ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 9 ஆகஸ்ட், 2008

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

தொடர்ச்சி....

பகுதி 02



ஐரோப்பியர் இலங்கையை ஏறத்தாழ 450 வருடகாலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் 1796 இல் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர் 1815இல் கண்டி உட்பட முழுநாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இவர்கள் அதிகாரம் செலுத்திய காலத்திலேதான், இரண்டு இனங்களுக்கிடையிலான இனவன்முறை மோதல் முதன் முதலாக நடைபெற்றது.

இது முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையிலான கலவரமாகும். எனவே, முதல் இனரீதியான அடி தமிழருக்கு அல்ல, மாறாக 1915 இல் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதென்பது உண்மை.

1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1835 இல் அரசாங்க மொழி பெயர்ப்பாளராக இருந்த சிங்களவர் ஒருவர் மற்றும் தமிழர், பறங்கியர் இனங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர். இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பது மற்றோர் முக்கிய விடயமாகும். இந்தச் சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டித் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ, 1910 இல் பிராந்திய பிரதிநிதித்துவத்தினை இலங்கையர் கோரலாயினர். இக்கோரிக்கையினை ஆங்கிலம் கற்ற வகுப்பினர் மேற்கொண்டனர். இதற்காக அகிம்சைப் போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். 1833 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம். 1910 -1915 இல் இக்கிளர்ச்சி தீவிரமடைந்திருந்தது.

1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றிச் செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்த சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால், இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது இந்தக் கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது. எது எவ்வாறாக இருந்தபோதும், சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமடைந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.

இதனால் சிங்கள முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட் தோமஸ் அச்சமும் ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார்.

எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம் பதிரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன. தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது.

ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலானதாக அமைந்த போதும் அவற்றினை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள், சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இனவன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தொடரும்....

கருத்துகள் இல்லை: