தொடர்ச்சி....
பகுதி 03
இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும். அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தனர்.
இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.
1958 இனக்கலவரம்
1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள "ஸ்ரீ' சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரிப் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி வீசப்பட்டது. இதனால், நாடு முழுவதும் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர்.
இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது.
தமிழாராய்ச்சி மாநாடும் தாக்குதலும்
1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.
1974 ஜனவரி 10 ஆம் நாள் மாநாட்டில் புகுந்த பொலிஸார் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். எந்தவித காரணமும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 9 தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இது மற்றொரு இனரீதியான ஒடுக்குமுறைத் தாக்குதலாகும். இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இடம்பெற்றது.
1977 இன் இனக்கலவரம்
ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான மற்றொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக் கலவரம் ஒன்று வெடித்தது.
இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு, இடம்பெயர்ந்தனர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.
1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாத இனக்கலவரம்
இதேபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது, ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றொரு துயரச் சம்பவமாகும்.
ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது.
96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?
யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன், 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.க.வில் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் நாம் நினைவு கூரத்தக்கது.
கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இனவன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா?
தொடரும்...
ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக