ஒரு தேவதையின் காதலனாய் வாழ்ந்தவன்

சனி, 2 ஆகஸ்ட், 2008

வழிகாட்டும் ஆஃப்கான் சகோதரிகள்


நாட்டை நிர்வகிப்பதற்கும், வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு பெண்களால் முடியாது என்ற கருத்தை ஆஃப்கான் சகோதரிகள் உடைத்தெறிந்துள்ளனர். இது ஆப்கானிஸ்தானில் நடத்தபட்ட ஆய்வு முடிவுகள் தெளிவாக உணர்த்தியுள்ளன.
ஆஃப்கானிஸ்தான் உட்பட எல்லா நாடுகளிலும் தேச வளர்ச்சியில் பெண்கள் பங்கேற்றால், அது நாட்டை விரைவில் பலவீனமாக்கிவிடும் என்று பெரும்பாலான அரசு கொள்கை வகுப்பாளர்களும், வளர்ச்சி அமைப்புகளும் கூறி வந்தன. இது நூறு சதவிகிதம் பொய் என்பது ஆய்வில் இருந்து நிரூபணமாகியுள்ளது.
இலாப நோக்கு இல்லாத ஆய்வு நிறுவனமான ரான்ட் (RAND) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இருந்து, பெண்களின் பங்கேற்பினால் சமுதாயத்தின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு அதிக வளர்ச்சி அடையும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்விற்கு தலைமையேற்றவரும், ரான்ட் அமைப்பின் மூத்த அரசியல் ஆய்வாளருமான செரியல் பெனார்ட் கூறுகையில், பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதுடன், அவர்களை முக்கிய பங்காற்ற அனுமதித்தால், அவர்களால் எவ்வித நெருக்கடியையும் சமாளிக்க முடியம். அத்துடன் பெண்களால் ஜனநாயகத்தை பலப்படுத்துவதுடன், வளர்ச்சி அடையவும், சமுதாயத்தை மேம்படுத்தவும் முடியும் என்று கூறினார்.
இந்த கருத்தை ரான்ட் நிறுவன ஆய்வாளர்கள் குளு குளு அறையில் இருந்து கொண்டோ, கற்பனையாகவோ கூறவில்லை. ரான்ட் நிறுவன ஆய்வாளர்கள் கடந்த பத்தாண்டுகளாக மதவாதிகளின் கொடுங்கோன்மை, அந்நிய படையெடுப்பால் பாதிக்கப்பட்டு, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆஃப்கானிஸ்தானின் மறு சீரமைப்பில் பெண்களின் பங்கேற்பை ஆய்வு செய்தனர். ஆஃப்கானிஸ்தானத்தில் பெண்கள் தேர்தலில் வாக்களித்தனர்.
அவர்கள் அரசு நிர்வாகத்தை திறமையாக நிர்வகிக்கின்றனர். லஞ்சத்துக்கு எதிராகவும், குறிப்பிட்ட பகுதிகளை ஆயுத பலத்தால் ஆட்டிப்படைக்கும் உள்நாட்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிகாக குரல் கொடுக்கின்றனர். அத்துடன் பெண்கள் மாநில ஆளுநர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். அதிக பழைமையை போற்றி பாதுகாக்கும் பகுதிகளிலும் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
ஆஃப்கானிஸ்தானத்தில் 2002 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, பழமைவாதிகள் விமர்சனம் செய்தாலும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெண்கள் அதிக அளவு பொதுவாழ்க்கையில் ஈடுபட துவங்கி உள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் மக்களின் சமூக - பொருளாதார முன்னேற்றம், தினசரி வாழ்நிலையில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மற்றவர்களுடன் பெண்களும் தலைமை தாங்குகின்றனர். அத்துடன் முக்கியமான ராணுவ நடவடிக்கைக்கு தேவையான தகவல்களை சர்வதேச பாதுகாப்பு படைகளுக்கு வழங்குகின்றனர்.
ஆஃப்கானிஸ்தானத்தில் பெண்களின் பங்கு பற்றி தலைமை ஆய்வாளர் செரியல் பெனார்ட் கூறுகையில், தேச மறுகட்டமைப்புக்கு ஆரம்ப காலத்திலேயே பெண்களை ஈடுபடுத்தியதால்தான், விரைவாக மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் மறு கட்டமைப்புக்கான கொள்கை வகுப்பாளர்களும், ஆஃப்கானின் மறு சீரமைப்பில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களும், ஆப்கானிஸ்தானின் மறு சீரமைப்பு பணியில் பெண்களை ஈடுபடுத்துவது ஆபத்தானது, தற்சமயம் இவர்களை ஈடுபடுத்த வேண்டாம். பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறின.
ஆஃப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வுகளும், கருத்துக் கணிப்புகளும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவு தெரிவித்தன. அத்துடன் பெண்கள் பொது வாழ்க்கையில் பங்கேற்பது ஆபத்து என்பதை விட, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அதிக பயனளிக்கும் என்று தெரிவித்தன என்று செரியல் பெனார்ட் தெரிவித்தார்.
இதில் இருந்து பழமையில் ஊறி, மதத்தின் பெயரால் பெண்களை இழி பிறவிகளாக கருதி கொடுமைப்படுத்தும் கொடுங்கோலர்கள் நிறைந்திருந்த ஆஃப்கானிஸ்தான் போன்ற நாட்டிலேயே, நாட்டின், சமுதாய மேம்பாட்டில் பெண்களை ஈடுபடுத்தினால், முழுமையான பலன் கிடைக்கும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: