ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

எதிர்பாரா தருணத்தில்…



எதிர்பாராமல் என்னை
எதிரில் கண்டு…

ஆச்சர்யத்தில் விரியும்
உன் அகண்ட விழிகளில்
அடக்க முடியாத
சந்தோசத்தை நிரப்பிக்கொண்டு…

மலர்ந்திருக்கும் மகிழ்ச்சியை
மனதிற்குள் மறைத்துக்கொண்டு…

இயல்பாய் கேட்பதுபோல
“ என்ன “ என்கிறாய் !

நான் உன் முகத்தையே
உற்றுப்பார்க்க…

வெட்கம் சிந்தும் சிரிப்புடன்
சட்டென வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாய் !

நீ திரும்பிய திசையெங்கும்
திணறிச் சிதறுகிறது என்மேல்
நீ கொண்ட காதல் !

நிஜமான கற்பனை…




எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப் போகையிலும் அமைதியாய்
இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில்
மட்டும் என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !

என் அறைகள் முழுவதும்
நிறையும் உன் வாசத்தை
நினைவுகளில் சுமந்தபடியே
அமர்ந்திருக்கிறேன்
அசைவுகள் ஏதுமின்றி !

அடிக்கடி எனக்கு மட்டும்
கேட்கின்ற உன் சிரிப்பு சத்தங்களும்
நீ அன்போடு என்னை அழைக்கும் அந்த சத்தமும்
இப்பொழுதெல்லாம் எனக்கு பழகிவிட்டது !


ஒருவேளை நீ நிஜத்தில்
என் முன் வந்து நின்றாலும்
பேசினாலும்கூட
இதுவும் கற்பனை என்று நான்
உன்னை கடந்துபோகக்கூடும்
எச்சரிக்கையாய் இரு…

நினைவுகளின் மணம்…



உனக்காய் எரிந்துகொண்டிருக்கும்
நான் மெழுகுவர்த்தி அல்ல…
ஊதுபத்தி !

எரிந்தாலும் புகைந்தாலும்
கரைந்தாலும் கருகினாலும்
உன் நினைவுகளை மட்டுமே
மணமாகப் பரப்பிக்கொண்டிருக்கிறேன் !

என் எண்ணங்கள் மட்டும்
சாம்பலாய் விழுந்து கிடக்கின்றன
எனக்கான சுவடுகளாய்…

அழகின் வெளிச்சம்…




நீ சூரியன் என்று மாறிவிட்டாய்…
பூமியாய் எப்பொழுதும் உன்னையே
சுற்றிச் சுற்றி வருவதே
எனக்கு போதுமானதாக இருக்கிறது !

உன்னை நெருங்கவும் முடியாமல்
விலகவும் இயலாமல் ஒரு
எண்ணக்கோட்டுக்குள் அந்த
எல்லைக்கோட்டுக்குள்
உனையே சுற்றி வருகிறேன் !

உனக்கான தூக்கம்…


எனது இரவுகளுக்கு சிறகுக்குள் முளைத்து
பல நாட்கள் ஆகிவிட்டன !

ஆனாலும் அவை இதுநாள்வரை
பறக்க முயற்சித்ததில்லை !

உந்தன் அறிமுகத்திற்கு பிறகோ அவை
பறப்பதை நிறுத்தவே இல்லை !

இப்பொழுதும்கூட அவைஎன் உறக்கத்தை
திருடிக்கொண்டு வந்து உன்னிடம்
கொடுத்துக்கொண்டிருக்கிறது பார் !

எனக்கும் சேர்த்து நீயாவது தூங்கு…
உனக்கும் சேர்த்து விழித்துக்கொண்டிருக்கிறேன் நான் !

அழகிய பிராத்தனைகள்…



இமைகள் இரண்டையும் இறுக்க மூடிக்கொண்டு
மெல்லிய இதழ்களை
மெதுவாய் அசைத்தபடி…

நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளை கேட்பதற்காகவே
கோவில் கருவறையில்
காத்திருக்கிறது கடவுள் !

ஊடல்…



என் கண்களில் இருந்து


உடைந்துவிழும் ஒவ்வொருத்துளி


கண்ணீருக்குள்ளும் நெருப்பாய்


எரிந்துகொண்டிருக்கிறது நமது


நேற்றைய ஞாபகங்கள் !


முற்றிப்போய் முட்டிக்கொண்ட


நமது சண்டைகளுக்குள்


ஒன்றும் பேசாமல்ஒளிந்து


கொண்டிருக்கிறது


நமக்கான காதல் !