வைத்து விடுகிறார்கள்.

தாவணிக்குள் தமிழ்க் கலாசாரத்தை தப்பாமல் போதித்துவிடும் எங்களது தாய்மார்களும், தந்தையர்களும் இங்கு பாடசாலைகள் ஊடாக சுற்றுலாச் சென்றாலோ, மேற்படிப்புக்குத் தூர இடம் சென்றாலோ கெட்டுப்போய் விடுவார்கள் என்ற உணர்வுடன் பெண்பிள்ளைகளின் ஆளுமைகள் மழுங்கடிக்கப்படவும் வழிகோலுகின்றது. இத்தகைய செயற்பாட்டில் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய பல பெண்பிள்ளைகள் ஊரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆண்களுக்கு மனைவிகளாகி அம்மாவின் வழியில் மகளும் சண்தொலைக்காட்சிக்கும் தீபத்துக்கும் தீனியாகி விடுகிறார்கள்.

காசைவாங்கி திரையில் நடிக, நடிகையர்கள் அழுதுவிட்டுப் போக இவர்களோ காசைக்கொடுத்து அழுவதும் அதுவே தங்கள் வாழ்வாகவும் வரித்து, இந்த உலகின் இவர்களால் செய்யப்பட அறியப்பட வேண்டிய எத்தனையோ நல்லவைகள் அறியப்படாமலும் செய்யப்படாமலும் போய்விடுகிறது.
எமது பெற்றோர்கள் போதித்த தாவணிக்குள்ளான தமிழ்ப்பண்பாடு என்ற போதனையைக் கூட தளர்த்திவிட்டு ஒருபகுதி 'மன்மதராசாவுக்கும், ஈராக்கு யுத்தம், மேமாதம் 98இல் மேஜர் ஆனேனே...." இப்படி நிறையவே பெண்பற்றிய பச்சையான கொச்சைப் பாடல்களுக்கெல்லாம் சினிமாவில் எப்படி ஆடினார்களோ, அதேபோல் மேடைகளில் ஆடவைத்து மகிழ்வதில் அலாதிப்பிரியர்கள். கேட்டால் சொல்கிறார்கள். நாங்கள் இசையை ரசிக்கிறோம் அதில் என்ன தவறு? பாடசாலையுடன் சுற்றுலாச் சென்றால், மேற்படிப்புக்குத் தூரநகரம் சென்றாலோ அழிந்து போகுமென இவர்கள் அஞ்சும் தூய்மையானது இந்த மன்மதராசா ஆட்டத்தில் மாசுபட்டுப் போகாதா?

இந்த நாடுகளில் வயது வந்தோர்க்கு மட்டுமென்று குறிப்பிட்ட படங்களை வெளியிடுவார்கள். இத்தனை வயதுக்குக் குறைந்தவர் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. ஒளிநாடாக்களை வாங்கமுடியாது என்று விதிக்கும் தடைகளை இந்த நாட்டு ஊடகங்கள் தாண்டுவதில்லை. இதில் எங்காவது சில இடங்களில் மீறல்கள் நடந்திருக்கின்றன. இத்தகைய படங்கள் சிறுவர்களுக்கான நேரங்களில் ஒளிபரப்பப்படுவதில்லை.

எமது தமிழ்த் தொலைக்காட்சிகளோ இந்த வரையறையைக்கூடப் பின்பற்றுவதில்லை. எல்லா நேரமும் சின்னத்திரை நாடகங்கள், சினிமாப்படங்கள், பாடல்கள் என ஓயாது ஒளிபரப்புக்கள்தான். காலையில் விருப்பத்தேர்வு முதல் மாலை இரவுவரையுமான பாடல் தேர்வுகளை 5வயது 6வயது பிள்ளைகளே கேட்கவும் அதை ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களும், எனது மகன் மன்மதராசா கேக்காட்டில் சாப்பிடவே மாட்டார் என்ற வழிசல்களும், உங்கடை குரலைக் கேட்டிட்டுச் சமைப்பமெண்டு வந்தனான் என்ற கொஞ்சல்களும் வீட்டில் இருக்கும் குழந்தை, துணை, உறவுகள் என்ற எவருமே நினைவில் நிற்காது ஒளித்திரையிலும், வானலையிலும் ஒலிக்கும் குரல்களுக்கு அடிமையாகி எத்தனையே குடும்பங்களின் ஆண், பெண் இருபாலரது 35ம் 40ம் தாண்டிய காதல்களால் எங்கள் இளம் தலைமுறையின் நிம்மதி எதிர்காலம் எல்லாமே சூனியமாகிக் கிடக்கிறது.

தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி போட்டி போட்டு என்னைவிடு உன்னைவிடு எனும் கணக்கில் இந்தியாவிலிருந்து இறக்கி எங்கள் இனத்துக்குத் தருகின்ற சினிமாவின் தரம் மீளாய்வு செய்யப்படுவதும், சின்னத்திரைகளின் வருகையை மட்டுப்படுத்தலிலும் எங்கள் ஊடகங்களின் ஆதாரபுள்ளிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

நல்ல திரைப்படங்களை, எங்களது வெளியீடுகளை அதிகம் இறக்குமதி செய்து எங்கள் மண்ணுக்குள்ளிருந்து வருகின்ற படைப்புக்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். எமது தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள் எங்களது வாழ்வுப் போரை, சந்ததிப்போரை, நமது விழுமியங்களை, எதிர்கால வாழ்வுடனான போராடி வெல்லும் பலத்தைக் கொடுப்பதற்கான நிலங்களாகட்டும். இல்லை மக்கள் விரும்புவதைக் கொடுக்கிறோம் இந்தச் சினிமாவினதும், சின்னத்திரையின் வருகையுமே எங்களது அடையாளங்களைப் பேணுகிறது என்றெல்லாம் தத்துவம் பேசி எங்கள் இளையோரை, பெண்களை இருளுக்குள் தள்ளி உங்கள் உண்டியல்களின் பெருக்கத்தில் மட்டுமே கவனமாக இருப்பதினால் உங்களது பணத்தின் இலக்கையே எட்ட முடியும். எமக்கான எந்தவொரு சிறப்பையும் தந்துவிட முடியாது.

கண்கெட்ட பின் சூரிய வணக்கம் வேண்டாம். இன்றே காரியம் அதில் கவனமாக உங்கள் கவனம் திரும்பட்டும். உங்கள் தார்மீகக்கடமை எதுவென்பதை உணர்ந்து செயற்படுவது எங்களது மேன்மைக்கு உயர்வு தரும் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.

எழுதியவர் சாந்தி ரமேஷ் வவுனியன்

கை நழுவிச் செல்லும் இந்திய ஆதிக்கம்


இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள விசித்திரமான நிலை குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் முக்கியத்துவமானது, பிராந்தியச் சமநிலையின் அடிப்படையில் நோக்கப்படும் அதேவேளை, சமநிலை பேண விழையும் பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் புதிய கூட்டுக்களின் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஆனாலும், கேந்திர முக்கியத்துவமிக்க இப்பிராந்திய மையத்தில், சமநிலை பேணும் முன்னுரிமையை, எவ்வளவு காலத்திற்கு முதன்மைப்படுத்த முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியக் கொல்லைப்புறத்தில் சீனாவின் நகர்வுகள் பற்றியும் பேசப்படுகிறது.தாம் நிர்மாணிக்கும் ஒரு துருவ உலகில் (Unipolar World) அதிகாரச் சமநிலை நாட்டப்பட வேண்டிய பிராந்தியமாக, சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா வரையறுத்துள்ளது. இதில் இந்து சமுத்திரப் பிராந்தியமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸின் கூற்றில் “”பல்துருவ பார்வை கொண்ட ஒரு துருவ உலகம்” என்கிற கோட்பாடு, தென்னாசியத் தலைவாசல் மையத்திற்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் கருதப்படலாம்.தென்னாசியாவிலோ அல்லது இந்து சமுத்திரத்திலோ ஒரு வகையான அதிகாரச் சமநிலை பேணப்படவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டினை, சீன எழுச்சியின் வகிபாகம் நிர்ணயம் செய்வதாக பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஊதிப் பெருகும் சீனப் பொருளாதார வளர்ச்சி, பூவுலகின் கனி வளங்களையும், எரிசக்தி வளங்களையும் தனதாக்கிக்கொள்ளும் நகர்வில் தீவிர கவனம் செலுத்தும் இவ்வேளையில், சந்தை முக்கியத்துவமற்ற இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் கூடாரம் அமைக்க இடங்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றன.இதுகாலவரை, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பõன் என்கிற முச்சக்திகளின் பொருளாதார ஆதிக்கத்தால் முழு உலகமும் கட்டுண்டு கிடந்தது.
வெவ்வேறு பிராந்தியங்களில் உருவான புதிய சமநிலைகளை இவர்களே தமக்கேற்ற வகையில் உருவாக்கிக் கொண்டார்கள்.
அதனைத் தடுக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சீனா முயலவில்லை. தனது வளங்களை யுத்தத்தில் செலவிடாது நாட்டின் தொழில்நுட்ப உட்கட்டுமான வளர்ச்சியில் முதலீடு செய்வதில் அக்கறையோடு செயல்பட்டது.
அதேவேளை, உற்பத்திக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவினை மத்திய கிழக்கிலிருந்து கடல் வழியூடாக கொண்டுவரும் போது, பாதுகாப்பான சூழல் நிலவவேண்டுமாயின், அவ்வழித் தடத்திலுள்ள துறைமுகங்களைக் கையகப்படுத்த வேண்டும்.
இப் பாதையில் நீண்டகால இராஜரீக உறவு கொண்ட நாடுகள் அமைந்திருப்பது சீனாவிற்கு அனுகூலமாகவிருக்கிறது.
முத்துக்கள் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட கடல்வழிப் பாதை போன்ற குவார்டார் (Gwadar) துறைமுகம் பாகிஸ்தானிலும், சிட்டாகொங் (Chittagong) பங்களாதேஸிலும் சிற்வே (Sittwe) மியன்மாரிலும் உள்ள நிலையில் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையிலும், சீன ஆதரவுடன் நிர்மாணிக்கப்படுகிறது.
வட பகுதியில் “பூமாலை ஒப்பரேசனை’ இந்தியா நடத்தும்போதே அதன் பரந்த கடல் பகுதியில் முத்துமாலை கட்டத் தொடங்கியது சீனா. ஒரு கட்சி ஆட்சியின்கீழ் அதிகாரப் போட்டியற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நீண்டகால மூலோபாயத்தின் அடிப்படையில் நிர்மாணித்துக் கொள்ளலாம்.
ஐந்து வருடத்திற்கொரு முறை ஆட்சி மாறும் அரசியலமைப்பைக் கொண்டிராத மக்கள் சீனக் குடியரசின், சலனமற்ற உறுதியான தூரநோக்கு, ஏனைய பிராந்திய நலன்பேணும் வல்லரசுகளின் தடுமாற்ற நகர்வுகளால், சாத்தியமாவதை தற்போது உணரக்கூடியதாகவுள்ளது.
இந்த மூன்று வல்லரசுகளுக்கிடையே நிலவும் இணைவுகளும், முரண்நிலைகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எவ்வகையான அதிகார வலு சமநிலையை ஏற்படுத்தப் போகின்ற தென்பதே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் முன்னுள்ள, பிரதான ஆய்வுப் பொருளாக இருக்கிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் சில விவகாரங்களில், அதாவது கேந்திர நலனடிப்படையில் பங்காளர்களாக இணைந்திருந்தாலும், நிரந்தர நட்பு நாடுகளாக பரஸ்பர விட்டுக்கொடுப்புகளோடு இருக்கும் சாத்தியப்பாடுகள் இல்லையென்றே கூறலாம்.கடற்படை ஒத்திகைகளெல்லாம் கேந்திர முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரு தரப்பும் மேற்கொள்ளும் சில பலம் சேர்ந்த நகர்வுகளே.
ஆகவே, இலங்கை விடயத்தில் பொருளாதார தேவைகளைப் பார்க்கிலும் ஆசியாவில் இந்நாடு மையங்கொண்டிருக்கும் தரிப்பிடமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லரசுகள் கருதுகின்றன.
ஈழப்போராட்டம் பெருத்து வீங்கிய 80களின் மையப்பகுதியில், அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தையும், திருமலை எண்ணெய் குதம் மற்றும் வொஸ் ஒப் அöமரிக்கா வானொலி மையத்தையும் வைத்து இந்தியா வெளிப்படுத்திய முற்போக்குப் பாத்திரத்தை நம்பி, பல விடுதலை இயக்கங்கள் மனம் கசிந்து உருகிப்போகின.
காரியம் முடிவடைந்ததும், தமிழ் பேசும் மக்கள் நிரந்தரமாக கண்ணீர் சிந்தப் போவதை இவர்களால் உணர முடியவில்லை.
அதாவது, இந்தியாவின் சுயநலத்தில் எழுப்பப்பட்ட முற்போக்கு கற்பிதங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போவதை அன்றும் சிலர் புரியவில்லை. இன்றும் பலர் புரிய மறுக்கின்றார்கள்.12 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆழங்கூடிய திருமலை உள் துறைமுகத்தின் உணர்திறன் கூடிய மைய இருப்பே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக 17ஆம் நூறாண்டிலிருந்து பல நாட்டு படைத்துறை ஆய்வாளர்களால் கணிக்கப்படுகின்றது.மலைக்குன்றுகளாலும், சிறு தீவுகளால் சூழப்பட்ட இயற்கையான பாதுகாப்பு அரண்களை இத்துறைமுகம் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
1942இல் சிங்கப்பூர் கடற்படைத் தளம், ஜப்பான் வசமானவுடன், திருமலைத் துறையானது பிரித்தானியரின் ஏழாவது கடற்படைக்கு பாதுகாப்பாகத் திகழ்ந்தது.
அணுஆயுத ஏவுகணைகளைத் தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான தரிப்பிடமாகும்வகையில் திருமலை உள்துறைமுகம் அமைந்திருக்கும் அதேவேளை, ராடர்களின் பார்வைக்கு அகப்படாத வகையில் சிறுமலைக் குன்றுகளால் இத்துறைமுகம் சூழப்பட்டிருப்பது, இவற்றின் பாதுகாப்பிற்கு மேலதிக உத்தரவாதத்தை இப்பிரதேசம் வழங்குகிறது.
உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியால், நிலக்கரியிலிருந்து மசகு எண்ணெயின் பயன்பாடு அதிகரித்த வேளையில், கேந்திர மையங்களில், எண்ணெய் சேமிப்புக் குதங்களை அமைக்க வேண்டிய தேவையும் பிரித்தானியாவிற்கு ஏற்பட்டது.
ஒவ்வொரு கிணறும் 15,000 தொன் எண்ணெய் கொள்ளக்கூடிய வகையில் 101 பாரிய நிலத்தடி சேமிப்புக் குதங்களை, திருமலை சீனன்குடாவில் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர் நிறுவினர்.
சுதந்திரமடைந்த வேளையில் திருமலையை குறிவைத்து, பிரித்தானியர் 1947இல் உருவாக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம், குடியரசுப் பிரகடனத்தோடு காலாவதியாகிவிட்டது.ஏறத்தாழ 40 வருடங்களின் பின்னர், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக எண்ணெய் குதப்பாவனையும், துறைமுகத்தின் மறைமுகக் கட்டுப்பாடும் இந்தியாவின் வசம் வீழ்ந்தது.
ஆயினும் இந்தியப் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இலங்கை குறித்த நிலைப்பாடானது மிகவும் வித்தியாசமானது.ஒருவகையில், காலனி ஆதிக்க மனோபõவத்தின் வெளிப்பாடாகவும் இப்பார்வை புரியப்படலாம்.அதாவது, இலங்கையானது இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துள் இயற்கையாகப்பொருந்தியுள்ளது என்பதாகும்.
திருமலைத் துறைமுக, சீனன் குடா விமானத்தளத்திலிருந்து இந்தியா மீது கடல், வான் தாக்குதல்களை மிக விரைவாகத் தொடுக்கலாமென்பதால், இலங்கை என்கிற முழுப்பிரதேசத்தில், திருமலை என்கிற கேந்திர மையமானது “”இந்திய அதியுயர் பாதுகாப்பு வலயத்துள்” அடக்கப்படுகின்றதே இந்தியாவின் உறுதியான கணிப்பாகும்.ஆனாலும், சீன பொருளாதார வல்லாண்மைக் கரங்களின் நீட்சி, இந்தியாவைச் சுற்றி, பலமான கடல் வழி முத்துமாலைப் பாதையொன்றினை மிக சாமர்த்தியமான வகையில் அமைத்துள்ளது.
இலங்கையினூடான கடல்வழிப் பாதையில் கிழக்கு மேற்கிற்கான உலக கொள்கலன் பாதை யில், மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தின் பொரு ளாதார வணிக முக்கியத்துவத்தை இத்தரவுகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஆகவே, திருமலைக்கு மாற்றீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கட்டும் சீனாவின் அவசரத்தை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.
நான்கு கட்டங்களாக நிறைவு செய்யப்படவிருக்கும் இத்துறைமுகத்திட்டமானது 15 வருடகாலத்துக்குள் முழுமையாக முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு எரிவாயுவில் இயக்கப்படும் அனல் மின் நிலையமும், கப்பல்கள், கொள்கலன்கள் திருத்தும் தளங்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மேலதிகமாக நிர்மாணிக்கப்படவிருக்கிறன்றன.
இன்னமும் ஏழு வருடகாலத்தில், தனது எண்ணெய் இறக்குமதியின் 70 வீதத்தை மத்திய கிழக்கிலிருந்தே சீனா பெறப்போகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
தடையற்ற விநியோகம், இக்கடல் பாதையூடாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டிய தேவையும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் முத்துமாலையில், ஹம்பாந்தோட்டையும் ஒரு காத்திரமான இடைத்தங்கல் சேமிப்பு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றமடையப் போகிறது. அண்மைய ஈரான் ஜனாதிபதியின் வருகையும், ஒப்பந்தங்களும் இவற்றையே உறுதிப்படுத்துகின்றன.
பொருளாதார பரஸ்பர நலன் என்கிற பாதையூடாக நுழைந்து, பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக அதை மாற்றுவதை பழைய வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தியா அவசரப்படுவதுபோல, தமிழர் போராட்டத்தை நசுக்க முயற்சித்தாலும், வல்லரசுகளின் பிராந்தியத்தில் குறித்த நகர்வுகளில் மாறுதல்கள் ஏற்படாது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காய் நகர்த்தும் சகல வல்லரசாளர்களும், தமக்குள் நிரந்தரமான உறவையோ அல்லது பொதுவான கூட்டுக்களையோ ஏற்படுத்தமாட்டார்கள்.
இப்பிராந்தியத்தின் பிதாமகன் என்கிற நிலைப்பாட்டை இந்தியாவும் விட்டுக்கொடுக்காத அதேவேளை பாரிய நிலமீட்புத் தாக்குதலில் இதுவரை ஈடுபடாமல், தற்காப்பு நிலை பேணும் விடுதலைப் புலிகளின் தந்திரத்தை, இந்தியாவும் புரிந்து கொள்ளும்.இந்தியா, சீனாவைப் பொறுத்தவரை துறைமுகமும், சில கேந்திர நிலையங்களும் மட்டுமே அவர்களுக்குத் தேவை.
மன்னார் எண்ணெய் வளமும், பொருளாதார முதலீடுகளும், அந்நாடுகளின் பொருண்மிய பலத்தோடு ஒப்பிடுகையில் மிக அற்பமான விடயங்களாகும்.
நன்றி : சி.இதயச்சந்திரன்