ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 14 ஆகஸ்ட், 2008

வலி....


இராமேசுவரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்!

நாங்கள்
குதித்துக்
கரையேறுகிறோம்!

*

பிறந்த
குழந்தையின்
நெற்றியில்
வைக்கிறாள்...
பிடி மண்ணாய்
கொண்டுவந்த
தாய் மண்!

*

கடல்
கடந்து
பார்க்க
வந்திருக்கின்றன
சோறு வைத்த
காக்கைகள்!

*
படகில் ஏறினோம்
படகுகளை
விற்று!

*

ஆழிப்
பேரலைகளும்
எங்கள்
பெண்களை
வீடு புகுந்து
இழுத்துப் போய்
கொல்லத்தான்
செய்தன
ஆனாலும்!

*

இலங்கை
வானொலியிலிருந்து
நீங்கள்
பிறந்த நாள் வாழ்த்து
கேட்கிறீர்கள்!

நாங்கள்
மரண அறிவித்தல்
கேட்கிறோம்!

*
வயசுக்கு வந்த மகள்
தூங்குகிறாள்!
இல்லறம்
எங்களைப்
பொறுத்தவரை
இயலாத அறம்

*
அங்கே
சிங்களத்தில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டினார்கள்!
புரிந்தது.

இங்கே
தமிழில்
கெட்ட கெட்ட
வார்த்தைகளில்
திட்டுகிறார்கள்
புரியவில்லை

*

பஞ்சம்
பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறீர்கள்!
உயிர் பிழைக்கக்
கடல்
தாண்டி
வருகிறோம்

*

தமிழில்தான்
விசாரித்தார்கள்
தமிழர்களாய்
இல்லை

*

மன்னாருக்கும்
மண்டபத்துக்கும்
இடையே
இருப்பது
வளைகுடா இல்லை!
"தமிழர்சதுக்கம்."

*

அங்கே
கேட்டுக் கேள்வி இல்லாமல்
கொன்றார்கள்!
இங்கே
கேள்வி கேட்டுக்
கொல்கிறார்கள்

*

தவறியவர்கள்
மீன்களுக்கு
இரையேனோம்!
தப்பித்தவர்கள்
'ஏன்?'களுக்கு
இரையானோம்

*

எங்களால்
இறங்கி
வந்து
கரையேற முடிகிறது!
உங்களால்
இரங்கி
வந்து
உரையாடமுடியவில்லை!

*

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

*

நேற்று
வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்!

*

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது...
‘யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!’

நன்றி : அறிவுமதி


கருத்துகள் இல்லை: