ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

புதன், 2 ஜூலை, 2008

எதிர்பாராத திடீர் பயணமும் எதிர்பார்க்கப்படும் தேர்தலும்ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டிற்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோரின் இரண்டு நாள் திடீர் இலங்கை விஜயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது.

அதேவேளை இப்பயணத்தின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய நாடõளுமன்ற தேர்தல் குறித்தும் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.இந்த மூன்று இந்திய உயர்நிலை அதிகாரிகளின் ஒன்றிணைந்த வரவு மறுபடியும் இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கான முதற்படியாக இருக்கலாமென்கிற ஊகமும் உருவாகியுள்ளது.

வருகை தந்த அறிவுக் கூட்டம், சந்தித்த நபர்கள், சந்திக்காமல் தவிர்த்த பிரமுகர்கள் பற்றியும் காரசாரமான விவாதங்கள், கொழும்பில் ஒற்றைப் பார்வை தளத்தினூடாக நடத்தப்பட்டுள்ளது.இந்திய இலங்கை உறவில் கேந்திரப் பாதுகாப்பும் சர்வதேச உறவு நிலையும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விடயங்களுமே முக்கியத் துவமாகின்றன என ஓய்வுபெற்ற இந்திய அதிகாரி கேணல். ஹரிஹரன் திடமாக நம்புகிறார்.

அவர் பார்வையில், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலவீனமடைவதாகவும் அதனை முழுமையாக நம்பும் இலங்கை அரசு, ஆயுதங்களைப் புலிகள் ஒப்படைத்தால் மட்டுமே தீர்வு குறித்து பேச வருமென்கிற வகையில் தெளிவான கருத்தொன்று முன்வைக்கப்படுகிறது.அதாவது இந்த மூன்று அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லையென்பதே ஹரிஹரனின் பார்வையாக அமைகிறது.

அதேவேளை, இந்திய நிலைப்பாடு குறித்த ஈழத்தமிழர்களின் பார்வையை மிகக்காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் இந்தியப் போக்கில் மாறுதல் ஏற்படவேண்டுமென்கிற வகையில் தனது கருத்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியா எமது பிரச்சினையில் தலையிட்டு எமக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென சம்பந்தன் கூறினாலும், அவ்வகையான தீர்வொன்றினை நோக்கி இலங்கை இழுத் துச் செல்லும் நிலையில் இந்தியா இருக்கிறதா என்பதையும் அவர் உணர வேண்டும்.

அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் திருமலைக்குள் நுழையக்கூடாது. சீனா பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்கக்கூடாதென தனது பிராந்திய நலனை மட்டும் முதன்மைப்படுத்தும் இந்திய வல்லரசு, தமிழ் மக்களின் நலனிற்காக இலங் கையுடன் முரண்படுமா வென்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரச்சினை உருவானால் உள்நுழையும் வாய்ப்புக் கிட்டுமென 80களில் எதிர்பார்த்த இந்தியா, உருவாக்கிய பிரச்சினை பல வரலாறுகளை மேலதிகமாக உள்நுழைத்து விட்டதென தற்போது கவலைப்படுகிறது.ஏற்கனவே நீண்டகாலமாக புரையோடிப் போயிருந்த இனச்சிக்கலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தியா மேற்கொண்ட இராஜ தந்திர குளறுபடிகள், விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட மோதலுடன் ஓய்விற்கு வந்தன.

தற்போது கைவிட்டுச் செல்லும் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பிரச்சினையில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பை பலவீனமாக்கும் காரியத்தில் ஈடுபடுவதே ஒரே தெரிவாக இருக்குமென இந்தியா கருதுகிறது.

இக் கருதுகோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அதன் வெளியுறவுக் கொள்கை மிகவும் தடுமாற்றமானதொரு தளத்தினை தற்போது வந்தடைந்துள்ளது.இத்தகைய சிந்தனைத் தடுமாற்றங்களை, அந்நாட்டின் முன்னாள் கொள்கை வகுப்புக் கோமான்களின் ஆய்வுகளில் தெளிவாகக் காணலாம்.

விடுதலைப் புலிகள், படை வலுவில் பலவீனமடைந்துவிட்டார்களென்று திரும்பத் திரும்பக் கூறுவதன் ஊடாக, வலிந்த தாக்குதல்களை முன்னெடுக்குமாறு மக்களிடமிருந்து அழுத்தமொன்று புலிகளை சென்றடைய வேண்டுமென்பதே இந்த உளவியல் சமர் கூறும் செய்தி.மாதக்கணக்கில் நீளும் வன்னி முற்றுகை, பாரிய திருப்பங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லையென்கிற பெருங்கவலையும் இவர்களுக்கு உண்டு.இந்த விஜயத்தின் பின்னணியில் தெளிவான உள்நாட்டு அரசியல் சார்ந்த நகர்வொன்று தென்படுகிறது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு விடுத்த அழைப்பு இந்நகர்வின் தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், முன்பு இழுபறிபட்டது போன்று தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் அனுசரணை இல்லாமலேயே டெல்லிக்கான அழைப்பினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்.ஆகவே தனது தீவிர முயற்சியாலேயே கூட்டமைப்பு டெல்லிக்குச் செல்கின்றது என்கிற மலிவான அரசியலை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முடியாது.

அதேவேளை இந்தியாவில் மற்றுமொரு பொதுத்தேர்தல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகுவதாக அரசியல் அவதானிகள் ஆரூடம் கூறுகின்றனர்.நித்திய விரோதி அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்தால், ஆட்சிக்கு வழங்கும் நாற்காலி ஆதரவினை அகற்றப் போவதாக இடதுசாரிகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளனர்.இடதுசாரிகளுக்கும் காங்கிரஸிற்கும் இடையே சமரசம் செய்ய தமிழ்நாட்டின் தமிழினத் தலைவர் ஓடித்திரிவதிலும் அதிகாரத்தை தக்க வைக்கும் அவசரம் தெரிகிறது.ஆயினும் இடதுசாரிகளின் ஆதரவு கைநழுவிப் போனால், முலாயம் சிங் யாதவ் என்பவரே கடைசிக் கந்தாயமாக இருப்பார்.

வெளியுறவுக் கொள்கைகளைப் பார்க்கிலும் அதிகார நாற்காலியே பெரிதென்பது முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கு சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல.ஆகவே, அதிகாரம் பறிபோகாமல் இருப்பதற்கு எவருடனும் சமரசம் செய்யவோ அல்லது கூட்டுச் சேரவோ அரசியல்வாதிகள் தடுமாற்றமடைவதில்லை.

ஏற்கனவே குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அண்மையில் நடந்த கர்நாடகத் தேர்தலில், தமிழினத் தலைவர் ஒகேனகல் திட்டத்தை ஓரமாக வைத்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.“பட்ட காலிலே படும்’ என்பதுபோல், சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் மக்களை நேரடியாக வாட்ட ஆரம்பித்துள்ளன.தற்போதைய நிலையில் எந்த நாட்டில் இடைத்தேர்தல் வந்தாலும், ஆளும் கட்சி தோல்வியடைவது எண்ணெய் விலையேற்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் ஆதரவினை இலகுவில் இழக்க, மத்தியில் கூட்டாட்சி புரியும் காங்கிரஸ் விரும்பாது.தமிழ் நாட்டுக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பா.ம.க. வை மத்தியில் இருந்து அகற்றும்படி காங்கிரஸிற்கு அழுத்தம் கொடுக்க கருணாநிதியால் இன்றைய நிலவரப்படி முடியவே முடியாது.

இலங்கையிலிருந்து எதிர்மறையான அழுத்தங்கள் வராமல் இருப்பதற்கும் மத்திய அரசிற்கு உதவி புரிவதாக எண்ணியும் அகதிகளின் குடிசன மதிப்பீட்டினை தமிழ்நாட்டில் கலைஞர் நிகழ்த்தலாம்.அதாவது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நகர்வுகளை கண்காணிக்கும் மாபெரும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் புலிகளுக்கான ஆயுதக் கடத்தல் தமிழ்நாட்டிலிருந்து இனி இல்லையென்பதை இலங்கைக்கு தெரிவிப்பதற்கே இந்த “வீட்டு நாடகம்’ அரங்கேறுகிறது.டெல்லிக்கு வருமõறு சம்பந்தருக்கு இந்தியா விடுத்த அழைப்பால், தமிழ் மக்கள் ஆனந்தப்படுவதாக அதிகாரிகள் நம்பலாம்.

ஆகவே இந்த விஜயமானது அதிகாரத்தைத் தக்கவைக்க, அதிகாரிகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் திருவிளையாடல்களின்ஒரு பகுதியாகவே பார்க்கலாம்.ஈழப் போராட்டம் நசுக்கப்பட்டால் இந்திய அனுசரணையானது இலங்கைக்கு தேவையல்ல வென்பதும் இந்த அதிகாரிகளுக்கு புரியும்.வினை விதைத்து தினை அறுக்க முடியாது.

நன்றி : இதயச்சந்திரன்

கருத்துகள் இல்லை: