ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

மீண்டும் சுஜாதா


சுஜாதா பற்றிய இரங்கல் கட்டுரைகளைப் படிக்கும் துர்ப்பாக்கியத்தை விரும்பியே ஏற்றுக் கொண்டேன். விரும்பி ஏற்றுக் கொண்ட காரியத்தில் நொட்டாரம் சொல்லக் கூடாது. ஆனாலும் இவ்வளவு கொடுமையான இரங்கல் கட்டுரைகளை என் வாழ்நாளிலேயே படித்ததில்லை. கெட்டதிலும் நல்லது என்னவென்றால் , இந்தக் கருமத்தையெல்லாம் படிக்க வேண்டிய சோதனை சுஜாதாவுக்கு ஏற்படவில்லை.

சில கட்டுரைகளில் ப்ளாக் ஹ்யூமரும் தெரிந்தது. உதாரணம் , பழமலை. "(சுஜாதா வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம்) அவரை விட அம்மையார்தான் (திருமதி சுஜாதா) என்னுடன் அதிகம் பேசுவார். அது , அவர் எழுத்துகளைப் பற்றி நாங்கள் எங்களுக்குள் பேசுவதாக இருக்கும். சுஜாதா ஒட்டுக் கேட்பவர் போல உட்கார்ந்திருப்பார். அது வேடிக்கையாக இருக்கும்!" அது வேடிக்கை இல்லை ஸ்வாமி! உங்களை சுஜாதா செய்த teasing அது! உங்களைப் பற்றிய சுஜாதாவின் நையாண்டி அது! அடடா...இந்த சுஜாதாதான் எப்பேர்ப்பட்ட கள்ளனாக இருந்திருக்கிறார். பழமலை போன்ற ஒருவரிடமிருந்து தப்பிக்க என்ன ஒரு சுலபமான வழி பாருங்கள்!

அப்புறம் இந்த வண்ணதாசன். இவர் சுஜாதா வீட்டுக்குப் போனாராம். சுஜாதாவின் சகதர்மிணி காப்பி போட்டு கொடுத்தாராம். பிறகு சுஜாதா இவர் புதல்வரின் திருமணத்துக்கு வந்தாராம். "ஆஹா , நல்ல ஜோடி!" என்று பாராட்டினாராம். அவ்வளவுதான். இதற்குப் பெயர்தான் இரங்கல் கட்டுரை. உயிர்மையில் வெளிவந்திருக்கிறது. இதையெல்லாம் பிரசுரித்துத் தொலைய வேண்டிய கஷ்டகாலம் மனுஷ்ய புத்திரனுக்கு. ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தால் என்னென்ன துன்பத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஏனுங்கோ அண்ணாச்சி. கடந்த 45 வருடங்களாக ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் எழுதி வந்த சுஜாதாவிடமிருந்து உங்களுக்குக் கிடைத்தது ஒரு கப் காப்பி தானுங்களா ? வேறு எதுவும் இல்லையா ? ஷேம் ஷேம் வெரி ஷேம்.

ஜெயமோகன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே சாரு. பாவம் , ஜெயமோகனுக்கு நாக்கில் சனி. எம்ஜியார் , சிவாஜி பற்றி வாய்க்கு வந்ததை உளறி வைத்து விட்டு இப்போது சினிமாக்காரர்களால் பிரஷ்டம் செய்யப்பட்டு ஆற்றாமையில் கிடக்கிறார். நான் வணங்கும் பாபாதான் இந்த சினிமாக்காரர்களின் கண்களைத் திறந்து ஜெயமோகனையே எல்லாப் படங்களுக்கும் (விஜய டி. ராஜேந்தர் படம் உட்பட) வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தர வேண்டும்.

அசோகமித்திரன். இவருடைய இக்கினியூண்டு உடம்புக்குள் புகுந்து கொண்டு அந்த இட்சிணி போடும் ஆட்டம் இருக்கிறதே..அடடா , அதை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

அசோகமித்திரன் கணையாழியில் 40 ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். அதில்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுஜாதா கடைசிப் பக்கங்களை எழுதினார். ஒரு வகையில் இருவரும் சகாக்கள். அப்படிப்பட்டவர் சுஜாதாவின் மரணத்திற்கு எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை என்ன தெரியுமா ? " சுஜாதா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது என்னிடம் ஒரு கேமரா இருந்தது. அந்தக் கேமராவில் நாங்கள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்." ஐயா , என்னை நம்புங்கள். அவ்வளவுதான் இரங்கல் கட்டுரை.

இப்படி ஒரு இரங்கல் கட்டுரை வேறு எந்த எழுத்தாளருக்காகவும் , உலகில் வேறு எந்த மொழியிலும் எழுதப் பட்டிருக்காது என்று நினைக்கிறேன். இருக்கட்டும் , எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது ? ' நான் அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் ஒரு பூனை வளர்த்தார். அது என்னைப் பார்த்து மியாவ் என்று சொன்னது. நானும் மியாவ் என்று அதனிடம் சொன்னேன். ' எழுதுகிறேனா இல்லையா என்று பாருங்கள் அசோகமித்திரன்.
நன்றி : சாருநிவேதிதா

கருத்துகள் இல்லை: