ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

ரஜினி - கமல்



உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரையுலகில் நுழைகிறார். கமலின் சில படங்களில் ரஜினி வில்லனாக நடித்து, தனது ஸ்டைலால் மக்களை கவர்ந்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் டயலாக் டெலிவரி அனைவரையும் கவர்ந்தது.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த

ரஜினி பைரவி படம் மூலமாக தமிழில் ஹீரோவாகவும் ஆனார். படத்தின் போஸ்டர்களில் முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. அந்நேரத்தில் எஸ்.பி.முத்துராமனின் ஆடுபுலி ஆட்டம் படத்தில் கமல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லனாக ரஜினியை நடிக்கவைக்க எஸ்.பி.எம். நினைத்தார். ஹீரோவாகிவிட்ட ரஜினியிடம் எப்படி கேட்பது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது.

விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி எஸ்.பி.எம்.மை தொடர்புகொண்டு “நீங்க இயக்குற படம், என் நண்பன் கதாநாயகனா நடிக்கிற படம், நானில்லாமலா? படத்தை தொடங்குங்க சார்.. நடிச்சிக் கொடுக்கறேன்” என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் ரஜினி!அதன்பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முடிந்த நேரம் அது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு போய்விட்டார், சிவாஜி தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இரு ஹீரோக்களின் வெற்றிடத்தை கமலும், ரஜினியும் சரியாக இட்டு நிரப்பினார்கள். இனிமேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதுபோல சேர்ந்து நடிப்பது தனித்தனியாக இருவரின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்தார்கள்.

எதிர்காலத்தில் தங்கள் இருவரில் யாராவது ஒருவர் தயாரித்தே மற்றவர் நடிக்க வேண்டும் என்றும் பேசி வைத்துக் கொண்டார்கள். இன்றுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவெடுத்த பின்னும் ரஜினி கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு சின்ன காமெடி வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார். அது இருவரின் குருவான பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படம் ‘தில்லு முல்லு'. ரஜினி முதன்முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் அது.

பொதுவாக ரஜினி படம் ஓடும் நேரத்தில் கமல் படம் வெளியானால் அது தோல்வி அடையும் என்று ஒரு மூடநம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. ராஜாதிராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது வெளியான அபூர்வசகோதரர்கள் வரலாற்று வெற்றி கண்டது. பாண்டியனோடு ஒரு தீபாவளிக்கு வெளியான தேவர்மகன் வெள்ளிவிழா கண்டது. பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது.கமல் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர்களிடம் ரஜினி அடிக்கடி விசாரிப்பார். படம் தயாராக தயாராக அவ்வப்போது ‘ரஷ்' போட்டு பார்த்து மகிழ்வார். ரஜினியின் இந்த வழக்கம் தசாவதாரம் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘கல்லை மட்டும்' பாடல் தயாரானதுமே கே.எஸ்.ரவிக்குமார் முதலில் சொல்லி அனுப்பியது ரஜினிக்கு தான். எடிட்டிங் ரூமில் அப்பாடலை பார்த்த ரஜினி எழுந்து நின்று வெகுநேரம் கை தட்டினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.



கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பு தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக சிலாகிக்கப்படும் நாற்பதாண்டு காலநட்பு. அந்நட்புக்கு பிறகு அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்.

நன்றி : லக்கிலுக்

கருத்துகள் இல்லை: