ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

வியாழன், 3 ஜூலை, 2008

ஊரிலை மட்டுமில்லை..

அண்மைக் காலங்களில் அதிகமாக எம்மிடையேயான பெரும் தலைவலியான விடயங்களாக தென்னிந்தியத் தமிழ்ச்சினிமாவும், வருடக்கணக்கில் இழுபட்டு அரைத்தமாவையே திருப்பித் திருப்பி அரைத்து அலுப்பையும் ஆளுமைகளைத் தகர்த்துவிடுகிற போதைவஸ்தாகவும் எம்மை ஆளுகின்ற சின்னத்திரைத் தொடர்கள் என்பனவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தாயகத்திலிருந்து வெளியாகிய பல கட்டுரைகளிலிருந்து எங்கள் கிராமங்கள் வரையும் சினிமா, சின்னத்திரையின் ஆதிக்கம் என்பன எத்தகைய தாக்கத்தை நமது சமூகத்தில் பரவிவிட்டுள்ளது என்பதற்கு ஆதார சாட்சிகள் கிடைக்கின்றன.

அண்மையில் எழுத்தாளர் குந்தவை அவர்கள் எழுதிய கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. யாழ் முதல் தமிழர் தாயகப் பிரதேசங்கள்வரை சின்னத்திரை நாடகங்களும், சினிமாப்படங்களும் எத்தகைய ஆளுமைகளைச் செலுத்துகின்றன என்பதனை மிகுந்த வேதனைகளுடனும் அனுபவப்பதிவுகளுடனும் பலவிடயங்களைச் சாட்சியப்படுத்தி எழுதியிருந்தார் குந்தவை அவர்கள்.

அக்கட்டுரையில் தமிழர் தாயகத்தில் ஆளுமை கொண்டுள்ள ஒளியுணர் சாதனத்தின் சீர்கேடுகளும் கணணியின் பயன்பாடு, அதன் தேவை தெளிவு நன்மைகளையெல்லாம் மறந்து வீசீடியிலும், டிவிடியிலும் திரைப்படம் மட்டுமே பார்க்கவும் பயன்படுத்தப்படும் கணணிகளின் பாவனைகள் பற்றியெல்லாம் கூறியிருந்தார் குந்தவை. அவர் கூறிய அதே நிலையில் புலத்துத் தமிழர்களும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அமிழ்ந்து போயுள்ள அவலத்தை எழுதென்ற உந்துதல் இந்தக் கட்டுரைக்குள் கால் பதிக்கக் காரணமாகிறது.


முன்பு, அதாவது தாயகத்தில் இருந்த காலங்களில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு சினிமாவின் வெற்றியைத் தீர்மானிப்பது பெண்கள் என்று. அப்போது அதன் விளக்கம் புரியாத புதிராகவே இருந்துவிட்டது. கடந்த எட்டு வருடங்களுக்குள் தொடர்ந்த தொலைக்காட்சி, வானொலிகளின் வருகையானது அன்றொருநாள் சொல்லக் கேட்ட சினிமாவின் வெற்றியின் பெண்களின் தீர்மானம் என்பதன் பொருள் இன்று நன்றாகவே புரிந்துள்ளது. ஏனெனில் அந்தளவுக்கு புலத்திலும் பெண்களும், இளைஞர்களும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் புகுந்து வெளியுலக வாசிப்பையோ, அறிதலையோ பெற்றுக் கொள்ளாது அல்லது விரும்பாது சினிமாவும், சின்னத்திரை நாடகங்களுமே அவர்களது கனவாகவும், காத்திருப்பாகவும் போயிருக்கின்ற அவலமானது நமது எதிர்காலச் சந்ததியின் இருப்பையே நெருப்பிடும் நிலையில் இருப்பது வேதனையன்றி வேறாக முடியாது.

இந்த அவலத்துக்குள்ளிருந்து நம்மத்தியில் பாட்ஷாக்களும், பாபாக்களும், தீனாக்களும், திருப்பாச்சிகளும், சச்சின்களும், கட்சிகள் அமைக்கும் அளவுக்கு நடிக நடிகையரின் பெயர்களில் சண்டைக் குழுக்களும் உருவாகி வெள்ளையர்கள் மத்தியில் தமிழரென்றால் மனநலம் குன்றிய, சிந்திப்புத் திறனை இழந்த வன்முறையாளர்கள் எனுமளவிற்கு தமிழரின் நிலைப்பாடு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

சினிமாவில் வரும் கதாநாயகர்கள் போன்ற நடை, உடை, பாவனைகள் மாற்றம் பெற்று வெட்டும், கொத்துமே பதில்களாகவும் பதியமிடல்களாகவும் ஆகிவருகிறது. இத்தகைய சினிமாவின் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சிறுதொகையை மட்டுமே காணமுடியும்.
'சினிமாவில் நல்லதை எடுத்து கெட்டதை விடுங்கோ' என்ற வாதங்களும், 'மக்கள் விரும்புவதை நாங்கள் கொடுக்கிறோம்' என சினிமா வட்டாரத்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பாடலாசிரியர்கள் எல்லோரும் தங்களது பணப்பைகளின் நிரப்புதலுக்கான சாட்டுதல்களைச் சொல்லிக் கொண்டிருப்பதும் காதுகளில் எட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

திரைப்படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதையம்சம், யதார்த்தம், நடைமுறைகளுக்கு உட்பட்டும் அப்பப்போது ஒருசில படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. எனினும் 100இற்கு 95 படங்கள் பெண்களை உரித்துப்போட்டு குளோசப்பில் பெண்ணை அமுக்கிப் பெண்ணின் அங்கங்களே அங்கு ஆதாரமாக அவர்களது மூலதனமாகவும் விற்கப்படுகிறது. இதில் கதாநாயகர்களின் 100பேரை அடிக்கும் வல்லமையும், சண்டியத்தனம் மிக்க சண்டியர்களுமே திரைப்படங்களை ஆளுமை செய்யும் ஆதாரங்களாக இருக்க, நல்லதை எடுத்து கெட்டதை எந்தக் கருவி கொண்டு தவிர்ப்பது?

இந்தச் சண்டியர்கள் போல தங்களையும் உருவாக்கி தங்கள் எதிர்காலத்தையே இழந்து போய் சிறைகளிலும், அங்கங்களை இழந்தும், மனநோயாளிகளானவர்களையும் கண்ணூடு பார்த்தும் அப்படித் தங்கள் வாழ்வை அழித்தவர்களின் நிலையின் உணர்வுகளின் உள்வாங்கலாகவும் இந்த வியாபாரச் சகதிக்குள்ளிருந்து விடுபடுதலுக்கான வழிகளை நமது ஊடகங்கள் நடைமுறைப்படுத்தலே சாலச் சிறந்ததாகும்.
கடந்த வருடம் நண்பரொருவர் பிரான்ஸ் லாச்சப்பலுக்குச் சென்று 3ம் நாளே திரும்பி வந்து சொன்ன சோகம் இது,

லாச்சப்பல் பகுதியில் கடையொன்றுக்குச் செல்லும் வழியில் நான்கு இளைஞர்கள் நின்றார்கள். அவர்களை இந்த நண்பர் ஊரில் அறிந்திருக்கிறார். அவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தியிருக்கிறார். கடையிலிருந்து வெளியில் வந்து சற்றுத் தூரத்தில் அந்த இளைஞர்கள் இவரைக் கூப்பிட்டு 'என்னத்துக்கு எங்களைப் பாத்துச் சிரிச்சனீ?' 'உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் இன்னாற்றை மகனெல்லோ' என அவர் கூறிமுடிக்க முதல் காதைப்பொத்தி அவருக்கு விழுந்த அடிக்கு அவரால் இன்னும் காரணம் காண முடியவில்லை.

பிரான்ஸ் பொலிசாரின் வடிகட்டலில் தற்போது இத்தகைய நடப்புக்கள் 90 விகிதம் குறைந்திருப்பினும் ஆங்காங்கு இத்தகைய அடிகள் விழுந்து கொண்டுதானிருக்கிறது. தற்போதைய பிரான்ஸ் நாட்டின் கடுமையான சட்டமானது இத்தகைய அடாவடித்தனங்கள் புரிவோருக்கு சட்டத்தால் சுருக்கிட்டிருப்பது நிம்மதிதான். லண்டன், டென்மார்க் ஆகிய நாடுகளில் சட்டமும் இத்தகைய வன்முறையாளர்களை வடிகட்டுதலில் சற்று அக்கறையின்மையாக இருப்பது பல்வகையான சிக்கல்களை, சமூகச் சீர்கேடுகளை நமது இளையவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

2002 லண்டன் சென்ற போது இலக்கியத் துறைக்குள்ளிருக்கும் ஒருவர் வேதனையுடன் தெரிவித்த சம்பவம். சவுத்தோல் பகுதியில் நடந்த விடயமது. இந்த அன்பர் தமிழ்க் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தமிழர் கடைகள் நெருங்கிய பகுதியொன்றின் வீதிக்கடவையில் 17 வயது மதிக்கத்தக்க யுவதியொருத்தி நிற்கிறாள். அவளைச்சுற்றி ஒரு இளைஞன் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சினிமாப்பாடலொன்றைப் பாடி அவளைக் கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருக்க அவனுக்குத் துணையாக ஒருவன் துணை ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தானாம். அந்த யுவதி சிரித்தபடி தெருக்கடவையைக் கடந்தாளாம். இந்தத்திருவிளையாடலைப் பார்த்திருந்த இந்த நபர், 'ஏன் தம்பி உப்பிடி ஆடிக்கொண்டு றோட்டிலை நிக்கிறீர் ? காதல் உதில்லை'யென விளக்கம் சொல்ல வெளிக்கிட, துணையாக ஆடியவன் வாளோடு வந்து, 'என்ன தேவைப்படுது?' என்றானாம்.

தப்பினது புண்ணியம் என அந்த நபர் இதுபற்றிச் சொன்னபோது சிரிப்பை உதடுகளுக்குள் புதைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, அவர் சொன்னார் 'தீனாவிலை அஜித் வந்தமாதிரியிருந்தது அவன்ரை வருகை'. இவை சில உதாரணங்களே. இன்னும் பல்லாயிரம் கதைகள் இந்தப்புலத்து நிலத்திலும்.
இளைஞர்கள் நிலை இப்படியிருக்க பெண்களின் நிலை இன்னும் ஒருபடி மேலாகவே இருக்கிறது. சின்னத்திரையே இவர்களது சீவனாகி சீனிவருத்தம், கொழுப்பு, உடற்பருமன் என நோய்களையும் வாங்கி நோயாளிகளாகவும் பலர். பெண்கள் பற்றிய கருத்தியலானது சின்னத்திரை, சினிமா இரண்டுமே ஒரேவகைதான்.

சினிமாவில் இரண்டரை மணித்தியாலத்தில் சொல்லிவிடும் விடயத்தை சின்னத்திரை 2-3 வருடங்கள் வரையும் இழுத்தடித்து பெண்ணின் வாழ்வு , வரைமுறையென்பது சமய, சம்பிரதாய, பிற்போக்குத்தனம் மிக்க அடையாளங்களை மட்டும் பிரதிபலிப்பதாகவும், பொறுமை, பூமிக்குப் பெண் சமானம் என்ற கருத்துக்களையே விதைத்துவிட்டு முடிவுகளைக் கொடுத்து விடுகின்றன. இதுவே தமது வாழ்வாக, வரைமுறையாக இந்த நூற்றாண்டிலும் கணிசமானளவு பெண்கள் இத்தகைய கட்டுப்பெட்டித் தனங்களுக்குள் முடங்கி தங்கள் பலத்தையே சின்னத்திரையென்ற சிறுகாட்சிப் பெட்டிக்குள் அழித்து விடுவது மட்டுமல்ல இவர்களது குழந்தைகளுக்கும் இதேபாடத்தையே ஒப்புவித்து எங்கள் இளைய தலைமுறையின் பெண்பிள்ளைகளையும் இன்னொரு நூற்றாண்டு பின்தள்ளியே வைத்து விடுகிறார்கள்.

தாவணிக்குள் தமிழ்க் கலாசாரத்தை தப்பாமல் போதித்துவிடும் எங்களது தாய்மார்களும், தந்தையர்களும் இங்கு பாடசாலைகள் ஊடாக சுற்றுலாச் சென்றாலோ, மேற்படிப்புக்குத் தூர இடம் சென்றாலோ கெட்டுப்போய் விடுவார்கள் என்ற உணர்வுடன் பெண்பிள்ளைகளின் ஆளுமைகள் மழுங்கடிக்கப்படவும் வழிகோலுகின்றது. இத்தகைய செயற்பாட்டில் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய பல பெண்பிள்ளைகள் ஊரிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆண்களுக்கு மனைவிகளாகி அம்மாவின் வழியில் மகளும் சண்தொலைக்காட்சிக்கும் தீபத்துக்கும் தீனியாகி விடுகிறார்கள்.

காசைவாங்கி திரையில் நடிக, நடிகையர்கள் அழுதுவிட்டுப் போக இவர்களோ காசைக்கொடுத்து அழுவதும் அதுவே தங்கள் வாழ்வாகவும் வரித்து, இந்த உலகின் இவர்களால் செய்யப்பட அறியப்பட வேண்டிய எத்தனையோ நல்லவைகள் அறியப்படாமலும் செய்யப்படாமலும் போய்விடுகிறது.
எமது பெற்றோர்கள் போதித்த தாவணிக்குள்ளான தமிழ்ப்பண்பாடு என்ற போதனையைக் கூட தளர்த்திவிட்டு ஒருபகுதி 'மன்மதராசாவுக்கும், ஈராக்கு யுத்தம், மேமாதம் 98இல் மேஜர் ஆனேனே...." இப்படி நிறையவே பெண்பற்றிய பச்சையான கொச்சைப் பாடல்களுக்கெல்லாம் சினிமாவில் எப்படி ஆடினார்களோ, அதேபோல் மேடைகளில் ஆடவைத்து மகிழ்வதில் அலாதிப்பிரியர்கள். கேட்டால் சொல்கிறார்கள். நாங்கள் இசையை ரசிக்கிறோம் அதில் என்ன தவறு? பாடசாலையுடன் சுற்றுலாச் சென்றால், மேற்படிப்புக்குத் தூரநகரம் சென்றாலோ அழிந்து போகுமென இவர்கள் அஞ்சும் தூய்மையானது இந்த மன்மதராசா ஆட்டத்தில் மாசுபட்டுப் போகாதா?

இந்த நாடுகளில் வயது வந்தோர்க்கு மட்டுமென்று குறிப்பிட்ட படங்களை வெளியிடுவார்கள். இத்தனை வயதுக்குக் குறைந்தவர் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. ஒளிநாடாக்களை வாங்கமுடியாது என்று விதிக்கும் தடைகளை இந்த நாட்டு ஊடகங்கள் தாண்டுவதில்லை. இதில் எங்காவது சில இடங்களில் மீறல்கள் நடந்திருக்கின்றன. இத்தகைய படங்கள் சிறுவர்களுக்கான நேரங்களில் ஒளிபரப்பப்படுவதில்லை.

எமது தமிழ்த் தொலைக்காட்சிகளோ இந்த வரையறையைக்கூடப் பின்பற்றுவதில்லை. எல்லா நேரமும் சின்னத்திரை நாடகங்கள், சினிமாப்படங்கள், பாடல்கள் என ஓயாது ஒளிபரப்புக்கள்தான். காலையில் விருப்பத்தேர்வு முதல் மாலை இரவுவரையுமான பாடல் தேர்வுகளை 5வயது 6வயது பிள்ளைகளே கேட்கவும் அதை ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்களும், எனது மகன் மன்மதராசா கேக்காட்டில் சாப்பிடவே மாட்டார் என்ற வழிசல்களும், உங்கடை குரலைக் கேட்டிட்டுச் சமைப்பமெண்டு வந்தனான் என்ற கொஞ்சல்களும் வீட்டில் இருக்கும் குழந்தை, துணை, உறவுகள் என்ற எவருமே நினைவில் நிற்காது ஒளித்திரையிலும், வானலையிலும் ஒலிக்கும் குரல்களுக்கு அடிமையாகி எத்தனையே குடும்பங்களின் ஆண், பெண் இருபாலரது 35ம் 40ம் தாண்டிய காதல்களால் எங்கள் இளம் தலைமுறையின் நிம்மதி எதிர்காலம் எல்லாமே சூனியமாகிக் கிடக்கிறது.

தொலைக்காட்சிக்குத் தொலைக்காட்சி போட்டி போட்டு என்னைவிடு உன்னைவிடு எனும் கணக்கில் இந்தியாவிலிருந்து இறக்கி எங்கள் இனத்துக்குத் தருகின்ற சினிமாவின் தரம் மீளாய்வு செய்யப்படுவதும், சின்னத்திரைகளின் வருகையை மட்டுப்படுத்தலிலும் எங்கள் ஊடகங்களின் ஆதாரபுள்ளிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

நல்ல திரைப்படங்களை, எங்களது வெளியீடுகளை அதிகம் இறக்குமதி செய்து எங்கள் மண்ணுக்குள்ளிருந்து வருகின்ற படைப்புக்களுக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும். எமது தமிழ்த் தொலைக்காட்சிகள், வானொலிகள் எங்களது வாழ்வுப் போரை, சந்ததிப்போரை, நமது விழுமியங்களை, எதிர்கால வாழ்வுடனான போராடி வெல்லும் பலத்தைக் கொடுப்பதற்கான நிலங்களாகட்டும். இல்லை மக்கள் விரும்புவதைக் கொடுக்கிறோம் இந்தச் சினிமாவினதும், சின்னத்திரையின் வருகையுமே எங்களது அடையாளங்களைப் பேணுகிறது என்றெல்லாம் தத்துவம் பேசி எங்கள் இளையோரை, பெண்களை இருளுக்குள் தள்ளி உங்கள் உண்டியல்களின் பெருக்கத்தில் மட்டுமே கவனமாக இருப்பதினால் உங்களது பணத்தின் இலக்கையே எட்ட முடியும். எமக்கான எந்தவொரு சிறப்பையும் தந்துவிட முடியாது.

கண்கெட்ட பின் சூரிய வணக்கம் வேண்டாம். இன்றே காரியம் அதில் கவனமாக உங்கள் கவனம் திரும்பட்டும். உங்கள் தார்மீகக்கடமை எதுவென்பதை உணர்ந்து செயற்படுவது எங்களது மேன்மைக்கு உயர்வு தரும் என்பதையும் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.

எழுதியவர் சாந்தி ரமேஷ் வவுனியன்

கை நழுவிச் செல்லும் இந்திய ஆதிக்கம்


இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள விசித்திரமான நிலை குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் முக்கியத்துவமானது, பிராந்தியச் சமநிலையின் அடிப்படையில் நோக்கப்படும் அதேவேளை, சமநிலை பேண விழையும் பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் புதிய கூட்டுக்களின் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஆனாலும், கேந்திர முக்கியத்துவமிக்க இப்பிராந்திய மையத்தில், சமநிலை பேணும் முன்னுரிமையை, எவ்வளவு காலத்திற்கு முதன்மைப்படுத்த முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியக் கொல்லைப்புறத்தில் சீனாவின் நகர்வுகள் பற்றியும் பேசப்படுகிறது.தாம் நிர்மாணிக்கும் ஒரு துருவ உலகில் (Unipolar World) அதிகாரச் சமநிலை நாட்டப்பட வேண்டிய பிராந்தியமாக, சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா வரையறுத்துள்ளது. இதில் இந்து சமுத்திரப் பிராந்தியமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸின் கூற்றில் “”பல்துருவ பார்வை கொண்ட ஒரு துருவ உலகம்” என்கிற கோட்பாடு, தென்னாசியத் தலைவாசல் மையத்திற்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் கருதப்படலாம்.தென்னாசியாவிலோ அல்லது இந்து சமுத்திரத்திலோ ஒரு வகையான அதிகாரச் சமநிலை பேணப்படவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டினை, சீன எழுச்சியின் வகிபாகம் நிர்ணயம் செய்வதாக பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
ஊதிப் பெருகும் சீனப் பொருளாதார வளர்ச்சி, பூவுலகின் கனி வளங்களையும், எரிசக்தி வளங்களையும் தனதாக்கிக்கொள்ளும் நகர்வில் தீவிர கவனம் செலுத்தும் இவ்வேளையில், சந்தை முக்கியத்துவமற்ற இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் கூடாரம் அமைக்க இடங்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றன.இதுகாலவரை, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பõன் என்கிற முச்சக்திகளின் பொருளாதார ஆதிக்கத்தால் முழு உலகமும் கட்டுண்டு கிடந்தது.
வெவ்வேறு பிராந்தியங்களில் உருவான புதிய சமநிலைகளை இவர்களே தமக்கேற்ற வகையில் உருவாக்கிக் கொண்டார்கள்.
அதனைத் தடுக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சீனா முயலவில்லை. தனது வளங்களை யுத்தத்தில் செலவிடாது நாட்டின் தொழில்நுட்ப உட்கட்டுமான வளர்ச்சியில் முதலீடு செய்வதில் அக்கறையோடு செயல்பட்டது.
அதேவேளை, உற்பத்திக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவினை மத்திய கிழக்கிலிருந்து கடல் வழியூடாக கொண்டுவரும் போது, பாதுகாப்பான சூழல் நிலவவேண்டுமாயின், அவ்வழித் தடத்திலுள்ள துறைமுகங்களைக் கையகப்படுத்த வேண்டும்.
இப் பாதையில் நீண்டகால இராஜரீக உறவு கொண்ட நாடுகள் அமைந்திருப்பது சீனாவிற்கு அனுகூலமாகவிருக்கிறது.
முத்துக்கள் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட கடல்வழிப் பாதை போன்ற குவார்டார் (Gwadar) துறைமுகம் பாகிஸ்தானிலும், சிட்டாகொங் (Chittagong) பங்களாதேஸிலும் சிற்வே (Sittwe) மியன்மாரிலும் உள்ள நிலையில் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையிலும், சீன ஆதரவுடன் நிர்மாணிக்கப்படுகிறது.
வட பகுதியில் “பூமாலை ஒப்பரேசனை’ இந்தியா நடத்தும்போதே அதன் பரந்த கடல் பகுதியில் முத்துமாலை கட்டத் தொடங்கியது சீனா. ஒரு கட்சி ஆட்சியின்கீழ் அதிகாரப் போட்டியற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நீண்டகால மூலோபாயத்தின் அடிப்படையில் நிர்மாணித்துக் கொள்ளலாம்.
ஐந்து வருடத்திற்கொரு முறை ஆட்சி மாறும் அரசியலமைப்பைக் கொண்டிராத மக்கள் சீனக் குடியரசின், சலனமற்ற உறுதியான தூரநோக்கு, ஏனைய பிராந்திய நலன்பேணும் வல்லரசுகளின் தடுமாற்ற நகர்வுகளால், சாத்தியமாவதை தற்போது உணரக்கூடியதாகவுள்ளது.
இந்த மூன்று வல்லரசுகளுக்கிடையே நிலவும் இணைவுகளும், முரண்நிலைகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எவ்வகையான அதிகார வலு சமநிலையை ஏற்படுத்தப் போகின்ற தென்பதே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் முன்னுள்ள, பிரதான ஆய்வுப் பொருளாக இருக்கிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் சில விவகாரங்களில், அதாவது கேந்திர நலனடிப்படையில் பங்காளர்களாக இணைந்திருந்தாலும், நிரந்தர நட்பு நாடுகளாக பரஸ்பர விட்டுக்கொடுப்புகளோடு இருக்கும் சாத்தியப்பாடுகள் இல்லையென்றே கூறலாம்.கடற்படை ஒத்திகைகளெல்லாம் கேந்திர முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரு தரப்பும் மேற்கொள்ளும் சில பலம் சேர்ந்த நகர்வுகளே.
ஆகவே, இலங்கை விடயத்தில் பொருளாதார தேவைகளைப் பார்க்கிலும் ஆசியாவில் இந்நாடு மையங்கொண்டிருக்கும் தரிப்பிடமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லரசுகள் கருதுகின்றன.
ஈழப்போராட்டம் பெருத்து வீங்கிய 80களின் மையப்பகுதியில், அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தையும், திருமலை எண்ணெய் குதம் மற்றும் வொஸ் ஒப் அöமரிக்கா வானொலி மையத்தையும் வைத்து இந்தியா வெளிப்படுத்திய முற்போக்குப் பாத்திரத்தை நம்பி, பல விடுதலை இயக்கங்கள் மனம் கசிந்து உருகிப்போகின.
காரியம் முடிவடைந்ததும், தமிழ் பேசும் மக்கள் நிரந்தரமாக கண்ணீர் சிந்தப் போவதை இவர்களால் உணர முடியவில்லை.
அதாவது, இந்தியாவின் சுயநலத்தில் எழுப்பப்பட்ட முற்போக்கு கற்பிதங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போவதை அன்றும் சிலர் புரியவில்லை. இன்றும் பலர் புரிய மறுக்கின்றார்கள்.12 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆழங்கூடிய திருமலை உள் துறைமுகத்தின் உணர்திறன் கூடிய மைய இருப்பே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக 17ஆம் நூறாண்டிலிருந்து பல நாட்டு படைத்துறை ஆய்வாளர்களால் கணிக்கப்படுகின்றது.மலைக்குன்றுகளாலும், சிறு தீவுகளால் சூழப்பட்ட இயற்கையான பாதுகாப்பு அரண்களை இத்துறைமுகம் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும்.
1942இல் சிங்கப்பூர் கடற்படைத் தளம், ஜப்பான் வசமானவுடன், திருமலைத் துறையானது பிரித்தானியரின் ஏழாவது கடற்படைக்கு பாதுகாப்பாகத் திகழ்ந்தது.
அணுஆயுத ஏவுகணைகளைத் தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான தரிப்பிடமாகும்வகையில் திருமலை உள்துறைமுகம் அமைந்திருக்கும் அதேவேளை, ராடர்களின் பார்வைக்கு அகப்படாத வகையில் சிறுமலைக் குன்றுகளால் இத்துறைமுகம் சூழப்பட்டிருப்பது, இவற்றின் பாதுகாப்பிற்கு மேலதிக உத்தரவாதத்தை இப்பிரதேசம் வழங்குகிறது.
உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியால், நிலக்கரியிலிருந்து மசகு எண்ணெயின் பயன்பாடு அதிகரித்த வேளையில், கேந்திர மையங்களில், எண்ணெய் சேமிப்புக் குதங்களை அமைக்க வேண்டிய தேவையும் பிரித்தானியாவிற்கு ஏற்பட்டது.
ஒவ்வொரு கிணறும் 15,000 தொன் எண்ணெய் கொள்ளக்கூடிய வகையில் 101 பாரிய நிலத்தடி சேமிப்புக் குதங்களை, திருமலை சீனன்குடாவில் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர் நிறுவினர்.
சுதந்திரமடைந்த வேளையில் திருமலையை குறிவைத்து, பிரித்தானியர் 1947இல் உருவாக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம், குடியரசுப் பிரகடனத்தோடு காலாவதியாகிவிட்டது.ஏறத்தாழ 40 வருடங்களின் பின்னர், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக எண்ணெய் குதப்பாவனையும், துறைமுகத்தின் மறைமுகக் கட்டுப்பாடும் இந்தியாவின் வசம் வீழ்ந்தது.
ஆயினும் இந்தியப் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இலங்கை குறித்த நிலைப்பாடானது மிகவும் வித்தியாசமானது.ஒருவகையில், காலனி ஆதிக்க மனோபõவத்தின் வெளிப்பாடாகவும் இப்பார்வை புரியப்படலாம்.அதாவது, இலங்கையானது இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துள் இயற்கையாகப்பொருந்தியுள்ளது என்பதாகும்.
திருமலைத் துறைமுக, சீனன் குடா விமானத்தளத்திலிருந்து இந்தியா மீது கடல், வான் தாக்குதல்களை மிக விரைவாகத் தொடுக்கலாமென்பதால், இலங்கை என்கிற முழுப்பிரதேசத்தில், திருமலை என்கிற கேந்திர மையமானது “”இந்திய அதியுயர் பாதுகாப்பு வலயத்துள்” அடக்கப்படுகின்றதே இந்தியாவின் உறுதியான கணிப்பாகும்.ஆனாலும், சீன பொருளாதார வல்லாண்மைக் கரங்களின் நீட்சி, இந்தியாவைச் சுற்றி, பலமான கடல் வழி முத்துமாலைப் பாதையொன்றினை மிக சாமர்த்தியமான வகையில் அமைத்துள்ளது.
இலங்கையினூடான கடல்வழிப் பாதையில் கிழக்கு மேற்கிற்கான உலக கொள்கலன் பாதை யில், மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தின் பொரு ளாதார வணிக முக்கியத்துவத்தை இத்தரவுகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஆகவே, திருமலைக்கு மாற்றீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கட்டும் சீனாவின் அவசரத்தை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.
நான்கு கட்டங்களாக நிறைவு செய்யப்படவிருக்கும் இத்துறைமுகத்திட்டமானது 15 வருடகாலத்துக்குள் முழுமையாக முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு எரிவாயுவில் இயக்கப்படும் அனல் மின் நிலையமும், கப்பல்கள், கொள்கலன்கள் திருத்தும் தளங்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மேலதிகமாக நிர்மாணிக்கப்படவிருக்கிறன்றன.
இன்னமும் ஏழு வருடகாலத்தில், தனது எண்ணெய் இறக்குமதியின் 70 வீதத்தை மத்திய கிழக்கிலிருந்தே சீனா பெறப்போகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
தடையற்ற விநியோகம், இக்கடல் பாதையூடாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டிய தேவையும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் முத்துமாலையில், ஹம்பாந்தோட்டையும் ஒரு காத்திரமான இடைத்தங்கல் சேமிப்பு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றமடையப் போகிறது. அண்மைய ஈரான் ஜனாதிபதியின் வருகையும், ஒப்பந்தங்களும் இவற்றையே உறுதிப்படுத்துகின்றன.
பொருளாதார பரஸ்பர நலன் என்கிற பாதையூடாக நுழைந்து, பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக அதை மாற்றுவதை பழைய வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தியா அவசரப்படுவதுபோல, தமிழர் போராட்டத்தை நசுக்க முயற்சித்தாலும், வல்லரசுகளின் பிராந்தியத்தில் குறித்த நகர்வுகளில் மாறுதல்கள் ஏற்படாது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காய் நகர்த்தும் சகல வல்லரசாளர்களும், தமக்குள் நிரந்தரமான உறவையோ அல்லது பொதுவான கூட்டுக்களையோ ஏற்படுத்தமாட்டார்கள்.
இப்பிராந்தியத்தின் பிதாமகன் என்கிற நிலைப்பாட்டை இந்தியாவும் விட்டுக்கொடுக்காத அதேவேளை பாரிய நிலமீட்புத் தாக்குதலில் இதுவரை ஈடுபடாமல், தற்காப்பு நிலை பேணும் விடுதலைப் புலிகளின் தந்திரத்தை, இந்தியாவும் புரிந்து கொள்ளும்.இந்தியா, சீனாவைப் பொறுத்தவரை துறைமுகமும், சில கேந்திர நிலையங்களும் மட்டுமே அவர்களுக்குத் தேவை.
மன்னார் எண்ணெய் வளமும், பொருளாதார முதலீடுகளும், அந்நாடுகளின் பொருண்மிய பலத்தோடு ஒப்பிடுகையில் மிக அற்பமான விடயங்களாகும்.
நன்றி : சி.இதயச்சந்திரன்

புதன், 2 ஜூலை, 2008

ஆடி மாதப் பரபரப்பும் களமுனை உத்திகளும்



வடபோர்முனையில் கடுமையான மோதல்கள் தொடர்ந்து வருகையில் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா யாழ்.குடா வுக்கும், வன்னிக்கும் தொடர்ச்சியான விஜயங் களை மேற்கொண்டு வருகின்றார்.அவரது பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் வடபோர் முனையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்நகர்வை மேற்கொண்டுவிடவும், தனது பதவிக்காலத் தில் இராணுவத்தரப்பில் பேரழிவு ஏதும் ஏற் படாதவாறு தடுத்து விடவும் அவர் அதிக சிரத்தை எடுத்து வருவதையே அவரது தொடர் ச்சியான விஜயங்களும் புதிதாக திறக்கப்படும் களமுனைகளும் எடுத்து காட்டுகின்றன.
இலங்கையில் முனைப்பு பெற்ற இனப்பிள வுகள் 1970 களில் மோதல் வடிவம் பெற்ற போதும் அது 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதமே உக்கிரமடைந்திருந்தது. அதன் பின் னர் போர்க்காலத்தில் ஜூலை மாதம் மிகவும் அச்சம் நிறைந்ததாகவே காணப்படுவதுண்டு.
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் திருநெல் வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட் டிருந்தனர். இலங்கை அரசின் அன்றைய வரலாற்றில் பெரும் தொகை படையினரை ஒரு தாக்குதலில் முதன் முத லாக இழந்ததும் ஜூலையில் தான். ஆனால் அதன் பிற்பாடு வந்து போகும் ஒவ்வொரு ஜூலை மாதமும் பெரும் அச்சம் நிறைந்ததா கவே இருப்ப துண்டு.
அதாவது ஜூலையில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் அதிகம்.விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் தோற்றம் பெற்றதும் 1987 ஆடியில்தான். சமச்சீரற்ற போர் (Asymmetric war) என உலகினால் கணிக்கப்பட்ட ஈழப்போரில் இராணுவச் சம நிலையை எட்டவைத்ததில் கரும்புலிகளின் பங்குகள் அதிகமானது.ஜூலை மாதத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்.
05.07.1987 நெல்லியடி மத்திய மகாவித்தி யாலயத்தில் அமைந்திருந்த படைமுகாம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல்.
29.07.1987 இந்தியஇலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானது.
28.07.1989 இந்தியப்படை இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்த நாள்.
10.07.1990 கொக்காவில் இராணுவ முகாம் தகர்ப்பு.
05.07.1992 இயக்கச்சியில் வை08 இரா ணுவச் சரக்கு விமானம் 20 விமானிகள் மற் றும் சிப்பந்திகளுடன் வெடித்து சிதறியது.
25.07.1993 மண்கிண்டிமலை இராணுவ முகாம் தாக்குதல், 81 மீ.மீ மோட்டார்கள் முதன் முதலாக கைப்பற்றப்பட்டது.
09.07.1995 இராணுவத்தால் மேற்கொள் ளப்பட்ட முன்நோக்கிப் பாய்தல் நடவடிக்கை, நவாலி தேவாலயம் மீது விமானப்படை மேற் கொண்ட குண்டுவீச்சில் 142 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
14.07.1995 சண்டிலிப்பாயில் வைத்து புக் காரா குண்டுவீச்சு விமானம் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தப்பட்டது. புலிப்பாய்ச்சல் நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
16.07.1995 காங்கேசன்துறை துறைமுகத் தில் வைத்து எடித்தாரா கட்டளைக்கப்பல் தகர்க்கப்பட்டது.
28.07.1995 மணலாறு இராணுவ முகாம் மீதான தாக்குதல்.
04.07.1996 யாழ்பாணத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் யாழ். நகர தளபதி பிரி கேடியர் ஆனந்த கமான்கொட, காவல்துறை அத்தியட்சர் டயஸ் பலியானார்கள். வீட மைப்பு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா காயம் அடைந்தார்.
19.07.1996 முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்ப்பு 1,600 படையினர் பலி, முதன் முறையாக இரண்டு 122 மீ.மீ ஆட்டிலறிகள் கைப்பற்றப்பட்டன. ரணவிரு பீரங்கி கப்பல் தகர்ப்பு.
25.07.1999 Newco Endu-rance கப்பல் தகர்க்கப்பட்டது.30.07.2000 F-5 சுப்பசொனிக் குண்டு வீச்சு விமானம் கட்டுநாயக்காவில் வீழ்ந்து நொறுங்கியது.
24.07.2001 கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதான கரும்புலித்தாக்குதலில் 3 Kfir C2, 3 K-8 பயிற்சி விமானங்கள், 1 MiG-27, 2 Mi-17 உலங்குவானூர்திகள், 1 Mi24 உலங்குவானூர்தி, 1 Bell-412 உலங்கு வானூர்தி, Airbus-A340, Airbus-A330 என் பன முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் பல விமானங்களும் உலங்குவானூர்திகளும் சேதமடைந்தன.
1991 ஆடி 15 இல் தான் விடுதலைப் புலிகளின் முதலாவது சிறப்புப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி உத்தியோகபூர்மாக தோற்றம் பெற்றிருந்தது.
இவற்றை விட மேலும் பல சிறு தாக்குதல்களும் இந்த மாதத் தில் நடை பெறுவதுண்டு. இந்த நிலையில் இந்த ஆண் டின் ஆடி மாத மும் பரபரப்பு நிறைந்ததாகவே காணப்படு கின்றது.இந்திய உயர் அதிகாரிகளின் திடீர் விஜயம், மேற்குலகின் அழுத்தங்கள் என அரசியல் மற் றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தென்னிலங்கை மக்களின் கவனம் அனைத்தை யும் போரை நோக்கி திசைதிருப்பும் உத்திகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எனினும் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தென்னிலங்கையின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நோக்கத்துடன், பிரதான சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரங்களை அகற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு நல்ல ஒரு சந்தர்ப்பம் என கரு திய அரசு அதனை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு ஒழுங்குகளில் இறங்கியுள்ளதன் முதற்படி இதுவாகும்.போரினால் நலிவடைந்து வரும் பொருளா தாரம், இனப்பிரச்சினைக்கு அமைதி வழியி லான ஒரு தீர்வு காணப்பட முடியும் என்ற நம் பிக்கைகள் ஏற்படும் போதெல்லாம் உயர் வடைவதுண்டு. கடந்த வாரமும் அவ்வாறே காணப்பட்டது.
தென்னிலங்கையில் தொடர்ச் சியாக நடைபெற்ற குண்டு வெடிப்புக்களினால் வீழ்ச்சி கண்டிருந்த கொழும்பு பங்குசந்தை, இந்திய அதிகாரிகள் சிறப்பு வான்படை விமா னத்தில் வந்து கொழும்பில் இறங்கியதும் புத் துயிர்ப்பு அடைந்திருந்தது. அதாவது மோதல்கள் தணியும் என்ற நம்பிக்கைகள் ஏற்படும் போதெல் லாம் பொருளாதாரம் உயர்வு அடைவதுண்டு.வியாழக்கிழமை (19) 787.2 பில்லியன் ரூபா வாக இருந்த சந்தை முதலீடுகள், மறுநாள் வெள் ளிக்கிழமை (இந்திய அதி காரிகள் வந்து இறங்கிய தினம்) 803.3 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது.
சார்க் மாநாடு நடை பெறும் காலப்பகுதியில் வடபோர்முனையை தக்க வைப்பதற்கு இராணுவமும் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றது. வன்னிக் கள முனைக்கு கடந்த வாரம் (21) விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா மீண்டும் கடந்த வியாழக்கிழமை (26) வவுனியாவுக்கு விஜயம் செய்ததுடன், நடைபெற்று வரும் மோதல்களில் காய மடைந்து சிகிச்சை பெற்றுவரும் இராணுவத்தினரையும் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் டிவிசன் மற்றும் பிரிகேட் தளபதிகளுடன் களநிலமைகள் தொடர்பாக கலந்துரையாடல்களையும் மேற் கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 57 ஆவது டிவிசன் எனப்படும் ஒரு வலிந்த தாக்குதல் படை யணியுடன் ஆரம்பமாகிய வன்னி படை நடவடிக்கை தற்போது, ஐந்து முழுமை யான படையணிகளையும், மூன்று படை யணிகளின் சில பற்றாலியன்களையும் உள்வாங்கியுள்ளது.மன்னார் களமுனையிலும், வன்னியின் மேற்குபுறமும் 57, 58 (Task Force 1), 61 ஆகிய மூன்று படையணிகளும், மண லாற்றில் 59ஆவது படையணியும், ஏ9நெடுஞ்சாலைக்கு கிழக்காக நடவடிக்கை படையணி (Task Force 11) எனப்படும் படையணியும் கள மிறங்கியுள்ள நிலையில் அவர்களுக்கான பின்தள உதவிகளை வவுனியாவின் மேற்கு பகுதிகளில் 56 ஆவது படையணியும், மணலாற்று களமுனையில் 22ஆவது படை யணியும் மன்னார் களமுனையில் 21 ஆவது படையணியும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.இராணுவக் கட்டமைப்பில் டிவிசன்கள் தலா 7,000 தொடக் கம் 9,000 இராணு வத்தினரை கொண்டுள்ள போதும், தற் போது உருவாக்கப்பட்டுள்ள நடவடிக்கை படையணி டிவிசனை விடச் சிறியது. இது ஏறத்தாள 3,000 படை யினரை கொண்டுள் ளது. ஒட்டுமொத்தமாக நோக்கின் பரந்த கள முனைகள் திறக்கப்பட்டுள்ள வன்னி கள முனையில் தற்போது ஏறத்தாள 40,000 படை யினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து மணலாறு வரை நீண்டு போயுள்ள இந்த களமுனைகளில் நகரும் படை யினரால் கைப்பற்றப்படும் பிரதேசங்களை தக்கவைப்பதற்கு பெருமளவான படைப்பலம் தேவை. எனவே தான் அரசு தொடர்ச்சியாக இராணுவத் திற்கான படை சேர்ப்புக்களையும், படையில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கான பொது மன் னிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றது.இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்க ளில் 12,000 பேரை மீள சேர்ப்பதற்கு கடந்த மாதம் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பின்னர் தற்போது அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது. படை யில் இருந்து தப்பி சென்ற 51,000 பேரையும் அவர்களின் சுயவிருப்பின் பேரில் விலக்கிக் கொள்ள 2003 ஆம் ஆண்டில் அரசு முடி வெடுத்திருந்த போதும், தற்போது அதில் இருந்து அரசு விலகியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.இழுபட்டு செல்லும் மோதல்கள், போர் முனையில் ஏற்படும் இழப்புகள் என்பவை படையில் இளைஞர்கள் இணைந்து கொள் வதை மந்த நிலைக்கு தள்ளிய வரலாறு உலக வல்லரசான அமெரிக்காவில்கூட நடந்திருக்கிறது.ஈராக்கில் இருந்து வரும் படையினரின் சடலங்கள் அமெரிக்க இராணுவத்தின் படை சேர்ப்பையும் அதிகம் பாதித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனை நிவர்த்தி செய்வதற் காக அமெரிக்க அரசு படையில் சேர்வதற்கான கல்வி தகைமைகளை குறைத்துள்ளதுடன், படையில் இருந்து சுயமாக விலகிக் கொள்ளும் வயது எல்லையையும் 35 இல் இருந்து 42 ஆக அதிகரித்துள்ளது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் படையினரின் பல முனை தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் அவர்களின் கவனத்தை சிதறடிப்பதற்குமான பல உத்திகளை வகுத்து வருவதுடன், வலிந்த தாக்குதல் ஒன்றிற்கு தயாராகி வருவதாகவும் வன்னி தகவல் கள் தெரிவிக்கின்றன.
மன்னார் களமுனையை எதிர்கொள்வதற்கு பூநகரி படையணி என்ற படையணி ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.மன்னார் களமுனைகளில் இந்த படையணி களமிறங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பிரித் தானியாவின் இராணுவக்கட்டமைப்பில் றோயல் ஐரிஸ் றெஜிமென்ட் ( The Royal Irish Regiment), ஸ்கொட்லாந்து டிவிசன் (The Scottish Division) பிறின்சஸ் ஒப் வேல்ஸ் டிவிசன் (The Prince of Wales Division) என்ற படையணிகள் உள்ளதை போலவே பூநகரி படையணி உருவாக்கம் அமைந்துள்ளது.
இது தவிர கிழக்கு மாகாணத்தில் தரையிறங் கியுள்ள விடுதலைப்புலிகளின் ஜெயந்தன் படையணியின் இரு கொம்பனி அணிகள் அங்கு தமது தாக்குதல்களை அதிகரித்துள்ளதும் படையினரின் ஒழுங்கமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற கிளைமோர் மற் றும் குண்டு தாக்குதல்களில் பொலிஸாரும், சிறப்பு அதிரடிப்படையினரும் அங்கு இழப் புக்களை சந்தித்துள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல்களை விரிவுபடுத்த உள்ளதாக விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண சிறப்பு தளபதி கீர்த்தி அண்மையில் தெரிவித்த கருத் தும் இதனையே உறுதிப்படுத்தியுள்ளது. தற் போது கிழக்கில் படைமுகாம்களும், காவல் நிலைகளும் அதிகம் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான படை வளங்களை எங்கி ருந்து திரட்டுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் யாழ்.குடா மீதான தாக்குதல் அச்சம் அதிகரித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.படையினரின் அதிக வளங்களும், சூட்டு வலுவும் வன்னியில் குவிக்கப்பட்டுள்ள நிலை யில் விடுதலைப்புலிகள் புதிதாக ஒரு கள முனையை திறந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரம் யாழ்.குடா மீது விடுதலைப்புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டால் அதனை முறியடிக்கும் உத்திகளையும் படையி னர் அதிக சிரத்தையுடன் மேற்கொண்டுவரு கின்றனர்.
இராணுவத்தின் தாக்குதல் படையணிகளில் கணிசமானவை வன்னி களமுனைக்கு நகர்த் தப்பட்டுள்ளன. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலை தடுப்பதற்கு எந்த களமுனைகளில் இருந்து படையினரை நகர்த்துவது என்ற குழப்பமும் ஏற்படலாம்.
நன்றி : அருஷ்

கல்கியின் கரிசனையில் அமெரிக்க விசுவாசம்?



இவ்வார கல்கியின் ஆசிரியர் தலையங்கம் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என என்ன சொல்லியிருக்கிறது? விடுதலைப்புலிகள் குறித்த அமெரிக்க எவ்.பீ.ஐயின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கல்கியும் தனது பங்குக்கு ஏதோ கலக்கியிருக்கிறது. வழமையாக பல இந்திய ஊடகங்களின் மிகைப்படுத்தப்படும் பரபரப்புச் செய்திகளும் பொய்களையே பரப்புரைக்கும் பண்பையும் கல்கி மீண்டும் ஒருதரம் நிறுவியுள்ளது.
கல்கியில் 'விடுதலைப் புலிகளின் கொடிய சாதனை' என்ற தலைப்பை எழுதியவரே! நீங்கள் ஒரு ஊடகர்தானே? அப்படியாயின் செய்திகளையெல்லாம் கரைத்து முழுங்கியிருப்பீர்களல்லவா? எவ்.பீ.ஐயின் கூற்றினை மறுத்து நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியும், அமெரிக்காவின் முன்னாள் உதவிப்பிரதி சட்டமா அதிபருமான புருஸ்பெயின் அவர்கள் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தாரே, அது உங்கள் அறிவுத்திறனில் எட்டவில்லையா அல்லது புரியவில்லையா? நீங்கள் ஆங்கிலசூரர்களல்லவா? புருஸ்பெயினும் ஆங்கிலத்தில்தான் அவ் மறுப்பறிக்கையை வெளியிட்டிருந்தார். அதையேன் படிக்காமல் விட்டீர்கள்? ஓ புரிகிறது... பரபர கிசுகிசு சுடுசுடு செய்திகளின் ஆர்வலர்களல்லவா நீங்கள்.
இதெல்லாம் எங்கே உங்களுக்கு புரியப்போகிறது.ஆதாரமற்ற அறிக்கைகள் விடுவதற்கு அமெரிக்காவால் மட்டுமல்ல உங்களாலும் தான் முடியுமே தவிர உலகில் வெறெந்த மனித நேயமுள்ள யாராலுமே முடியாது. தமிழர் தேசத்தில் தினம் தினம் சாகின்ற தமிழுயிர்களை உங்களுக்கும் தெரிவதில்லை எவ்.பீ.ஐ யிற்கும் தெரிவதில்லை. 'மனித வெடிகுண்டுகள்' உருவாக காரணமானவர்கள் நீங்களாகவும் மனித உயிரின் பெறுமதி அறியாதவர்களாக உங்கள் படைகளும் எங்களை வீதியில் வீடுகளில் என கொன்று போட நாமெல்லாம் சாவுக்குள் நின்று சந்தித்த சரித்திர வடுவை உங்களால் கழுவ முடிந்ததா?
உங்கள் நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு பெருத்து வருவதை வலுத்த துயரத்துடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இன உணர்வுள்ள தமிழர்களின் மனவுணர்வுகளை உங்கள் அசிங்கமான ஆசிரியர் தலையங்கத்தினால் களங்கப்படுத்தாதீர்கள்.(தமிழகத்தில் தினமும் ஒரு விடுதலைப் புலி கைது செய்யப்படுகிறார். ஆயுதக் கிடங்குகள், குவியல்கள் என்று அதிர்ச்சி தரும் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அகதிகள் முகாம்களில் தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலர் அளிக்கும் தார்மிக ஆதரவும் தமிழக முதல்வரின் மௌனமும்தான் விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஊடுருவவும் நடமாடவும் துணிவைத் தருகின்றன- கல்கி)அது எப்படி தினமும் ஒரு புலி உங்களிடம் பிடிபடுகிறா(ள்)ன்? நீங்கள் இன்னும் கனவுலகிலிருந்து விடுபடாமல் இருப்பதை இவ்வாசகங்கள் விளக்குகின்றன. ஆயுதக்கிடங்குகளா? குவியல்களா? ஆம் அதிர்ச்சியான கண்டுபிடிப்புகள் தான்.
ஒரு குண்டுமணியின் அதிர்வைக்கூட உணராத உங்களுக்கு இந்தப் பொய்கள் அதிர்ச்சியானவை தான்.தமிழர்படைக்கு சிங்களப்படைகள் சன்மானமாக ஆயுதக்கிடங்குகளை தந்துவிட்டுத் தப்பியோடியபோதே தமிழர்படை தேவையான ஆயுத வலுவையும் ஆட்பல வலுவையும் பெற்றுவிட்டது. தமிழ்நாட்டில் புலியென்ன சினிமாப்படப்பிடிப்பு காண வருகிறதென்று எண்ணுகிறீர்களோ என்னவோ. எப்போதும் கனவுகளையே அதிகம் நினைவுகளில் தொலைக்கும் உங்களுக்கு புலியென்றால் காட்டுப்புலிதான் ஞாபகம்.
முதல்வர் எங்கள் கலைஞர் தமிழர் அதனால் தார்மீகக் குரல்களுக்கு மதிப்பளிக்கிறார். பிராமணீயர்களுக்கு இது புரியாது.(போதும் போதாததற்கு, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டது (ஒப்பந்தம் அமலில் இருந்தபோதே புலிகள் அதை மதிக்கவில்லை; அதனால் இலங்கை அரசும் அதை மீற நேரிட்டது). இப்போது இலங்கையில் போர்ச் சூழலே நிலவுகிறது - கல்கி)
யுத்தநிறுத்தத்திலிருந்து தானாகவே இலங்கையரசு விலகி தமிழர் தரப்பை போருக்கு அழைத்திருக்கிறது. வில்லங்கச் சண்டியனாய் மகிந்த மாத்தையா வேட்டியை மடிச்சுக்கட்டி நிற்க தமிழர் தரப்பு என்ன புளியங்கா புடுங்கவா சொல்றீக? யுத்த நிறுத்தம் அமுலில் இருக்க அதை தமிழர் தரப்பு மீறியதை உங்கள் எத்தனை கண்கள் சாட்சியமாகின? (யுத்த நிறுத்தம் தமிழர் தரப்பால் (விடுதலைப்புலிகளால்) நிராகரிக்கப்படவுமில்லை மீறப்படவுமில்லை இலங்கை அரசால் மிதிக்கப்பட்டு மீறப்பட்டதே உண்மை.
யுத்த நிறுத்தம் அழுலில் இருக்க சமாதானத்தின் தூதர்களாய் உலவிய எங்கள் அரசியல் தலைவர்களை மகிந்த மாத்தையாவின் படைகளும் ஒட்டுண்ணிகளும் கொன்று போட்டதும் விமானக்குண்டுவீசி சமாதானப் பேச்சு மேடைகளின் ஞானியான எங்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வரை கொன்று குவித்தது மட்டுமின்றி தினம் தினம் ஏனென்று கேட்க, எதுவென்று பார்க்க, எதற்கென்று கேட்க ஆட்களின்றி எந்த நேரமும் எந்தத்தமிழ் இளைஞனும் யுவதியும் சாகும் விதியை எழுதிய மகிந்த மாத்தையாவின் கொலைவெறி முகம் ஏன் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை?
(கண்ணி வெடிகளுக்குப் பலியாகும் கொடுமையும் கொரில்லா யுத்தமும் நாகரிக உலகில் எந்த தேசத்திலும் நிகழக்கூடாத கொடுமைகள். எந்த மக்களுக்கும் நேரக்கூடாத கொடூரங்கள்.- கல்கி)
உங்க கண்டுபிடிப்போ கண்டுபிடிப்புத்தான் போங்க பின்னிட்டீங்க. நாகரிக உலகின் ஞானங்களையெல்லாம் கரைத்துக் குடித்த கனவான்களே எந்த தேசத்திலும் நிகழாத கொடுமையை நிகழக்கூடாத கொடுமையை உங்கள் படைகளும் எங்களுக்குச் செய்தது. அதே போல இலங்கையரச படைகளும் செய்தன செய்கின்றன. எந்த மக்களும் அனுபவிக்காத கொடுமைகளை எங்கள் மக்களும் மண்ணும் அனுபவிக்கின்றார்கள். உங்கள் போன்ற ரூபாய்களுக்காக செய்தி எழுதும் துர் அதிர்ஸ்டங்கள் உள்ளவரை உலகில் கண்ணிவெடிகளும் பலியாகுதலும் தொடர்கதைதான் போங்க.கொரில்லா என்ற வார்த்தையை எத்தனை காலம்தான் எழுதுவீக கல்கியாரே? இனிமேல் மாற்றி எழுதிக்கொள்ளுங்கள். தமிழர்சேனை உலக வல்லமைகளுக்கு நிகரான சமவலுப்படையணி.
(இலங்கை அரசுடன் விவாதித்து, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான அரசியல் தீர்வுக்கு இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழகத் தலைவர்கள் இதற்குத் துணை நின்று, புலிகளை வன்முறையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திருப்பியாக வேண்டும். இல்லையேல், இந்திய-தமிழக மீனவர்கள் மடிவது மட்டுமல்ல் தமிழகத்திலும் அதையொட்டிய மாநிலங்களிலும் பயங்கரவாதம் பரவிப் பெருகுவது, விரைவிலேயே நாம் காணக்கூடிய கொடுமையாகிவிடும் - கல்கி)
புல்லரிக்குதுங்க ஒங்க ஆலோசனையைக் கேட்க. இலங்கை அரசுடன் 3 தசாப்தகாலமாக தமிழர் தரப்பு விவாதித்துக் களைத்துத்தான் தன்னை ஆளுமை செய்யும் வல்லமையை தேர்ந்தெடுத்து தமிழீழம் நோக்கிய பாதையில் பயணிக்கிறது. இலங்கைத் தமிழர் உரிமைகளை பாதுகாக்க ஏற்கனவே ஒங்க ராசீவ்காந்தி ஐயா பேசித்தானே பத்தாயிரத்துக்கும் மேலான தமிழர்களை கொன்றீங்க, பல ஆயிரம் பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தி, சிறுவர்களை அனாதைகளாக்கி இன்னும் ஒங்க படை எங்க மண்ணில செஞ்சது ஏராளம்.
இதை இன்னமும் நாங்க மறக்கல்லிங்க ஆனால் மன்னிச்சுட்டமுங்க. புலிகளை யாரும் வன்முறையிலிருந்து மீட்டு ஜனநாயகப்பாதைக்கு திருப்பத் தேவையில்லை. ஏனெனில் புலிகள் ஜனநாயகத்தை இப்பவில்லிங்க எப்பவுமே நேசிப்பவர்கள்.'ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்.' சேர்.பீற்றர் உஸ்டினோ சொன்ன வார்த்தைகள் இவை. எத்தனை உண்மை பார்த்தீர்களா கல்கியாரே?
பணத்துக்கும் யுத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் எப்பிடிங்க ஊடகம் தமிழகம் என்றெல்லாம் எழுதிக்கிழிக்கிறீக? மாதச்சம்பளமில்லிங்க தேசவிடுதலைப்போர். ஒரு இனத்தின் உயிரும், உடலும், உணர்வும் கலந்த குரல் அது. அதையெல்லாம் உங்களால் உணரவோ உய்த்து அறியவோ இயலாது.
அசினா நமீதாவா நாளைய தமிழகத்தின் நட்சத்திரம் இதைத்தான் உங்களால் எதிர்வுகூற முடியுமே தவிர ஈழவிடுதலைப்போர் பற்றியோ அதன் எல்லைகள் பற்றியோ எழுதவோ பேசவோ எந்த அருகதையும் அற்றவர்கள் நீங்கள். ஊடகங்களே உலகின் காவல் நாய்களாம் யாரோ சொன்னாங்க ஆனால் ஊடகமா அப்பிடியென்றா என்னங்க? இப்படிக் கேட்கும் உங்களுக்கு இதுவெல்லாம் ஒத்துவராதவை.
ஈழத்துக்காக, ஈழத்தமிழருக்காக உயிரும் தர இந்தியாவில் உள்ள உணர்வாளர்களின் குரல்களே போதும் எங்களுக்கு. அவையே எங்களுக்கு பலம் தரும் வல்லமைகள். கல்கியும் இன்னும் இதரங்களும் உதவ வேண்டாம் உண்மைகளை ஊடகதர்மத்தை உணருங்கள் போதும்.
தமிழகத்தின் பெரும்பான்மையானவர்கள் வாசிக்கும் குமுதம், விகடன் போன்றவை தங்கள் கடந்தகாலப் போக்கை மாற்றி சமகாலத்தில் ஈழத்தமிழர் பக்க நியாயத்தை தமிழர் தரப்பு மீதான சிங்களத்தின் அநியாயங்களை உள்ளபடி சொல்கின்றன. கடும்போக்கு நீக்கி உண்மைகளை ஊடக தர்மத்தை உணர்ந்துள்ளன. நீங்கள் குமுதமாக விகடனாக நக்கீரனாக மாற வேணாமுங்க. அமெரிக்க விசுவாசம் காட்டுவதை எங்கள் விடயத்தில் போட்டு குழப்பிக்காதிங்க.பொய்யானதொரு கருத்தை வெளியிட்ட எவ்.பீ.ஐயின் பொய்யை முதன்மைப்படுத்தி புழுகு ஆசிரியர் தலையங்கம் வரைந்து கிசுகிசுத்து பிசுபிசுத்த ஆலோசனை சொன்ன கல்கியின் நேர்மையற்ற ஆசிரியர் தலையங்கத்தையும் அதன் கருத்துப்புரட்டையும் ஊடகம் சார்ந்தவளாகிய நான் வன்மையாக கண்டிப்பதோடு இனிமேல் இப்படியான பொய்களை கல்கியும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் வேண்டிக் கொள்கிறேன்.
எழுதியவர் சாந்தி ரமேஷ் வவுனியன்

எதிர்பாராத திடீர் பயணமும் எதிர்பார்க்கப்படும் தேர்தலும்



ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டிற்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை செயலர் ஸ்ரீ விஜயசிங் ஆகியோரின் இரண்டு நாள் திடீர் இலங்கை விஜயத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது.

அதேவேளை இப்பயணத்தின் பின்புலத்தில் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய நாடõளுமன்ற தேர்தல் குறித்தும் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.இந்த மூன்று இந்திய உயர்நிலை அதிகாரிகளின் ஒன்றிணைந்த வரவு மறுபடியும் இந்தியாவின் நேரடித் தலையீட்டிற்கான முதற்படியாக இருக்கலாமென்கிற ஊகமும் உருவாகியுள்ளது.

வருகை தந்த அறிவுக் கூட்டம், சந்தித்த நபர்கள், சந்திக்காமல் தவிர்த்த பிரமுகர்கள் பற்றியும் காரசாரமான விவாதங்கள், கொழும்பில் ஒற்றைப் பார்வை தளத்தினூடாக நடத்தப்பட்டுள்ளது.இந்திய இலங்கை உறவில் கேந்திரப் பாதுகாப்பும் சர்வதேச உறவு நிலையும் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த விடயங்களுமே முக்கியத் துவமாகின்றன என ஓய்வுபெற்ற இந்திய அதிகாரி கேணல். ஹரிஹரன் திடமாக நம்புகிறார்.

அவர் பார்வையில், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலவீனமடைவதாகவும் அதனை முழுமையாக நம்பும் இலங்கை அரசு, ஆயுதங்களைப் புலிகள் ஒப்படைத்தால் மட்டுமே தீர்வு குறித்து பேச வருமென்கிற வகையில் தெளிவான கருத்தொன்று முன்வைக்கப்படுகிறது.அதாவது இந்த மூன்று அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லையென்பதே ஹரிஹரனின் பார்வையாக அமைகிறது.

அதேவேளை, இந்திய நிலைப்பாடு குறித்த ஈழத்தமிழர்களின் பார்வையை மிகக்காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் இந்தியப் போக்கில் மாறுதல் ஏற்படவேண்டுமென்கிற வகையில் தனது கருத்தை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியா எமது பிரச்சினையில் தலையிட்டு எமக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென சம்பந்தன் கூறினாலும், அவ்வகையான தீர்வொன்றினை நோக்கி இலங்கை இழுத் துச் செல்லும் நிலையில் இந்தியா இருக்கிறதா என்பதையும் அவர் உணர வேண்டும்.

அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல் திருமலைக்குள் நுழையக்கூடாது. சீனா பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்கக்கூடாதென தனது பிராந்திய நலனை மட்டும் முதன்மைப்படுத்தும் இந்திய வல்லரசு, தமிழ் மக்களின் நலனிற்காக இலங் கையுடன் முரண்படுமா வென்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பிரச்சினை உருவானால் உள்நுழையும் வாய்ப்புக் கிட்டுமென 80களில் எதிர்பார்த்த இந்தியா, உருவாக்கிய பிரச்சினை பல வரலாறுகளை மேலதிகமாக உள்நுழைத்து விட்டதென தற்போது கவலைப்படுகிறது.ஏற்கனவே நீண்டகாலமாக புரையோடிப் போயிருந்த இனச்சிக்கலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த இந்தியா மேற்கொண்ட இராஜ தந்திர குளறுபடிகள், விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட மோதலுடன் ஓய்விற்கு வந்தன.

தற்போது கைவிட்டுச் செல்லும் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பிரச்சினையில் ஈடுபட்டுள்ள ஒரு தரப்பை பலவீனமாக்கும் காரியத்தில் ஈடுபடுவதே ஒரே தெரிவாக இருக்குமென இந்தியா கருதுகிறது.

இக் கருதுகோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த அதன் வெளியுறவுக் கொள்கை மிகவும் தடுமாற்றமானதொரு தளத்தினை தற்போது வந்தடைந்துள்ளது.இத்தகைய சிந்தனைத் தடுமாற்றங்களை, அந்நாட்டின் முன்னாள் கொள்கை வகுப்புக் கோமான்களின் ஆய்வுகளில் தெளிவாகக் காணலாம்.

விடுதலைப் புலிகள், படை வலுவில் பலவீனமடைந்துவிட்டார்களென்று திரும்பத் திரும்பக் கூறுவதன் ஊடாக, வலிந்த தாக்குதல்களை முன்னெடுக்குமாறு மக்களிடமிருந்து அழுத்தமொன்று புலிகளை சென்றடைய வேண்டுமென்பதே இந்த உளவியல் சமர் கூறும் செய்தி.மாதக்கணக்கில் நீளும் வன்னி முற்றுகை, பாரிய திருப்பங்கள் எதனையும் ஏற்படுத்தவில்லையென்கிற பெருங்கவலையும் இவர்களுக்கு உண்டு.இந்த விஜயத்தின் பின்னணியில் தெளிவான உள்நாட்டு அரசியல் சார்ந்த நகர்வொன்று தென்படுகிறது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை புது டில்லிக்கு வருமாறு விடுத்த அழைப்பு இந்நகர்வின் தொடக்கப் புள்ளியாக இருக்கலாம்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், முன்பு இழுபறிபட்டது போன்று தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் அனுசரணை இல்லாமலேயே டெல்லிக்கான அழைப்பினை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் பெற்றுள்ளனர்.ஆகவே தனது தீவிர முயற்சியாலேயே கூட்டமைப்பு டெல்லிக்குச் செல்கின்றது என்கிற மலிவான அரசியலை தமிழ்நாட்டில் மேற்கொள்ள முடியாது.

அதேவேளை இந்தியாவில் மற்றுமொரு பொதுத்தேர்தல் நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகுவதாக அரசியல் அவதானிகள் ஆரூடம் கூறுகின்றனர்.நித்திய விரோதி அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்தால், ஆட்சிக்கு வழங்கும் நாற்காலி ஆதரவினை அகற்றப் போவதாக இடதுசாரிகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளனர்.இடதுசாரிகளுக்கும் காங்கிரஸிற்கும் இடையே சமரசம் செய்ய தமிழ்நாட்டின் தமிழினத் தலைவர் ஓடித்திரிவதிலும் அதிகாரத்தை தக்க வைக்கும் அவசரம் தெரிகிறது.ஆயினும் இடதுசாரிகளின் ஆதரவு கைநழுவிப் போனால், முலாயம் சிங் யாதவ் என்பவரே கடைசிக் கந்தாயமாக இருப்பார்.

வெளியுறவுக் கொள்கைகளைப் பார்க்கிலும் அதிகார நாற்காலியே பெரிதென்பது முதலாளித்துவ ஜனநாயகவாதிகளுக்கு சொல்லித் தெரியவேண்டிய விடயமல்ல.ஆகவே, அதிகாரம் பறிபோகாமல் இருப்பதற்கு எவருடனும் சமரசம் செய்யவோ அல்லது கூட்டுச் சேரவோ அரசியல்வாதிகள் தடுமாற்றமடைவதில்லை.

ஏற்கனவே குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அண்மையில் நடந்த கர்நாடகத் தேர்தலில், தமிழினத் தலைவர் ஒகேனகல் திட்டத்தை ஓரமாக வைத்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.“பட்ட காலிலே படும்’ என்பதுபோல், சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் மக்களை நேரடியாக வாட்ட ஆரம்பித்துள்ளன.தற்போதைய நிலையில் எந்த நாட்டில் இடைத்தேர்தல் வந்தாலும், ஆளும் கட்சி தோல்வியடைவது எண்ணெய் விலையேற்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் ஆதரவினை இலகுவில் இழக்க, மத்தியில் கூட்டாட்சி புரியும் காங்கிரஸ் விரும்பாது.தமிழ் நாட்டுக் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பா.ம.க. வை மத்தியில் இருந்து அகற்றும்படி காங்கிரஸிற்கு அழுத்தம் கொடுக்க கருணாநிதியால் இன்றைய நிலவரப்படி முடியவே முடியாது.

இலங்கையிலிருந்து எதிர்மறையான அழுத்தங்கள் வராமல் இருப்பதற்கும் மத்திய அரசிற்கு உதவி புரிவதாக எண்ணியும் அகதிகளின் குடிசன மதிப்பீட்டினை தமிழ்நாட்டில் கலைஞர் நிகழ்த்தலாம்.அதாவது தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நகர்வுகளை கண்காணிக்கும் மாபெரும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் புலிகளுக்கான ஆயுதக் கடத்தல் தமிழ்நாட்டிலிருந்து இனி இல்லையென்பதை இலங்கைக்கு தெரிவிப்பதற்கே இந்த “வீட்டு நாடகம்’ அரங்கேறுகிறது.டெல்லிக்கு வருமõறு சம்பந்தருக்கு இந்தியா விடுத்த அழைப்பால், தமிழ் மக்கள் ஆனந்தப்படுவதாக அதிகாரிகள் நம்பலாம்.

ஆகவே இந்த விஜயமானது அதிகாரத்தைத் தக்கவைக்க, அதிகாரிகளைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் திருவிளையாடல்களின்ஒரு பகுதியாகவே பார்க்கலாம்.ஈழப் போராட்டம் நசுக்கப்பட்டால் இந்திய அனுசரணையானது இலங்கைக்கு தேவையல்ல வென்பதும் இந்த அதிகாரிகளுக்கு புரியும்.வினை விதைத்து தினை அறுக்க முடியாது.

நன்றி : இதயச்சந்திரன்

தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும்

தமிழீழ தனியரசு மலர்வது, இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று, புலவர் புலமைப்பித்தன் கூறியுள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிறசல்ஸில், பொங்கு தமிழாகஅணிதிரண்டு நின்ற தமிழீழ உறவுகளின் மத்தியில் சிறப்புரையாற்றியபுலவர் புலமைப்பித்தன், ராஜபக்~விற்கு இந்தியா துணைபோவதுஎன்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழீழ தனியரசு மலர்வது, தமிழினத்திற்கு மட்டுமன்றி,இந்தியாவிற்கும், சிங்கள இனத்திற்கும் உகந்த தீர்வாக அமையும்என்றும், புலவர் புலமைப்பித்தன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், உலகில் சகல வல்லமைகளையும் கொண்டஒரேயொரு விடுதலை இயக்கமாக, தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு திகழும் நிலையில், புலம்பெயர்ந்து வாழும் தமிழீழமக்களின் எழுச்சி, போராளிகளின் கரங்களைப் பலப்படுத்தும்என்றும் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி



சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமாதிகளை கட்டுவதற்கு விடுதலை புலிகளின் தாக்குதல் படையணி தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 27 கிலோமீற்றர் 18கிலோமீற்றர் என நீளங்களை அளவிடும் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் மறுபுறத்தில் விடுதலை புலிகள் மதவாச்சி நோக்கி செல்ல இருக்கும் கிலோமீற்றரை தூரத்தை கணக்குப் போடதவறிவிட்டார்.
நீண்ட காலம் பொறுமையோடு, நீண்ட காலம் அமைதியைக்காத்துவிட்டோம். இந்த அமைதி நிச்சயமாக ஒரு பயங்கர போராக வெடிக்கப் போகின்றது.

கிழக்கு மாகாணத்தை கைபெற்றியது போன்று வன்னிப் பிரதேசத்தையும் கைப்பெற்றிவிடலாம் என்ற அரசாங்கத்தினதும் படைத்தரப்பினதும் கனவு பொடிப்பொடியாக சிதறும் காலம் மிகவும் அண்மையில் நெருங்கிவிட்டது.
மணலாறு தொடக்கம் மன்னார் வரையும் மற்றும் முகாமலை, நாகர்கோவில் பகுதிகளில் கடும் போர் இடம்பெற்றுவருகின்றது. விடுதலை புலிகளின் பொறிக்குள் அகப்பட்டுள்ள படையினர் கண்பிதுங்கி தவிக்கின்றனர். அத்துடன் தன்னை தானே சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதனையும் காணலாம்.

இராணுவ நடவடிக்கையின் போது எப்பகுதியிலும் சண்டை செய்யமுடியாத நிலையிலும், முன்னேற முடியாத நிலையிலும் உள்ள படைத்தரப்பினர்க்கு கடந்த காலங்களிலும் சரி தற்போதைய அரசாங்கமும் சரி இராணுவ உதவிகளையும், நிதி உதவிகளையும், இராணுவத்தளபாடங்கள், தொழில்நுட்பங்களை கோரி உலக நாடுகளை கையேந்துவது வழக்கமாகிவிட்டது.

ஆனால் எமது போராட்டம் எங்களுடைய தேசிய தலைவரான மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வன்னி மண்ணில் நின்று சகல படைக் கட்டுமானங்களையும், நன்கு பயிற்சி பெற்ற படையணிகளையும், கொண்டு சிறிலங்கா இராணுவத்திற்கு மாத்திரமல்ல உலக வல்லரசுகளுடன் போராடிக் கொண்டு உள்ளதை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களின் போராட்டத்தின் அடிநாதமாக விளங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் என்பதைச் சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன்.

உலகில் உள்ள விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் எதுவாக இருந்தாலும் தனியான விமானப் படை ஒன்றை அமைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் அது விடுதலை புலிகளையே சாரும் இதனையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. எங்களுடைய தனியரசை சர்வதேசம் கட்டாயம் அங்கிகரிக்க வேண்டும். அவ்வாயின்றி சர்வதேசம் தமிழர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இழுத்தடிக்கும் போக்கை கடைப்பிடிக்குமானால் நாம் எமது தேசிய தலைவரின் காலத்தில் தனியாக பிரிந்து செல்வதைவிட வேறுவழியில்லை.

அதன்பின்னர் தமிழர்களை சர்வதேசம் தேடிவரும் காலம் உருவாகும் என்பதை நான் இந்த இடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். போர்முனையில் உள்ள போராளிகள் தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

நாளை உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் மறுநாள் தமிழீழம் மலரும்.

அதேபோன்ற வென்றெடுக்கும் தமிழீழத்தை சர்வதேசம் அங்கிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகள் இவ்வாறான பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலமாக பொங்கி எழுந்து வெளிக்காட்ட வேண்டும்.

எனவே விடுதலைப் போராட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்தவை இந்நாட்டு சட்டத்திற்கு இணைவாக செயல்பட்டு சிறிலங்கா படையினதும், அரசாங்கத்தினதும் தமிழர்க்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள், கொலைகள், கடத்தல்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார்.

நீ கோபிப்பது ஏன்?


கடவுள் உண்டாக்கப்பட்டதா? (Creation) அல்லது
கடவுள் இயற்கையாகத் தோன்றினதா? (Nature)
இதை முதலில் முடிவு செய்து கொள்.
நான் சொல்வதன் கருத்து கடவுள்
கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல
தானாகத் தோன்றியதுமல்ல.
முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும்.

அதை அதாவது கடவுளை
ஒரு மனிதன் உண்டாக்கினான் என்பதாக
நீ நினைத்தாலோ அல்லது அதை
நீ ஒப்புக்கொண்டதாலோ தானே
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால்
நீ கோபித்துக் கொள்ள வேண்டும்.

(தந்தை பெரியார்)

நாத்திகம் என்றால் என்ன?

நாத்திகக் கருத்தைச் சரியாக புரிந்து கொண்டால்,
அது ஒரு நம்பிக்கை இன்மையோ, இழிவானதோ, வெறும் எதிர்மறைக் கருத்தோ இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு மாறாக, அனைத்து உண்மைகள் பற்றிய மனமார்ந்த, பயன்நிறைந்த உறுதிப்பாடுதான் அது என்பதையும் மிக உயர்ந்த மனிதநேய செயல்பாட்டின் ஆக்கபூர்வ உறுதிப்பாட்டைக் கொண்டது என்பதையும் உணரலாம்.
கடவுள் என்பது இல்லை என்று நாத்திகர் கூறுவதில்லை. ஆனால், கடவுள் என்று எதைப் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. கடவுளைப் பற்றிய எந்த கருத்தும் அற்றவனாக நான் உள்ளேன். கடவுள் என்னும் சொல் தெளிவான திட்டவட்டமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் ஒலிப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கடவுள் இல்லை என்று நான் மறுக்கவில்லை. அத்தகைய கடவுள் என்ற எந்தக் கருத்தையும் நான் கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் மறுக்க முடியாது என்பதே அதன் காரணம்.
கடவுளைப் பற்றி ஆத்திகரால் விளக்கிக் கூற முடியவில்லை. கடவுள் என்ற கருத்தை உறுதிபடக் கூறுபவரால் அதனைப் பற்றி எனக்கு விளக்கிக் கூற இயலவில்லை. என் உருவத்தில் நான் இருப்பதைத் தவிர கடவுள் என்ற உருவத்தில் ஒருவர் இருக்கிறார் என்று கூறப்படுமானால் அத்தகைய ஒன்று இருக்க இயலும் என்பதை நான் மறுக்கிறேன்.
ஆன்மிகவாதியும் ஒரே ஒரு உயிர் தான் இருக்க முடியும் என்பதையும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்றொன்று இருக்க இயலாது என்பதையும் உறுதிபடக் கூறுகிறார். ஆனால் ஆன்மிகவாதியின் இந்தக் கருத்துக்கும் நாத்திகரின் கருத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால், ஆத்திகர் கடவுள் இருப்பதற்கான காரணங்களை கூறும் போது, நாத்திகரோ உயிரினப் பண்புகளின் வெளிப்பாடுகளே இவை, அதாவது சிந்தனையைச் செப்பமிடச் செய்யும் வேறுபாடுகள் இவை என உறுதி படக்கூறுகிறார்.
பிரபஞ்சம் என்று கூறப்படுவதில் இருந்து விலகி, அதைத் தவிர்த்து இருப்பதே கடவுள் என்று ஆத்திகர் உறுதிபடக் கூறும் போது, இத்தகைய தனிப்பட்ட, கற்பனையில் இருக்கும் கடவுளுக்கு தனித்தன்மை, எங்கும் நிறைந்தவர், அனைத்தும் அறிந்தவர், எதையும் செய்ய வல்லவர், மூல முதலானவர், என்றும் நிலைத்து நிற்பவர், மாற்றப்பட இயலாதவர், குற்றம் குறையற்ற நற்றண்மை கொண்டவர் என்றெல்லாம் குணங்களை ஆத்திகர் கற்பித்துக் கூறும் போது,நாத்திகர், “அத்தகைய கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே நான் மறுக்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.
இவ்வாறு தன் கருத்தைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. கடவுளைப் பற்றிய ஆத்திகரின் விளக்கம் முன்னுக்குப் பின் முரணானது.இந்தக் கடவுள் பற்றிய ஆன்மிகவாதியின் விளக்கமே முன்னுக்குப் பின் முரணானதும், மனிதரின் அன்றாட வாழ்க்கை அனுபவத்துக்கு எதிரானது என்பதும்தான் இதன் காரணம். உலகைப் படைத்தவர் கடவுள் என்று ஒரு நாத்திகரிடம் பேசினால், படைப்பு என்ற கருத்தே நடந்திருக்க இயலாதது என்று கூறுவார்.கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை நிறுவிட இது அதிகப்படுத்தவோ, குறைக்கவோ இயலும் என்பதை சிந்தித்துப் பார்க்கவும் நம்மால் இயலவில்லை. இக்கருத்து எவ்வாறு உருவானது என்பதையும் நம்மால் எண்ணிப் பார்க்க இயலவில்லை.
ஒன்றுமே இல்லாதது ஏதேனும் ஒன்றாக ஆவதையோ அல்லது ஏதோ ஒன்று ஒன்றுமே இல்லாததாக ஆகிவிடுவதையோ நம்மால் கருதிப் பார்க்க இயலவில்லை.
நன்றி : சார்லஸ் பிராட்லா

ரஜினி - கமல்



உலகநாயகன் கமல் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரையுலகில் நுழைகிறார். கமலின் சில படங்களில் ரஜினி வில்லனாக நடித்து, தனது ஸ்டைலால் மக்களை கவர்ந்தார். குறிப்பாக பதினாறு வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினியின் டயலாக் டெலிவரி அனைவரையும் கவர்ந்தது.வில்லனாக நடித்துக் கொண்டிருந்த

ரஜினி பைரவி படம் மூலமாக தமிழில் ஹீரோவாகவும் ஆனார். படத்தின் போஸ்டர்களில் முதன்முதலாக ‘சூப்பர் ஸ்டார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது. அந்நேரத்தில் எஸ்.பி.முத்துராமனின் ஆடுபுலி ஆட்டம் படத்தில் கமல் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லனாக ரஜினியை நடிக்கவைக்க எஸ்.பி.எம். நினைத்தார். ஹீரோவாகிவிட்ட ரஜினியிடம் எப்படி கேட்பது என்ற தயக்கமும் அவருக்கு இருந்தது.

விஷயத்தை கேள்விப்பட்ட ரஜினி எஸ்.பி.எம்.மை தொடர்புகொண்டு “நீங்க இயக்குற படம், என் நண்பன் கதாநாயகனா நடிக்கிற படம், நானில்லாமலா? படத்தை தொடங்குங்க சார்.. நடிச்சிக் கொடுக்கறேன்” என்று பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டார். இதுதான் ரஜினி!அதன்பின்னர் ரஜினியும், கமலும் இணைந்து சில படங்களில் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முடிந்த நேரம் அது. எம்.ஜி.ஆர் அரசியலுக்கு போய்விட்டார், சிவாஜி தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார். இரு ஹீரோக்களின் வெற்றிடத்தை கமலும், ரஜினியும் சரியாக இட்டு நிரப்பினார்கள். இனிமேலும் தாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள். அதுபோல சேர்ந்து நடிப்பது தனித்தனியாக இருவரின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல என்று முடிவு செய்தார்கள்.

எதிர்காலத்தில் தங்கள் இருவரில் யாராவது ஒருவர் தயாரித்தே மற்றவர் நடிக்க வேண்டும் என்றும் பேசி வைத்துக் கொண்டார்கள். இன்றுவரை அந்த வாய்ப்பு அமையவில்லை.இருவரும் தனித்தனியாக நடிப்பது என்று முடிவெடுத்த பின்னும் ரஜினி கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு சின்ன காமெடி வேடத்தில் நடிக்க கமல் ஒப்புக்கொண்டார். அது இருவரின் குருவான பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படம் ‘தில்லு முல்லு'. ரஜினி முதன்முறையாக நகைச்சுவை நாயகனாக நடித்த படம் அது.

பொதுவாக ரஜினி படம் ஓடும் நேரத்தில் கமல் படம் வெளியானால் அது தோல்வி அடையும் என்று ஒரு மூடநம்பிக்கை ரசிகர்களிடம் உண்டு. அது முற்றிலும் உண்மையல்ல. ராஜாதிராஜா வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது வெளியான அபூர்வசகோதரர்கள் வரலாற்று வெற்றி கண்டது. பாண்டியனோடு ஒரு தீபாவளிக்கு வெளியான தேவர்மகன் வெள்ளிவிழா கண்டது. பாபா படம் வெளியாவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக வெளியான பஞ்சதந்திரம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஓடி வெற்றிவிழா கண்டது.கமல் படங்கள் தயாரிப்பில் இருக்கும்போதே படம் எப்படி வந்து கொண்டிருக்கிறது என்று அப்படத்தின் இயக்குனர்களிடம் ரஜினி அடிக்கடி விசாரிப்பார். படம் தயாராக தயாராக அவ்வப்போது ‘ரஷ்' போட்டு பார்த்து மகிழ்வார். ரஜினியின் இந்த வழக்கம் தசாவதாரம் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ‘கல்லை மட்டும்' பாடல் தயாரானதுமே கே.எஸ்.ரவிக்குமார் முதலில் சொல்லி அனுப்பியது ரஜினிக்கு தான். எடிட்டிங் ரூமில் அப்பாடலை பார்த்த ரஜினி எழுந்து நின்று வெகுநேரம் கை தட்டினார் என்று கே.எஸ்.ரவிக்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம்.



கலைஞர் - எம்.ஜி.ஆர் நட்பு தமிழ்ச்சூழலில் மிக அதிகமாக சிலாகிக்கப்படும் நாற்பதாண்டு காலநட்பு. அந்நட்புக்கு பிறகு அதிகம் பேசப்படும் மிக நீண்டகால நட்பு ரஜினி - கமல் இருவருக்குமிடையே இருப்பது தான்.

நன்றி : லக்கிலுக்

மீண்டும் சுஜாதா


சுஜாதா பற்றிய இரங்கல் கட்டுரைகளைப் படிக்கும் துர்ப்பாக்கியத்தை விரும்பியே ஏற்றுக் கொண்டேன். விரும்பி ஏற்றுக் கொண்ட காரியத்தில் நொட்டாரம் சொல்லக் கூடாது. ஆனாலும் இவ்வளவு கொடுமையான இரங்கல் கட்டுரைகளை என் வாழ்நாளிலேயே படித்ததில்லை. கெட்டதிலும் நல்லது என்னவென்றால் , இந்தக் கருமத்தையெல்லாம் படிக்க வேண்டிய சோதனை சுஜாதாவுக்கு ஏற்படவில்லை.

சில கட்டுரைகளில் ப்ளாக் ஹ்யூமரும் தெரிந்தது. உதாரணம் , பழமலை. "(சுஜாதா வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம்) அவரை விட அம்மையார்தான் (திருமதி சுஜாதா) என்னுடன் அதிகம் பேசுவார். அது , அவர் எழுத்துகளைப் பற்றி நாங்கள் எங்களுக்குள் பேசுவதாக இருக்கும். சுஜாதா ஒட்டுக் கேட்பவர் போல உட்கார்ந்திருப்பார். அது வேடிக்கையாக இருக்கும்!" அது வேடிக்கை இல்லை ஸ்வாமி! உங்களை சுஜாதா செய்த teasing அது! உங்களைப் பற்றிய சுஜாதாவின் நையாண்டி அது! அடடா...இந்த சுஜாதாதான் எப்பேர்ப்பட்ட கள்ளனாக இருந்திருக்கிறார். பழமலை போன்ற ஒருவரிடமிருந்து தப்பிக்க என்ன ஒரு சுலபமான வழி பாருங்கள்!

அப்புறம் இந்த வண்ணதாசன். இவர் சுஜாதா வீட்டுக்குப் போனாராம். சுஜாதாவின் சகதர்மிணி காப்பி போட்டு கொடுத்தாராம். பிறகு சுஜாதா இவர் புதல்வரின் திருமணத்துக்கு வந்தாராம். "ஆஹா , நல்ல ஜோடி!" என்று பாராட்டினாராம். அவ்வளவுதான். இதற்குப் பெயர்தான் இரங்கல் கட்டுரை. உயிர்மையில் வெளிவந்திருக்கிறது. இதையெல்லாம் பிரசுரித்துத் தொலைய வேண்டிய கஷ்டகாலம் மனுஷ்ய புத்திரனுக்கு. ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தால் என்னென்ன துன்பத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். ஏனுங்கோ அண்ணாச்சி. கடந்த 45 வருடங்களாக ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் எழுதி வந்த சுஜாதாவிடமிருந்து உங்களுக்குக் கிடைத்தது ஒரு கப் காப்பி தானுங்களா ? வேறு எதுவும் இல்லையா ? ஷேம் ஷேம் வெரி ஷேம்.

ஜெயமோகன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே சாரு. பாவம் , ஜெயமோகனுக்கு நாக்கில் சனி. எம்ஜியார் , சிவாஜி பற்றி வாய்க்கு வந்ததை உளறி வைத்து விட்டு இப்போது சினிமாக்காரர்களால் பிரஷ்டம் செய்யப்பட்டு ஆற்றாமையில் கிடக்கிறார். நான் வணங்கும் பாபாதான் இந்த சினிமாக்காரர்களின் கண்களைத் திறந்து ஜெயமோகனையே எல்லாப் படங்களுக்கும் (விஜய டி. ராஜேந்தர் படம் உட்பட) வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தர வேண்டும்.

அசோகமித்திரன். இவருடைய இக்கினியூண்டு உடம்புக்குள் புகுந்து கொண்டு அந்த இட்சிணி போடும் ஆட்டம் இருக்கிறதே..அடடா , அதை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

அசோகமித்திரன் கணையாழியில் 40 ஆண்டுகள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர். அதில்தான் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுஜாதா கடைசிப் பக்கங்களை எழுதினார். ஒரு வகையில் இருவரும் சகாக்கள். அப்படிப்பட்டவர் சுஜாதாவின் மரணத்திற்கு எழுதியிருக்கும் இரங்கல் கட்டுரை என்ன தெரியுமா ? " சுஜாதா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது என்னிடம் ஒரு கேமரா இருந்தது. அந்தக் கேமராவில் நாங்கள் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்." ஐயா , என்னை நம்புங்கள். அவ்வளவுதான் இரங்கல் கட்டுரை.

இப்படி ஒரு இரங்கல் கட்டுரை வேறு எந்த எழுத்தாளருக்காகவும் , உலகில் வேறு எந்த மொழியிலும் எழுதப் பட்டிருக்காது என்று நினைக்கிறேன். இருக்கட்டும் , எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போகப் போகிறது ? ' நான் அசோகமித்திரன் வீட்டுக்குப் போனேன். அவர் ஒரு பூனை வளர்த்தார். அது என்னைப் பார்த்து மியாவ் என்று சொன்னது. நானும் மியாவ் என்று அதனிடம் சொன்னேன். ' எழுதுகிறேனா இல்லையா என்று பாருங்கள் அசோகமித்திரன்.
நன்றி : சாருநிவேதிதா

சுஜாதா


கல்கியில் சுஜாதா எழுதிய மத்யமக் கதைகள் என்ற சிறுகதைத் தொடரில் தலித்துகளை அவமானப் படுத்தி எழுதியிருக்கிறார் என்றார் அழகிய பெரியவன். சுஜாதாவிடம் இப்படி ஒன்று அல்ல ; பல தவறுகள் உண்டு. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் 3000 பேர் சுல்தான் படையெடுப்பில் கொல்லப் பட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா.


வரலாற்றில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இதைக் கண்டித்து நான் தனியாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். பிராமணர் சங்கத்தில் கொடுத்த விருதை அவர் பெற்றுக் கொண்டதையும் நான் கண்டித்து எழுதினேன். தமிழில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்கள் அசோகமித்திரனும் , சுஜாதாவும். ஆனால் இவர்கள் இருவரின் அரசியல்/சமூகக் கருத்துக்களை எதிர்த்து அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். அதனாலேயே நான் சுஜாதாவுக்கு எதிர் முகாமில் இருப்பவன் என்பது போன்ற ஒரு தோற்றமும் வந்து விட்டது.

எந்த ஒரு கலைஞனும் political correctness- ஓடு தான் இருந்தாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அடிக்கடி நான் சொல்லி வருவது போல் மரியோ பர்கஸ் யோசா ( Mario Vargas Llosa) ஒரு வலது சாரி. ஹிட்லரை ஆதரித்த இசைக் கலைஞர்களும் , எழுத்தாளர்களும் , தத்துவவாதிகளும் மிகப் பலர். சமீபத்தில் ஆனந்த விகடனில் சுஜாதா எழுதிய ' எப்படியும் வாழலாம் ' என்று ஒரு சிறுகதை படித்தேன். கார்ஸியா மார்க்கெஸ் எழுதிய சிறுகதைகளுக்கு ஒப்பான ஒரு சிறுகதை அது. அதை எங்கே கொண்டு போய் வைப்பது ? கல்கியில் தலித்துகளுக்கு எதிராக எழுதி விட்டார் என்பதற்காக இந்தச் சிறுகதையைக் குப்பை என்று பொய் சொல்ல முடியுமா ?
இந்தப் பிரச்சினை பற்றி உலக அளவில் ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன.


உதாரணமாக , ரிச்சர்ட் வாக்னர் ஒரு யூத வெறுப்பாளராக இருந்தவர். அவர்தான் ஹிட்லரின் ஆதர்சம். ஆனால் வாக்னரின் இசை , மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் உச்சங்களில் ஒன்று. இதற்கு என்ன செய்வது ? வாக்னர் யூத வெறுப்பாளராக இருந்தார் என்பதால் அவர் இசையைக் கேட்க மாட்டேன் என்றால் நஷ்டம் வாக்னருக்கு அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல. 2002- இல் Impac விருது பெற்ற Michel Houellebecq என்ற பிரமாதமான ஃப்ரெஞ்ச் எழுத்தாளன் கூட ஒரு முஸ்லீம் வெறுப்பாளன்தான். அவனுடைய நாவல்களில் வரும் வில்லன் கதாபாத்திரங்களை வேண்டுமென்றே முஸ்லீம்களாக சித்தரிப்பான் வூல்பெக். ஐரோப்பாவில் நிலவி வரும் இஸ்லாமிய எதிர்ப்பில் ஈடுபடுபர்கள் ஒரு சிறுபான்மையினர்தான். எல்லா ஐரோப்பியர்களும் அப்படி அல்ல. அப்படிப் பட்ட இஸ்லாமிய எதிர்ப்பாளர்களில் ஒருவன்தான் மிஷெல் வூல்பெக். இப்போது ஃப்ரான்ஸில் வாழ்ந்தால் கொல்லப்படலாம் என்று அயர்லாந்தில் வசித்து வருகிறான். இஸ்லாமிய எதிர்ப்பாளன் என்பதற்காக அவனை நான் நிராகரித்து விட மாட்டேன்.

அடிப்படையில் சுஜாதா ஒரு மகத்தான படைப்பாளி. அதுதான் முக்கியம். அரசியல் காரணத்தைச் சொல்லி அவரை நிராகரித்தால் இழப்பு நமக்குத்தான்.


நன்றி : சாருநிவேதிதா

கமலும் நானும்






கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)
பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)


கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.


மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது.



ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).


சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.
ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது.



27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி
ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.
ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.


கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.
இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.
***
நன்றி : சாருநிவேதிதா