ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்



புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை - அதைவிட்டொழித்தால் தவழுமே புன்னகை

கருத்துகள் இல்லை: