ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

என் குட்டி உலகம் நீ



‘என் அழகை நான் ஆராதிப்பதைவிட, நீ அதிகம் ஆராதிக்கிறாயே... ஏன்? என்றாய்.

உன் அழகால் உனக்கென்ன பயன்? அதன் பயனை எல்லாம் அனுபவிப்பவன் நான்தானே! என்றேன்.

என் அழகால் உனக்கு என்ன பயன்?’

அடுத்த ஜென்மத்தில் நீ ஆணாகப் பிறந்து, ஓர் அழகியைக் காதலி. அப்போது புரியும்!

இந்த ஜென்மத்தில், புரியும்படி கொஞ்சம் சொல்லேன்.

சந்தனத்தால் என்ன பயன் என்பதை சந்தன மரத்துக்கு எப்படிப் புரிய வைப்பது? ஆனால், உன் அழகு செய்யும் மாயங்களைச் சொல்ல முடியும்?

சொல்லு... சொல்லு!

உன் இமைகள் இமைக்கும் போது என்ன நிகழ்கிறது?

என் கண்கள் ஈரமாகிறது. வேறென்ன?

அது உனக்கு! ஆனால், நீ இமைக்கும் ஒவ்வொரு முறையும், நீயும் நானும் மட்டும் வசிக்கும் குட்டி உலகத்தில் இரவு பகல் மாறிக் கொண்டே இருக்கும். இமைகளை நீ மூடினால் இரவு. திறந்தால் பகல். நீ சிரிக்கும் போதோ அந்தக் குட்டி உலகத்தில் அழகான ஒரு குட்டி நிலவே உதிக்கும்...’

அப்படியெனில், என் அழகுக்காகத்தான் நீ என்னைக் காதலிக்கிறாயா. என் அழகெல்லாம் தீர்ந்தபிறகு உன் காதலும் தீர்ந்துவிடுமா?

நீ அப்படி வருகிறாயா? சரி, உன் அழகெல்லாம் எப்போது தீரும்?

எனக்கு வயதாகிற போது! அடி முட்டாள் பெண்ணே, வயதானால் உன் அழகெல்லாம் தீர்ந்துவிடும் என்றா நினைக்கிறாய்? அழகு என்ன உன் வயதிலா இருக்கிறது?

பின்னே?

‘நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ அழகாக இருந்ததால்தான் நான் உன்னைப் பார்க்க ஆரம்பித்தேன் என்பது உண்மைதான். ஆனால், உன்னைப் பார்க்க ஆரம்பித்த பிறகு, நீ பேரழகியாக மாறிவிட்டாய் என்பதுதான் பெரும் உண்மை. ஆகையால் கவலைப்படாதே! நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன் அழகு தீராது. இன்னும் சொல்வதென்றால், நீயும் நானும் இறக்கும்வரை உன் அழகு தீரவே தீராது. ஏன் என்றால், அதுவரை நான் உன்னைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்... காதலோடு.

இதைக் கேட்டு, நீ என் தோளில் சாய்ந்தாய். நம் குட்டி உலகத்தில் ஒரு குட்டிக் குளிர்காலம் ஆரம்பமானது!


குலதெய்வம்



நம் காதலை உங்கள் குடும்பம் ஏற்றுக்கொண்டுவிட்ட ரம்மியமான காலமது! உங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போக என்னையும் அழைத்திருந்தார் உன் தந்தை.

உன்னை மாதிரியே உன் குலதெய்வம்கூட அழகாகத்தான் இருக்கிறது! என்று உன் காதில் சொன்னபடி, குலதெய்வத்துக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுக் கோயிலைச் சுற்றுகையில், உன் தந்தை என்னைப் பார்த்து, உங்கள் குலதெய்வம் எது? என்று கேட்டார்.

நான் உன்னைக் காட்டி, இதோ! என்றேன்.

உன் குடும்பத்தின் கேலிச் சிரிப்பொலிக்கு நடுவே நீ ஐயோ என்று முகத்தை மூடிக்கொண்டு, கோயில் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாய்.

நான்உன் அருகில்வந்து, நேரமாகிவிட்டது... வா, போகலாம்! என்றேன்.

நான் வரலை! என்று சிணுங்கினாய்.

ஐயையோ... நீ இங்கேயே இருந்துவிட்டால், இங்கிருக்கும் தெய்வம் எங்கே போவது? வேண்டுமென்றால் சொல்... இதைவிட அழகிய கோயிலாக, நான் கட்டித் தருகிறேன்! என்றேன்.

ஐயோ அப்பா... என்னைக் காப்பாத்துங்கப்பா! என்று கத்தியபடியே எழுந்து ஓடிப்போய், உன் தந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாய்.

உன் தந்தை போதும் என்று கண்டிப்புடன் சொன்னாலும், தன் பெண் நல்ல பையனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்கிற பெருமை அவர் முகத்தில் தாண்டவமாடியது.

நான் பெருமகிழ்ச்சி கொண்டு, கோயிலுக்குள் இருக்கும் தெய்வத்தைத் திரும்பிப் பார்த்தேன்.

தெய்வமோ, என் சந்நிதானத்தில் என்ன விளையாட்டு இது? என்பதுபோல் பொய்க்கோபம் கொண்டு என்னை முறைத்துப் பார்த்தது


கடவுளுக்கு கர்வம் அதிகம்



எப்போதும்போல நேற்றிரவு உன் கனவுக்காகத் தூங்கியபடி காத்திருந்தேன். ஆனால், நீ வருவதற்கு முன், எப்படியோ என் கனவுக்குள் நுழைந்துவிட்ட கடவுள், என்னைப் பார்த்து, குழந்தாய்... உனக்கு என்ன வேண்டும்? என்று அவருக்கே உரிய தோரணையுடன் கேட்டார்.

எனக்கோ கோபம் தலைக்கேறி, யார் நீ? உன்னை யார் என் கனவுக்குள் அனுமதித்தது? உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு என்ன வேண்டும் என்பதை என்னைக் கேட்காமலே எனக்கு வாரி வழங்குகிற தேவதை ஒருத்தி இருக்கிறாள். வெளியே போ! அவள் வருகிற நேரமிது என வெடுக்கென்று சொல்லிவிட்டேன்.

உடனே கடவுளுக்குக் கோபம் வந்து, என்னை எரிக்கப் பார்த்தார். உன் அரவணைப்பில் இருக்கும் என்னை எரித்துவிட முடியுமா அவரால்? தன் வரலாற்றில் ஏற்பட்ட முதல் தோல்வியை மறைக்க முடியாமல், முகம் எல்லாம் வேர்த்துக்கொட்ட, மறைந்துவிட்டார் கடவுள்.

ஆனாலும் இந்தக் கடவுளுக்கு கர்வம் அதிகம். எல்லோருக்கும் எல்லாமும் நாம்தாம் என்கிற நினைப்போடு சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் பிறருக்கு வேண்டுமானால் எல்லாமுமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், எனக்கு எல்லாம் நீதான்!

இந்தக் கடவுள் உன்னிடம் வந்தால் அவரைக் கொஞ்சம் கண்டித்து வை,

‘என்னவருக்கு என்ன வேண்டும் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்.இனி அவரைத் தொந்தரவு செய்யாதே!' என்று.

ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது....




நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது... என்று கத்துவேன் நான் கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள் என்று சிணுங்குவாய்.

ஆனால், உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய் என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு! என்பேன். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... என்பாய் நீ.

என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா? என்பேன்.

இல்லை! என்று அழுத்திச் சொல்வாய் நீ.

அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினேனே... அது, நீ இல்லையா? என்பேன்.

ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு? என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி... உனக்குத்தான்! என் கனவில்... என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும். நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.

என்ன? என்று கேட்டதற்கு, நீங்க ரொம்பப் பணக்காரங்க... நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க... என்றாய், முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.

நான் மௌனமாக இருந்தேன்.

கேட்பாங்களா? என்றாய் நீ.

எங்க அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய! என்றேன்.

நிறையன்னா... எவ்ளோ? என்றாய் விசனத்தோடு. நிறையன்னா... ரொம்ப நிறைய! உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்... அவற்றை நனவாக்கித் தருவதற்காக! என்றேன்.

நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!

மாந்தோப்பில்தான்.......





நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா& அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியை மடித்து முதல் வேட்டியும் கட்டிக்கொண்டு சந்தித்தோம் | பொங்கி வழிந்த கூச்சத்துடன் ஒரு திருவிழா நாளில்.

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய்... இனிமே உன்னை டா போட்டுக் கூப்பிடமாட்டேன்!

ஏன்?

மாட்டேன்னா... மாட்டேன்!

அப்போ இனிமே நானும் உன்னை டீ போட்டுக் கூப்பிடக்கூடாதா?

இல்லேல்ல... நீ கூப்பிடலாம். கட்டிக்கப் போறவளை வேற எப்படிக் கூப்பிடறதாம்? & சொல்லிவிட்டு, சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்டாய். உன் வெட்கத்தில், மாந்தோப்பில் காய்த்திருந்த மாங்காய்களெல்லாம் சிவந்து போயின.

இன்னொரு அமாவாசை நாளில் என் அக்கா, தன் குழந்தைக்குச் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை. மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, அதோ பார் நிலா! என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாத பொழுதில் ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில்தான்!

பிறிதொரு வருடத்தில் அதே மாந்தோப்பில்தான், என்னை மறந்துவிடுங்கள் என்று அழுதாய். அதோடு முடிந்துபோனது எல்லாம்!

இப்போது உன்னை இந்தா என்று அழைக்க, ஒரு கணவன் இருக்கிறான்.

அம்மா என்று அழைக்க, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆனால்...

ஏண்டா கல்யாணமே வேணாங்கறே? என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மகனாக நான் இல்லை!

கவிதைகள்





வரதட்சிணை
எல்லாம் கேட்டு
உன்னைக்
கொடுமைப்படுத்திவிட
மாட்டேன்.
ஆனால்
அதைவிடக்
கொடுமையாய் இருக்கும்
என் காதல்.

**
கூந்தலில் பூவாசனை வீசும்;
தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல்
வாசனையல்லவா வீசுகிறது!

**

நீ கிடைக்கலாம்
கிடைக்காமல் போகலாம்
ஆனால்
உன்னால் கிடைக்கும்
எதுவும்
எனக்கு சம்மதம்தான்..

**

எனது உறக்கத்தின்
வாசலில்
நான் காவல்
வைத்திருக்கிறேன்.
உனது கனவுகளை
மட்டும் அனுமதிக்க..

**

நீ
வெயில் காரணமாக
உன் முகத்தை
மூடி கொண்டாய்..
உன் முகத்தை
பார்க்காத கோபத்தில்
சூரியன்
எங்களை சுட்டெரிகிறது!!

**

நீ
சாய்வதற்கென்றே
வைத்திருக்கும்
என் தோள்களில்
யார்யாரோ
தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்

**

உன் தைல விரல்களுக்கு
ஏங்குகின்றன
என் தலைவலிகள்……

**

உன்
பிறந்த நாளையும்
பிறந்த நேரத்தையும்
காட்டுகிற
ஒரு கடிகாரம்
என் அறையிலிருக்கிறது.

"கடிகாரம் ஓடலியா?"
என யாராவது கேட்டால்
சிரிப்புத்தான் வரும்..

அது
காலக் கடிகாரம் அல்ல
என் காதல் கடிகாரம்

**

மரத்தின்
கீழ்
உனக்காக
காத்திருக்கையில்
மரமேறிப் பார்க்கும்
மனசு

**

எனக்கு
லீப் வருடங்கள்
ரொம்ப பிடிக்கும்
அந்த வருடத்தில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாய் வாழலாம்
உன்னுடன்!

**

உன் பாட்டியின்
நினைவுநாளில்
நீ ஒரு சின்ன இலையில்
சாதத்தை வைத்துக்கொண்டு
‘ கா கா ‘
என கத்துவதைப்பார்த்ததும்
‘"அட...
குயில் கா கா ன்னு கூவுதே “
என்றேன்.
நீ இலையை கிணற்று
மேல் போட்டுவிட்டு
மானைப்போல் ஓடி மறைந்தாய்.

**

சீப்பெடுத்து
உன் கூந்தலைச் சீவி
அலங்கரித்துக்கொண்டாய்..
அந்த சீப்போ
உன் கூந்தலில்
ஒரு முடி எடுத்து
தன்னை அலங்கரித்துக்கொண்டது.

**

சொல்லாமல் வந்த
புயல்மழை நாளில்
நீயும் உனது தந்தையும்
வருகையில் குடைக்கம்பி
உன் தலையில்
குத்திவிட்டதற்காக
உன் தந்தையைப்பார்த்து

கெஞ்சலாய் நீ
சுழித்த முகச்சுழிப்பில்
இன்னொரு
புயல் உருவாகி
மழையால்
அடித்துவிட்டு போனது
என்னை மட்டும் .!

**
எல்லோரும் கோயில் சிற்பங்களை
ரசித்துக்கொண்டிருந்தார்கள்
சிற்பங்களெல்லாம்
உன்னை ரசித்துகொண்டிருந்தன !

**

ஒரே ஒரு முறைதான்
என்றியும்
உன் நிழல்
என் மீது பட்டதால்
நான்
ஒளியூட்டபட்டு
கவிஞனானேன்!

**

அழகான பொருட்கள்
எல்லாம் உன்னை
நினைவு படுத்துகின்றன.
உன்னை நினைவு படுத்தும்
பொருட்கள்
எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன..

**

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான்
இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும்
போதுதான்
தலைப்புடன் கூடிய
கவிதையாகிறாய்.

**

உன் கையசைவிற்காகவே
எத்தனைமுறை
வேண்டுமானாலும்
உன்னிடமிருந்து விடை பெறலாம்!

**

நீ தூங்குகிறாய்...
எல்லா அழகுகளுடனும்.
உன் கண்களை
மூடியிருக்கும்
இமைகளில் கூட
எனக்காக விழித்திருக்கிறது
உன் அழகிய காதல்.

**

என்னை
காத்திருக்க வைக்கவாவது
நீ
என் காதலியாக வேண்டும்..
கடைசிவரை
வராமல் போனால்கூட
ஒன்றுமில்லை.

**

காதலிக்கும்போது
கவிதைதான்
கிடைக்கிறது.
காதலிக்கப்படும்போதுதான்
வாழ்க்கை கிடைக்கிறது.


திமிரழகி!



மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.

இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.

அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன்.
ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய்.
"அவ உன் மேல் கோபமா இருக்கா! "என்றாள் எனக்கும் உனக்குமான தோழி.
"ஏன்?" என்றேன் வியப்பு காட்டாமல்.
"நேத்தைய கோபம்! "என்றாள்.

அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக்குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.

அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.

நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன்.
அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. ஆனாலும் மாலைகளில் கடற்கரைக்குப் போய்,
எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். "டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! " என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.

மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.

எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.

உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
"சரி, அதை விடு " என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.

அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.

"இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! "என்றேன்.
"அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? "
ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ,
"அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா!
அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு, நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? " என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
"அப்படி வா வழிக்கு!" என்றேன்.
"மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு?" என்றாய் குறுகுறு பார்வையுடன்.

"ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! "என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய்,

ஒரு பூக்கடை முன் நிறுத்தி...
‘எல்லாப் பூவையும் குடுங்க!’ என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ‘நான் உன்னைக் காதலிக் கிறேன்!’ என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்...

"இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ! "


**

உன்னை விட
தீயணைப்புத் துறை எவ்வளவோ மேல். வீடு எரிந்தால் அது அணைக்க வரும். ஆனால், நீயோ என்னை வந்து அணைத்துவிட்டு எரியவிடுகிறாய்!
**

நிலவைச் சுற்றி வர
விஞ்ஞானிகள் செயற்கைக் கோள் அனுப்புவது மாதிரி உன்னைச் சுற்றி வர என்னை அனுப்பியிருக்கிறது காதல்!


நீ!






நான் விருப்பப்பட்டது
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

**


உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

**


உன் நினைவுகளே

வாழ்க்கை
என்றான பிறகு

நீ

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில்
இருந்தால் என்ன ?

**


குட்டி போடும்

என்று நினைத்து
குழந்தைகள்
புத்தகத்தில் வைத்திருக்கும்
மயிலிறகு போல்
உன் நினைவுகள்
பத்திரமாய்..

**


செடி கொடி மரத்தில்

மட்டும்தான்
பூ பூக்குமென
யார் சொன்னது??
உன் பெயர் சொல்லி
எல்லோரையும்
என் முகம் பார்க்கச் சொல்!!

**


என்ன எழுதினாலும்,

உன்னுடைய
“அவ்வவ்வா”
“ஊஹூம்…”
“டேய் ”
“ப்ச்..ப்ச்..”
“லூஸு”
மணா"    
"உன் முத்தம்"
…க்களுக்கு முன்னால்
என் கவிதைகள்
தோற்று விடுகின்றன!

**


என் கற்பனை வளத்தை
கொன்றவள் நீ..
என் கற்பனைகள்
உன்னைத் தாண்டிச்
செல்ல மறுக்கின்றன...

**


அத்தி பூத்தது...

உன்னை பார்த்தது
பார்த்த நாள் முதல் -
தினமும் பூத்தது!

**


உன்னிடம் பேச

எவ்வளவு
ஆசைப்படுகிறேனோ
அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில் .

**


என்னை கொல்ல

வாள் வேண்டாமடி
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

**


மன்னித்து விடு!

நான் உன்னை
ஒருநாள் ஒருகணம்
மறக்க
மறந்துவிட்டேன்….

**


செடியில் பூத்துக்கொண்டே

உன் முகத்திலும்
பூக்க
எப்படி முடிகிறது
இந்தப் பூக்களால்??

வலி....






இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!

நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

*

பிறந்த
குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!

*

கடல்
கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!

*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

ஆழிப்
பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!

*

இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!

நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!

*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!
இல்லறம்
எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

*
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை

*

பஞ்சம்
பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

*

தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை

*

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."

*

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!
இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

*

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!
தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்

*

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!
உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!

*

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

*

நேற்று
வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!

*

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
‘யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’

நன்றி : அறிவுமதி


மிகவும் பிடித்த பாடல்கள்