ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2008
நீயில்லாத நாளில்...
நேற்றைய தினத்தில்
என்னுடனோ
எனக்கென்றோ
எவருமில்லை....
நானும் எவர் நினைவிலும்
சென்றிருக்கவில்லை...
நான்.. நான்.. நான்
மட்டுமேயிருந்தேன்
முற்றுப்புள்ளிகளற்ற
மெளனம் ஒன்று
நாள் முழுக்க
நீண்டபடியேயிருந்தது
முடிவற்று...
உன் வெற்றிடங்களை
எப்போதும்
நிரப்பிக் கொண்டிருப்பதாய்
உன்னால் சிலாகிகக்கப்பட்ட
என் சொற்களும் கூட
இலக்கற்று அலைந்து
மூடப்பட்ட உன் கதவுகளில் மோதி
உடைந்து திரும்பின..
உரக்கச் சத்தமிட்டு
ஓடித்திரியும் பிள்ளைகளாய்
என்னைச் சுற்றிவந்த
நினைவுகள் சிலவற்றில்
உன் பெயருமிருந்தது.
ஒருவேளை...
உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்...
தொலைவில்...
வானம் முடியும் ஒரு புள்ளியில்
நொடிக்கொரு வண்ணம் காட்டி
பிரித்தறிய முடியா நிறங்களை
என்முகத்தில் அள்ளித்தெளித்தபடியே
மிச்சங்கள் ஏதுமின்றி
மறைந்துபோனது பகல்
உன்னைப் போலவே....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
"உன் பெயர் சொல்லிக்கொண்டு
துண்டு மேகமொன்றோ
சிட்டுக்குருவியொன்றோ
வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்
ஜன்னல்களினூடே
நானுமோர் கம்பியாய் நின்றிருந்தேன்
வெகுநேரம்..."
இதை வேறெங்கோ வாசித்திருக்கிறேன் றிசாந்தன்.
இங்கு எனதும் எனக்கு பிடித்த கவிதைகளே தொகுக்க படுகின்றது என்று தலைப்பிலேயே
சொல்லி விட்டேனே . இது எனக்கு பிடித்த கவிதைகளில் ஒண்டு.
கருத்துரையிடுக