கல்கியில் சுஜாதா எழுதிய மத்யமக் கதைகள் என்ற சிறுகதைத் தொடரில் தலித்துகளை அவமானப் படுத்தி எழுதியிருக்கிறார் என்றார் அழகிய பெரியவன். சுஜாதாவிடம் இப்படி ஒன்று அல்ல ; பல தவறுகள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் 3000 பேர் சுல்தான் படையெடுப்பில் கொல்லப் பட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா.
வரலாற்றில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இதைக் கண்டித்து நான் தனியாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பிராமணர் சங்கத்தில் கொடுத்த விருதை அவர் பெற்றுக் கொண்டதையும் நான் கண்டித்து எழுதினேன். தமிழில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்திரனும் , சுஜாதாவும். ஆனால் இவர்கள் இருவரின் அரசியல்/சமூகக் கருத்துக்களை எதிர்த்து அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். அதனாலேயே நான் சுஜாதாவுக்கு எதிர் முகாமில் இருப்பவன் என்பது போன்ற ஒரு தோற்றமும் வந்து விட்டது.
எந்த ஒரு கலைஞனும் political correctness- ஓடு தான் இருந்தாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அடிக்கடி நான் சொல்லி வருவது போல் மரியோ பர்கஸ் யோசா ( Mario Vargas Llosa) ஒரு வலது சாரி. ஹிட்லரை ஆதரித்த இசைக் கலைஞர்களும் , எழுத்தாளர்களும் , தத்துவவாதிகளும் மிகப் பலர். சமீபத்தில் ஆனந்த விகடனில் சுஜாதா எழுதிய ' எப்படியும் வாழலாம் ' என்று ஒரு சிறுகதை படித்தேன். கார்ஸியா மார்க்கெஸ் எழுதிய சிறுகதைகளுக்கு ஒப்பான ஒரு சிறுகதை அது. அதை எங்கே கொண்டு போய் வைப்பது ? கல்கியில் தலித்துகளுக்கு எதிராக எழுதி விட்டார் என்பதற்காக இந்தச் சிறுகதையைக் குப்பை என்று பொய் சொல்ல முடியுமா ?
இந்தப் பிரச்சினை பற்றி உலக அளவில் ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன.
இந்தப் பிரச்சினை பற்றி உலக அளவில் ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன.
உதாரணமாக , ரிச்சர்ட் வாக்னர் ஒரு யூத வெறுப்பாளராக இருந்தவர். அவர்தான் ஹிட்லரின் ஆதர்சம். ஆனால் வாக்னரின் இசை , மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் உச்சங்களில் ஒன்று. இதற்கு என்ன செய்வது ? வாக்னர் யூத வெறுப்பாளராக இருந்தார் என்பதால் அவர் இசையைக் கேட்க மாட்டேன் என்றால் நஷ்டம் வாக்னருக்கு அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல. 2002- இல் Impac விருது பெற்ற Michel Houellebecq என்ற பிரமாதமான ஃப்ரெஞ்ச் எழுத்தாளன் கூட ஒரு முஸ்லீம் வெறுப்பாளன்தான். அவனுடைய நாவல்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே முஸ்லீம்களாக சித்தரிப்பான் வூல்பெக். ஐரோப்பாவில் நிலவி வரும் இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுபர்கள் ஒரு சிறுபான்மையினர்தான். எல்லா ஐரோப்பியர்களும் அப்படி அல்ல. அப்படிப் பட்ட இஸ்லாமிய எதிர்ப்பாளர்களில் ஒருவன்தான் மிஷெல் வூல்பெக். இப்போது ஃப்ரான்ஸில் வாழ்ந்தால் கொல்லப்படலாம் என்று அயர்லாந்தில் வசித்து வருகிறான். இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்பதற்காக அவனை நான் நிராகரித்து விட மாட்டேன்.
அடிப்படையில் சுஜாதா ஒரு மகத்தான படைப்பாளி. அதுதான் முக்கியம். அரசியல் காரணத்தைச் சொல்லி அவரை நிராகரித்தால் இழப்பு நமக்குத்தான்.
நன்றி : சாருநிவேதிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக