ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 9 ஆகஸ்ட், 2008

இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்

பகுதி 01

ஆதாரம் : வீரகேசரிஎமது நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்குப் பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்குக் கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு.

காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றை அறிய உதவும் நூல்களில் மகாவம்சம் முதன்மையானது. இந்நூலின் கூற்றுப்படி கி.மு. 06 ஆம் நூற்றாண்டின் பின்பே இங்கு மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்த குடியேற்றங்கள் வட இந்தியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்ல, ஆரியர் என்ற இனத்தவர்களே இங்கு முதலில் குடியேறினர் என்பதும் மகாவம்சம் தரும் தகவலாகும். ஆனால், ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன.

ஆரியர் வருகைக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களை அமானுஷர் என்று (நாகரிகமடையாதவர்) மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அமானுஷர்கள் யார்? என்பதனை ஆய்வாளர்கள் தொல்லியல், மானிடவியல், வரலாறு ரீதியாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திராவிடர் என்பதனைத் தற்காலத்தில் நிறுவியுள்ளனர்.

மகாவம்சத்தை எழுதிய மகாநாமர், தன் இனம் (சிங்களவர்), தன்மதம் (தேரவாத பௌத்தம்), தன்மொழி (சிங்களம்) என்பனவற்றின் மீது கொண்ட உயர்ந்த பற்றுக்காரணமாக, பக்கச்சார்பான கருத்தை இந்நூலின் மூலம் வெளியிட்டுள்ளார். இவை மறுக்கமுடியாத உண்மை. எனவேதான், தான் சார்ந்த இனம், மதம், மொழி என்பனவற்றை உயர்வாகக் காட்டிய அதேவேளை, தமிழர்கள் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொடுத்து அவர்களைப் புறந்தள்ளி சிங்களவர்களை உயர்வாகக் காட்ட முற்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, குறித்த காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களின் மதம், மொழி, பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாகக் காட்டியுள்ளார். அதாவது, கி.மு. 247 இல் பௌத்தம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடைந்தனர் என்ற கருத்துப்படக் கூறியுள்ளார். அக்காலத்தில் காணப்பட்ட ஏனைய மதங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து தேரவாத பௌத்த மதம் தொடர்பான தகவல்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.

பௌத்த மதத்தில் தேரவாதம், மகாஜனம் எனும் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மகாவிகாரையை மையமாகக்கொண்டு வளர்க்கப்பட்ட, தான்சார்ந்த தேரவாத பௌத்த பிரிவு பற்றிச் சிறப்பித்து மகாநாமதேரர் குறிப்பிட்டுள்ளார். அபயகிரி விகாரையை மையப்படுத்திய மகாஜன பௌத்த பிரிவு பற்றியோ, ஏனைய மதங்கள் பற்றியோ உண்மையான தகவல்களை அவர் மறைத்து விட்டார்.

இதேபோன்றுதான் தமிழ் மன்னன் எல்லாளன் என்பவருக்கும் துட்டகைமுனுவுக்குமிடையில் நடைபெற்ற அரசியல் ரீதியான ஆதிக்கப் போராட்டத்தைத் தமிழருக்கும் சிங்களவருக்குமிடையில் நடைபெற்ற இனப்போராட்டமாக மகாநாமதேரர் காட்டியுள்ளார். உண்மையில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாட்டில் இன, மத, மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறிக் கொள்ளலாம்.

துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மகாவம்சம் தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் போன்ற வரலாறு, தொல்லியல் துறைசார் ஆய்வாளர்கள், இந்த யுத்தம் இன, மத, மொழி ரீதியாக நடந்ததற்குச் சான்றுகள் இல்லை என்றும் மாறாக அரசியல் ஆதிக்கமே பிரதானமாக இருந்ததென்றும் காட்டுகின்றனர்.

எனவே, இனரீதியான வன்முறைகள் 1915 இன் வரை நடைபெற்றதாகத் தெரியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்கமே காலத்துக்குக் காலம் யுத்தங்கள் நடைபெறப் பிரதானமான காரணமாக இருந்தன என்பது நோக்கத்தக்கது.


தொடரும்....