வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008
எங்கே சென்று விடுவாய் என்னைத் தவிர்த்துவிட்டு?
நீயில்லாத நாளில்...
நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....
நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...
நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்
முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...
உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..
உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.
ஒருவேளை...
உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...
தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே
மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....
உன்னை இழந்ததற்கு பதிலாய் உயிரை இழந்திருக்கலாம்
இருக்கலாம்!
உன் நினைவுகள்!
உன்னை நினைத்து
இரவு முழுதும்
அழுது முடித்து
உறுதியாய்த்
தீர்மானித்தேன்
உன்னை மறந்து
விடுவதென்று!
உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழுதுகொண்டு
அழைத்துக்கொண்டு
கிளம்பினேன்...
திரையரங்கில்..
நூலகத்தில்..
புத்தக இடுக்கில்..
பேருந்தில்..
அலுவலகத்தில்..
சாலையில் பார்த்த
குழந்தையின் சிரிப்பில்...
எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து
மீண்டும் வீட்டிற்குத்
திரும்பினேன்.
செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது!
உன் நினைவுகளைக் காணவில்லை!!
மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்
அங்கே...
அலைந்த களைப்பில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!
கவிதைகள்
இதை நீ படிக்கும்
நொடியில்
நான் எங்கு இருப்பேன்
என்றறியாவிட்டாலும்,
நிச்சயமாய் ஒன்று மட்டும்,
இப்பொழுதுகூட நீ
என் இதயத்தில்தான்
இருக்கிறாய்..!
*
இப்பொழுதே
என்னை காதலித்துவிடு,
இல்லையென்றால்
அடுத்த ஜென்மத்தில்,
இதற்கும் சேர்த்து
நிறைய
காதலிக்க
வேண்டியிருக்கும்..!
*
பழைய பள்ளிக்கூட
புகைப்படத்தில்,
இன்னும்
புதிதாகவே
இருக்கிறது
முதல்
காதலின் நினைவு..!
அன்றும் இன்றும் என்றும்
புதிதாகவே
இருக்கும்
அந்த முதல் நினைவு
*
நீ என்னுடன்
பேசிச்சென்றதை,
ஒட்டுக்கேட்டு விட்டு
அதை சத்தமாய்
சொல்லிக்கொண்டிருக்கிறது
- காலி வகுப்பறை..!
"எல்லாக் கவிதைகளுமே
உன்னைப் பற்றியவை
தானெனினும்
ஒரு கவிதை கூட
உன்னை மாதிரி இல்லையே?"
*
"விலக விலக
புள்ளி தானே?
நீ மட்டும் எப்படி
விஸ்வரூபம்?"
*
"இனி பார்க்க வேண்டும் என்கிற
ஆசை வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப் பார்த்துக் கொள்ளலாம்
எங்காவது ஒரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக் கொள்ளட்டுமே"
*
கூந்தலின்
இருந்து பிரிந்த
ஒற்றை முடியென
சந்திப்பின் குறுகிய
வெளியில்
என் பிரியங்களைப்
பிரித்துக் காட்ட
அவகாசமேதுமின்றியே
நிகழ்ந்தது நம் பிரிவும்...
*
ஆனால்...
கவிதைகள்
என்னை எங்கு பார்த்தாலும்
ஏன் உடனே நின்று விடுகிறாய்?'
என்றா கேட்கிறாய்.
நீ கூடத்தான்
கண்ணாடியை எங்கு பார்த்தாலும்
ஒரு நொடி நின்று விடுகிறாய்
உன்னைப் பார்க்க உனக்கே
அவ்வளவு ஆசை இருந்தால்
எனக்கு எவ்வளவு இருக்கும்!
--
'போதும் பார்த்தது
கண் பட்டுவிடப்போகிறது' என்றாய்
ச்சே...ச்சே..உன்னைப் பார்த்தால்
என் கண்களாவது பட்டுப் போவதாவது
துளிர்த்துக்கொண்டல்லவா இருக்கின்றன.
மௌன பூகம்பம்
அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்
பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.
அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.
நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?
மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!
இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!
"நீயும் என்னைக்
காதலித்தாயா?"
-வைரமுத்து
அப்பா அம்மா காதல்
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்!
அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது.
ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பன்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா என்றேன்.
அய்யோ பாவம்! என்றார் அப்பா.
ஏம்ப்பா..?
டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வெச்சு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... ‘சரிதான் போடீ!’னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல ‘காதலிக்கலாமா... வேண்டாமா?’னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க! என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?’ என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!