ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்
வியாழன், 14 ஆகஸ்ட், 2008
திமிரழகி!
மாலையில் நண்பனுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தேன்.
என்னுடன் படிக்கும் நீயும் இன்னொருத்தியும் அங்கே அதிசயமாக வர, உன்னுடன் வந்தவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உண்மையில் உன் பெயர் சொல்லி அழைக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் நீயோ, பிரபஞ்ச அழகி என்பது போன்ற திமிருடன் திரிபவள். கல்லூரியில் சில நேரம் பேசுவாய்... சில நேரம் யார் நீ? என்பது போல் பார்த்துப் போவாய்.
இருவரும் அருகில் வந்தீர்கள். என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்வதற்காக, உன்னுடன் வந்தவளை என் தோழி என்றும், உன்னை என் க்ளாஸ்மேட் என்றும் சொன்னேன். க்ளாஸ்மேட் என்று சொல்லும்போது உன் முகத்தில் ஒரு கனல் எழுந்து அடங்கியதையும் கவனித்தேன். உடனே கிளம்பறோம் என்று உலாவைத் தொடர்ந்தீர்கள்.
அடுத்த நாள் கல்லூரியில் உனக்கு உற்சாகமாக ஒரு ஹலோ சொன்னேன். ஆனால், நீயோ கவனிக்காமல் காற்றாக போனாய்.
"அவ உன் மேல் கோபமா இருக்கா! "என்றாள் எனக்கும் உனக்குமான தோழி.
"ஏன்?" என்றேன் வியப்பு காட்டாமல்.
"நேத்தைய கோபம்! "என்றாள்.
அதானே உண்மை! தோழியைத்தான் தோழினு சொல்ல முடியும். மனசுக்குள்ள ஆசை ஆசையா விரும்பற பெண்ணை, தோழினு சொல்லி நட்பைக் கேவலப்படுத்த எனக்குத் தெரியாது என்றேன்.
அதிர்ந்துபோனாய் நீ! உன் முகத்தில் கோபம் சலங்கை கட்டி சதிராட ஆரம்பித்தது. ஆனால், அதைத் துளியும் வெளிக் காட்டாமல், வேகமாக என் பக்கம் திரும்பினாய்... நீங்க நெனைச்சாப் போதுமா... நாங்க நெனைக்க வேண்டாமா? வெடுக்கெனச் சொல்லி விட்டு வேக வேகமாய், புயல் மாதிரி போய் விட்டாய்.
நானோ ஏமாற்றத்துடன் அப்போதே கல்லூரியி லிருந்து வெளியேறினேன். அடுத்த இரண்டு நாட்களுக்குக் கல்லூரிப் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. ஆனாலும் மாலைகளில் கடற்கரைக்குப் போய்,
எப்போதும் நான் அமர்ந்திருக்கும் இடமருகில் மறைந்து நின்று, நீ வருகிறாயா... வந்து என்னைத் தேடுகிறாயா என்று பார்ப்பேன்.
நீயும் வந்தாய். வந்து என்னைத் தேடிவிட்டு, ஏதோ முணுமுணுத்தபடி திரும்பிப் போனாய். "டேய் மகனே... சத்தியமா இது காதல்தான்! " என்று என் காதில் கிசுகிசுத்தன நம் முன்னோர்களின் ஆத்மாக்கள்.
மூன்றாம் நாள் மாலையில், இன்னொரு நண்பனுடன் கடற்கரையில், என் இடத்தில் அமர்ந்திருந்தேன். தோழியுடன் வந்த உன் கண்களில் மின்னல். அது மின்னல் என்பதனால் அடுத்த கணமே காணாமல் போனது.
எங்கே காலேஜ் பக்கம் ஆளையே காணோம்? என்றாள் உன் தோழி... ஸாரி, என் தோழி. லவ் ஃபெயிலியர்! என்றேன் கூசாமல்.
உன் முகத்தில் ஒரு எகத்தாளப் புன்னகை எழுந்து அடங்கியது அவசரமாக.
"சரி, அதை விடு " என்று நானே பேச்சை மாற்றி, என் நண்பனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டு, உங்கள் இருவரையும் என் தோழிகள் என்று சொல்லி, பிளேட்டைத் திருப்பிப் போட்டேன்.
அதுவரை அமைதியாக இருந்த நீ இப்ப மட்டும் நட்பைக் கேவலப்படுத்தலாமா? என்று நமக்குப் புரிகிற பாஷையில் வெடித்தாய்.
"இதில் என்ன கேவலம்? உண்மையைத்தானே சொன் னேன்! "என்றேன்.
"அப்போ... நீ என்னைக் காதலிக்கலியா? " ஆவேசம் கொண்ட அம்பிகை யான நீ,
"அய்யோ... நீ சரியான மக்குப் பிளாஸ்திரிடா! அன்னிக்கு நீ என்னை கிளாஸ்மேட்னு சொன்னதுக்கு, நான் கோவிச்சுக்கிட்டப்பவே உனக்குப் புரிஞ்சிருக்க வேண்டாமா? " என்றாய் படபடக்கும் பட்டாம்பூச்சியாய்.
"அப்படி வா வழிக்கு!" என்றேன்.
"மண்ணாங்கட்டி... தனியா கூட்டிட்டுப் போயி, ஒரு ரோஜாப்பூ கொடுத்து, காதலை அழகா சொல்லத் தெரியாதா உனக்கு?" என்றாய் குறுகுறு பார்வையுடன்.
"ஓஹோ... மகாராணிக்கு இதுதான் பிரச்னையா? வாங்க மேடம் என்னோட! "என்று உன் கையைப் பிடித்து இழுத்துப்போய்,
ஒரு பூக்கடை முன் நிறுத்தி... ‘எல்லாப் பூவையும் குடுங்க!’ என்று பூக்காரம்மாவிடம் கேட்டு வாங்கி, அப்படியே பூக்கூடையை உன் முன் நீட்டி, ‘நான் உன்னைக் காதலிக் கிறேன்!’ என்றேன்.
வெள்ளமென வெட்கம் பாயச் சொன்னாய்...
"இந்த ராட்சஸிக்கு ஏத்த ராட்சஸன்டா நீ! "
**
உன்னை விட தீயணைப்புத் துறை எவ்வளவோ மேல். வீடு எரிந்தால் அது அணைக்க வரும். ஆனால், நீயோ என்னை வந்து அணைத்துவிட்டு எரியவிடுகிறாய்!
**
நிலவைச் சுற்றி வர விஞ்ஞானிகள் செயற்கைக் கோள் அனுப்புவது மாதிரி உன்னைச் சுற்றி வர என்னை அனுப்பியிருக்கிறது காதல்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக