ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி



சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமாதிகளை கட்டுவதற்கு விடுதலை புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 27 கிலோமீற்றர் 18கிலோமீற்றர் என நீளங்களை அளவிடும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் மறுபுறத்தில் விடுதலை புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோமீற்றரை தூரத்தை கணக்குப் போடதவறிவிட்டார்.
நீண்ட காலம் பொறுமையோடு, நீண்ட காலம் அமைதியைக்காத்துவிட்டோம். இந்த அமைதி நிச்சயமாக ஒரு பயங்கர போராக வெடிக்கப் போகின்றது.

கிழக்கு மாகாணத்தை கைபெற்றியது போன்று வன்னிப் பிரதேசத்தையும் கைப்பெற்றிவிடலாம் என்ற அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் கனவு பொடிப்பொடியாக சிதறும் காலம் மிகவும் அண்மையில் நெருங்கிவிட்டது.
மணலாறு தொடக்கம் மன்னார் வரையும் மற்றும் முகாமலை, நாகர்கோவில் பகுதிகளில் கடும் போர் இடம்பெற்றுவருகின்றது. விடுதலை புலிகளின் பொறிக்குள் அகப்பட்டுள்ள படையினர் கண்பிதுங்கி தவிக்கின்றனர். அத்துடன் தன்னை தானே சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனையும் காணலாம்.

இராணுவ நடவடிக்கையின் போது எப்பகுதியிலும் சண்டை செய்யமுடியாத நிலையிலும், முன்னேற முடியாத நிலையிலும் உள்ள படைத்தரப்பினர்க்கு கடந்த காலங்களிலும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி இராணுவ உதவிகளையும், நிதி உதவிகளையும், இராணுவத்தளபாடங்கள், தொழில்நுட்பங்களை கோரி உலக நாடுகளை கையேந்துவது வழக்கமாகிவிட்டது.

ஆனால் எமது போராட்டம் எங்களுடைய தேசிய தலைவரான மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வன்னி மண்ணில் நின்று சகல படைக் கட்டுமானங்களையும், நன்கு பயிற்சி பெற்ற படையணிகளையும், கொண்டு சிறிலங்கா இராணுவத்திற்கு மாத்திரமல்ல உலக வல்லரசுகளுடன் போராடிக் கொண்டு உள்ளதை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் அடிநாதமாக விளங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன்.

உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் எதுவாக இருந்தாலும் தனியான விமானப் படை ஒன்றை அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் அது விடுதலை புலிகளையே சாரும் இதனையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எங்களுடைய தனியரசை சர்வதேசம் கட்டாயம் அங்கிகரிக்க வேண்டும். அவ்வாயின்றி சர்வதேசம் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடிக்குமானால் நாம் எமது தேசிய தலைவரின் காலத்தில் தனியாக பிரிந்து செல்வதைவிட வேறுவழியில்லை.

அதன்பின்னர் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் உருவாகும் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். போர்முனையில் உள்ள போராளிகள் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் மறுநாள் தமிழீழம் மலரும்.

அதேபோன்ற வென்றெடுக்கும் தமிழீழத்தை சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள் இவ்வாறான பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலமாக பொங்கி எழுந்து வெளிக்காட்ட வேண்டும்.

எனவே விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவை இந்நாட்டு சட்டத்திற்கு இணைவாக செயல்பட்டு சிறிலங்கா படையினதும், அரசாங்கத்தினதும் தமிழர்க்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள், கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: