ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

கமலும் நானும்






கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)
பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)


கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.


மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது.



ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).


சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.
ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது.



27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி
ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.
ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.


கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.
இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.
***
நன்றி : சாருநிவேதிதா


கருத்துகள் இல்லை: